கேரள மாநிலம் கொச்சியில் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR) மற்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிராக நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் ஆவேசமாக ‘ஆசாதி.. ஆசாதி’ என முழக்கமிட்ட வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.
வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்த நடவடிக்கைக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், கேரள மாநிலம் கொச்சியில் காக்ரோச் ஜனதா கட்சி (CJP) சார்பில் இன்று (நவ. 7) நடைபெற்ற போராட்டத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பங்கேற்றார்.
கொச்சி மரைன் டிரைவ் பகுதியில் தொடங்கிய பேரணி ராஜேந்திர மைதானம் வரை நடைபெற்றது. இதில் சுமார் 500 பேர் பங்கேற்றனர். தேசியக் கொடிகளை ஏந்தியபடி சென்ற போராட்டக்காரர்கள், SIR நடவடிக்கையை ரத்து செய்ய வேண்டும் என்றும் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பதவி விலக வேண்டும் என்றும் முழக்கமிட்டனர்.
இந்தப் போராட்டத்தில் திரண்டிருந்தவர்களுடன் சேர்ந்து நடிகர் பிரகாஷ் ராஜ், தனது குரலை உயர்த்தி ‘ஆசாதி.. ஆசாதி’ (விடுதலை.. விடுதலை) என ஆவேசமாக முழக்கமிட்டார். அவர் முழக்கமிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இந்தப் பேரணியில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கேரள மாநிலத் தலைவர் சிந்தா ஜெரோமும் பங்கேற்றார். காக்ரோச் ஜனதா கட்சியின் நிறுவனர் அபிஜித் திப்கேவும் இந்தப் போராட்டத்தில் பங்கேற்றார்.
முன்னதாக கொச்சி விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டில் சுதந்திரமான, பாரபட்சமற்ற தேர்தல் நடைமுறை உறுதி செய்யப்படும் வரை தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமாருக்கு எதிரான போராட்டம் தொடரும் என்றார் அபிஜித் திப்கே.
மேலும், ஞானேஷ் குமார் தலைமையில் நடைபெறும் தேர்தல்களை நம்ப முடியாது என்றும், ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சிக்குச் சாதகமாகத் தேர்தல்கள் நடத்தப்படுவதாகவும் அவர் குற்றம்சாட்டினார்.
டெல்லி ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்திய காக்ரோச் ஜனதா கட்சி நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதைத் தொடர்ந்து, அந்த அமைப்பு தற்போது கேரளாவிலும் போராட்டத்தை முன்னெடுத்துள்ளது.










