#SaveAravalli வட இந்தியாவில் பாஜகவை காவு வாங்க போகும் ‘ஆரவல்லி மலை’.. என்ன பிரச்சனை?

Published On:

| By Mathi

SaveAravalli

#SaveAravalli என்ற ஹேஷ்டேக் சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்படுகிறது. தமிழ்நாட்டில் ஜல்லிக்கட்டு உரிமையை மீட்டெடுக்க தன்னெழுச்சியாக லட்சக்கணக்கான தமிழர்கள் அணிதிரண்டதைப் போல ஆரவல்லி மலைகளைப் பாதுக்காக்க டெல்லி முதல் குஜராத் வரையிலான மாநில மக்கள் பெருந்திரளாக திரண்டு போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். இது மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு மிக கடுமையான நெருக்கடியை உருவாக்கி உள்ளது.



ஆரவல்லி மலை எங்கே இருக்கிறது?

ADVERTISEMENT

வட இந்தியாவின் நுரையீரல் என்றழைக்கப்படும் ஆரவல்லி மலைத்தொடர் (Aravalli Range) மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். டெல்லி, ஹரியானா, ராஜஸ்தான் மற்றும் குஜராத் ஆகிய மாநிலங்களில் 692 கி.மீ நீளத்திற்குப் பரவியுள்ளது.

ஆரவல்லி மலையின் சிறப்பு என்ன?

ADVERTISEMENT

ஆரவல்லி மலைத்தொடர் தார் பாலைவனம் விரிவடைதலைத் தடுக்கும் ஒரு இயற்கை அரண். தார் பாலைவனத்தின் புழுதிப் புயல்களைத் தடுக்கக் கூடியது.

சம்பல், சபர்மதி, லூனி நதிகளின் பிறப்பிடமாக உள்ளது.

ADVERTISEMENT

இம்மலைத்தொடர் மணற்கல் (Sandstone), சுண்ணாம்புக் கல் (Limestone), மார்பிள், கிரானைட் போன்ற வளங்களாலும், துத்தநாகம், செம்பு, தங்கம், டங்ஸ்டன் போன்ற கனிம வளங்களாலும் நிரம்பியது.

ஆரவல்லி மலைத் தொடர் பிரச்சனை என்ன?

2025 நவம்பர் மாதம் ஆரவல்லி மலைத் தொடர்கள் குறித்த வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புதான் தற்போதைய பிரச்சனைக்கு அடிப்படை.

சட்டரீதியான ஆரவல்லி மலைகள் என்பவை 100 மீட்டருக்கு மேல் உயரம் கொண்டவை என மத்தியில் ஆளும் பாஜக அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் தெரிவித்த பதிலை உச்சநீதிமன்றம் ஏற்று தீர்ப்பளித்தது.

உச்சநீதிமன்ற தீர்ப்பால் என்ன பாதிப்பு?

ஆரவல்லி மலைத் தொடரில் உள்ள குன்றுகளில் 80%-க்கும் அதிகமானவை மத்திய அரசின் வரையறுக்குட்படாதவை. இதனால் ஆரவல்லி மலைத் தொடரின் பெரும்பகுதிகளில் சட்டவிரோத சுரங்கங்கள் கொடி கட்டிப் பறக்கும்; கட்டுமானங்கள் விஸ்வரூபம் எடுக்கும். ஆரவல்லி மலைத் தொடரே எதிர்காலத்தில் இல்லாமல் பேரழிவை சந்திக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

ஆரவல்லி மலைகள் இல்லாத நிலையில் தார் பாலைவனம் விரிவடையும்; நிலத்தரி நீர் மட்டம் வெகுவாக குறையும்; வட இந்திய நிலத்தின் வெப்பநிலை அதிகரிக்கும். இதனால் வட இந்தியாவில் மோசமடைந்த காற்றின் தரம் மேலும் நாசமாகும். ஆரவல்லி மலைத் தொடரை வாழ்விடமாகக் கொண்ட உயிரினங்கள் அழிந்து போகும்.

ஆரவல்லி மலையைப் பாதுகாக்க நடக்கும் போராட்டங்கள் என்ன?

ஆரவல்லி மலையை காவு கொடுக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராகப் பொதுமக்கள், சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் மற்றும் சமூக அமைப்புகள் லட்சக்கணக்கில் ஒன்று திரண்டு எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர். “#SaveAravalli” என்ற ஹேஷ்டேக் சமூக ஊடகங்களில் பகிரப்படுகின்றன. டெல்லி, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் மனிதச் சங்கிலிகள் மற்றும் பேரணிகள் நடத்தப்பட்டு வருகின்றன. பாஜக ஆதரவு ஊடகங்களும் கூட ஆரவல்லி மலையை பாதுகாக்க குரல் கொடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share