“கூட்டு நடவடிக்கைக் குழு” : அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்! – முழு விவரம்!

Published On:

| By Kavi

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் தலைமையில் கடந்த 25.02.2025 அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. Resolution passed at all-party meeting

அதில்,  தொகுதி மறுசீரமைப்பு  தொடர்பாக அனைத்துக் கட்சி கூட்டத்தை நடத்த முடிவெடுக்கப்பட்டது. தொடர்ந்து, தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யப்பட்ட அனைத்துக் கட்சிகளுக்கும் முதல்வர் ஸ்டாலின் கடிதம் அனுப்பினார்.

அதன்படி இன்று (மார்ச் 5) தலைமை செயலகத்தில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தின்போது, முதல்வர் ஸ்டாலின் தொடக்க உரை ஆற்றினார்.

“அனைத்து வளர்ச்சிக் குறியீடுகளிலும், முதன்மை மாநிலமாக இருக்கக்கூடிய தமிழ்நாட்டில் தற்போது மொத்தம் 39 நாடாளுமன்றத் தொகுதிகள் இருக்கின்ற சூழ்நிலையில், தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளதோடு, அவ்வாறு குறைக்கப்படும் நிலையில், தமிழ்நாடு மிகக் கடுமையாக பாதிக்கப்படும்.

ஒன்றிய அரசு 2026-ஆம் ஆண்டில், மக்களவைத் தொகுதிகளின் எண்ணிக்கையை மறுசீரமைப்பு செய்ய உள்ளது. பொதுவாக தொகுதி மறுசீரமைப்பு என்பது மக்கள் தொகை கணக்கீட்டினை அடிப்படையாகக் கொண்டுதான் செய்யப்படுகிறது.

பல பத்தாண்டுகளாக வெற்றிகரமான குடும்பக் கட்டுப்பாடு திட்டங்கள், பெண்கள் கல்வி மற்றும் சுகாதார முன்முயற்சிகள் மூலமாக நம் மாநிலத்தின் மக்கள் தொகை குறைவாக இருக்கின்ற காரணத்தினால், தமிழ்நாட்டில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கை தற்போதுள்ள மக்கள் தொகையின் அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்யப்பட்டால் நமது பிரதிநிதித்துவம் குறையும்.

இப்போது நாடு முழுவதும் இருக்கின்ற மக்கள் தொகையின் அடிப்படையில் நாடாளுமன்றத் தொகுதிகளின் எண்ணிக்கையை (543) உயர்த்தாமல், தொகுதிகளைப் பிரித்தால், தமிழ்நாடு 8 மக்களவைத் தொகுதிகளை இழக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

அதாவது, இனி தமிழ்நாட்டுக்கு 39 எம்.பி.க்கள் இருக்கமாட்டார்கள்; 31 எம்.பி.க்கள் மட்டுமே இருப்பார்கள். இன்னொரு முறையில் நாட்டில் ஒட்டுமொத்த எம்.பி.க்கள் எண்ணிக்கையை உயர்த்தி, தற்போதைய மக்கள் தொகை அடிப்படையில் அதற்கேற்ப பிரித்தாலும், தமிழ்நாட்டிற்கு இழப்புதான் ஏற்படும்.

தமிழ்நாட்டிற்கான பிரதிநிதித்துவம் நாடாளுமன்றத்தில் குறைக்கப்பட்டால், அங்கு தமிழ்நாட்டினுடைய குரல் எதிரொலிக்காமல் போய்விடும்.

இது வெறும் உறுப்பினர்களின் எண்ணிக்கையைப் பற்றிய கவலை மட்டுமல்ல; தமிழ்நாட்டின் உரிமையைச் சார்ந்தது.

தமிழ்நாடு மட்டுமல்ல; தென்னிந்திய மாநிலங்கள் அனைத்துமே எதிர்கொள்ளவிருக்கும் இந்த முக்கியமான பிரச்சினையில், தமிழ்நாட்டைப் பொறுத்தவரை, அனைத்து அரசியல் கட்சிகளையும், தலைவர்களையும் ஒன்றிணைக்க முதற்கட்டமாக இந்தக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில் அனைத்துக் கட்சிகளும், கட்சி அரசியலை எல்லாம் மறந்து, அரசியலைக் கடந்து இந்த விவாதத்தில் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும்” என்று கேட்டுக்கொண்டார்.

தொடர்ந்து, கூட்டத்தில் நிறைவேற்றப்பட வேண்டிய தீர்மானங்களை முன்மொழிந்தார்.

இதையடுத்து  பல்வேறு கட்சிகளைச் சார்ந்த பிரதிநிதிகள்  தங்களது கருத்துகளை எடுத்து வைத்தனர்.

தீர்மானம் நிறைவேற்றம் Resolution passed at all-party meeting

கூட்டத்தின் இறுதியில்,

இந்திய நாட்டின் கூட்டாட்சி அமைப்பிற்கும், தமிழ்நாடு மற்றும் தென்னிந்திய மாநிலங்களின் அரசியல் பிரதிநிதித்துவ உரிமைக்கும் மிகப்பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடிய மக்கள் தொகை அடிப்படையிலான “நாடாளுமன்றத் தொகுதி மறு சீரமைப்பை” இந்த அனைத்துக் கட்சிக் கூட்டம் ஒருமனதாகக் கடுமையாக எதிர்க்கிறது.

நாட்டின் நலனுக்காக மக்கள் தொகை கட்டுப்பாட்டை முனைப்பாகச் செயல்படுத்திய ஒரே காரணத்திற்காக, தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் நாடாளுமன்றப் பிரதிநிதித்துவம் குறைக்கப்படுவது முற்றிலும் நியாயமற்றது. இந்த வகையில், மக்கள் தொகை கட்டுப்பாட்டை அனைத்து மாநிலங்களும் முன்னெடுப்பதை ஊக்குவிக்கும் வகையில், 1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையிலேயே நாடாளுமன்றத் தொகுதிகள் தொடர்ந்து வரையறுக்கப்படும் என்று கடந்த 2000-ஆம் ஆண்டில் அன்றைய பிரதமர் உறுதி அளித்தவாறே, தற்போதும் இந்த வரையறை 2026-இல் இருந்து மேலும் 30 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்படும் என்று பிரதமர் நாடாளுமன்றத்தில் உறுதி அளிக்க வேண்டும்., அரசமைப்பு சட்டத்தில் அதற்குரிய சட்டத் திருத்தமும் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட வேண்டும்.

நாடாளுமன்றத்தில் தற்போதைய உறுப்பினர்களின் எண்ணிக்கை உயர்த்தப்படும் பட்சத்தில், “1971-ஆம் ஆண்டு மக்கள் தொகை அடிப்படையில் தற்பொழுது நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் மாநிலங்களுக்கிடையே எந்த விகிதத்தில் தொகுதிகளின் எண்ணிக்கை உள்ளனவோ, அதே விகிதத்தில் தமிழ்நாடு உள்ளிட்ட தென் மாநிலங்களின் தொகுதிகளின் எண்ணிக்கையை உயர்த்துவதற்குத் தேவையான அரசியல் சட்டத்திருத்தத்தை மேற்கொள்ள வேண்டும்.

தொகுதி மறுசீரமைப்பின் காரணமாக, நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் தற்போதைய பிரதிநிதித்துவ சதவீதமான 7.18 என்பதை எக்காரணம் கொண்டும் ஒன்றிய அரசு மாற்றம் செய்யக் கூடாது.

தொகுதி மறுசீரமைப்புக்கு தமிழ்நாடு எதிரானதாக இல்லை என்றும், அதேசமயம் கடந்த ஐம்பதாண்டுகளாக சமூக, பொருளாதார நலத்திட்டங்களைச் சிறப்புற  செயல்படுத்தியதற்கான தண்டனையாகத் தொகுதி மறுசீரமைப்பு அமைந்துவிடக் கூடாது.

இக்கோரிக்கைளைத் தமிழ்நாட்டின் குறைந்தபட்ச கோரிக்கைகளாக அனைத்துக் கட்சிக் கூட்டம் முன்வைக்கிறது.

இக்கோரிக்கைளையும், அவை சார்ந்த போராட்டத்தை முன்னெடுத்துச் செல்லவும், மக்கள் மத்தியில் இப்பிரச்சினை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்திடவும், தமிழ்நாடு உள்ளிட்ட தென்மாநிலங்களில் இருந்து நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட கட்சிகளின் பிரதிநிதிகள் அடங்கிய “கூட்டு நடவடிக்கைக் குழு” ஒன்றை அமைத்திடவும், அதற்கான முறையான அழைப்பை மேற்படி கட்சிகளுக்கு அனுப்பி வைக்கவும் இக்கூட்டம் தீர்மானிக்கிறது என்று தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இதையடுத்து நிதியமைச்ச்ர் தங்கம் தென்னரசு நன்றி தெரிவித்து பேசினார்.

கலந்துகொண்டவர்கள் யார் யார்?

இக்கூட்டத்தில் நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன்,

துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,

நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் கே.என்.நேரு,

நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னாசு ஆகியோர் கலந்து கொண்டனர்.

இக்கூட்டத்தில் மூத்த தலைவர்களான திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆர்.எஸ்.பாரதி, திரு.பி.வில்சன்,

அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் டி.ஜெயக்குமார், இன்பதுரை,

இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் கு.செல்வப்பெருந்தகை, செ.ராஜேஷ்குமார்,

பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் அன்புமணி ராமதாஸ், எஸ்.பி.வெங்கடேஷ்வரன்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் திருமாவளவன், ரவிக்குமார்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் முத்தரசன், நா.பெரியசாமி.

இந்திய கம்யூனிஸ்ட் (மார்க்சிஸ்ட்) கட்சி சார்பில் சண்முகம், சச்சிதானந்தம்,

மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் வைகோ, மு.செந்தில் அதிபன்,

மனிதநேய மக்கள் கட்சி சார்பில் முனைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா,

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி சார்பில் ஈஸ்வரன்,

 தமிழக வாழ்வுரிமை கட்சி சார்பில் வேல்முருகன்,

இந்திய யூனியன் முஸ்லிம் கட்சி சார்பில் காதர் மொகிதீன்,

புரட்சி பாரதம் கட்சி சார்பில் ஜெகன்மூர்த்தி,

மக்கள் நீதி மய்யம் சார்பில் கமல்ஹாசன், அருணாச்சலம்

தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பில் பார்த்தசாரதி, டாக்டர் வி.இளங்கோவன்,

மனிதநேய ஜனநாயக கட்சியின் சார்பில் தமிமுன்அன்சாரி,

இந்திய குடியரசுக் கட்சியின் சார்பில் செ.கு.தமிழரசன்,

முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் கருணாஸ்,

கொங்கு இளைஞர் பேரவையின் சார்பில் உ.தனியரசு,

சமத்துவ மக்கள் கழகத்தின் சார்பில் எர்ணாவூர் வ.நாராயணன்,

அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியின் சார்பில் கதிரவன், கர்ணன்,

அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் செந்தமிழன்,

இந்திய ஜனநாயக கட்சியின் சார்பில் முத்தமிழ் செல்வன்,

தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் ஆனந்த்,

அனைத்திந்திய மூவேந்தர் முன்னணி கழகத்தின் சார்பில் பாண்டியன்,

பெருந்தலைவர் மக்கள் கட்சியின் சார்பில் என்.ஆர்.தனபாலன்,

மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஸ்ரீதர் வாண்டையார்,

 தமிழ்நாடு விவசாயிகள்-தொழிலாளர்கள் கட்சியின் சார்பில் பொன்குமார்,

 ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் வசீகரன்,

அகில இந்திய பாட்டாளி முன்னேற்றக் கட்சி (வன்னியர் கூட்டமைப்பு) சார்பில் ராமமூர்த்தி,

 தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஜான் பாண்டியன்,

பகுஜன் சமாஜ் கட்சியின் சார்பில் ஆனந்தன்,

ஆதித்தமிழர் பேரவையின் சார்பில் அதியமான்,

 எஸ்.டி.பி.ஐ. சார்பில் நெல்லை முபாரக்,

சமதா கட்சியின் சார்பில்  மணிவண்ணன்,

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (எம்.எல்) விடுதலை சார்பில் பழ.ஆசைத்தம்பி,

தமிழ்ப் புலிகள் கட்சி சார்பில் நாகை.திருவள்ளுவன்.

பசும்பொன் தேசிய கழகத்தின் சார்பில்  ஜோதிமுத்துராமலிங்கம்,

கலப்பை மக்கள் இயக்கம் சார்பில் செல்வகுமார்,

AIMIM சார்பில் வக்கில் அகமது,

இந்திய தேசிய லீக் சார்பில் எம்.பஷீர் அகமது.

ஆதித்தமிழர் கட்சி சார்பில் ஜக்கையன்,

புதிய திராவிடர் கழகம் சார்பில் பராஜ்கவுண்டர்,

மக்கள் விடுதலை கட்சி சார்பில் முருகவேல் ராஜன்,

தமிழக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் கே.எம்.ஷெரீப்,

மண்ணின் மைந்தர்கள் கழகம் சார்பில்  ஆ.சா.செல்வராஜ்,

அகில இந்திய ஜனநாயக மக்கள் கட்சி சார்பில் வி.எஸ்.ஐசக் அப்பா,

அண்ணா எம்.ஜி.ஆர். திராவிட மக்கள் கழகம் சார்பில் முத்துராமன் சிங்கப் பெருமான்,

மதச்சார்பற்ற ஜனதா தளம் சார்பில் பக்ருதின் அலி அகமது,

தமிழ் தாயக மக்கள் முன்னேற்றக் கட்சி சார்பில் முகமது இலியாஸ்,

தேசிய முன்னாள் இராணுவ வீரர்கள் கட்சி சார்பில் கரேஷ்பாபு,

தமிழ்நாடு இளைஞர் கட்சி சார்பில் காமேஷ் நாராயணன்,

தமிழக முற்போக்கு மக்கள் கட்சி சார்பில் சக்திவேல்,

தேசிய மக்கள் சக்தி கட்சி சார்பில் எம்.எல்.ரவி,

ராஷ்டிய லோக் தள் கட்சி சார்பில் இரா.காந்தி சங்கர்,

அகில இந்திய காந்தி காமராஜ் காங்கிரஸ் சார்பில் சக்கி முத்து,

காமராஜர் தேசிய காங்கிரஸ் சார்பில் முரளி என 50க்கும் மேற்பட்ட கட்சித் தலைவர்கள் கலந்துகொண்டனர். Resolution passed at all-party meeting

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share