மாநில உரிமைகள் குறித்து ஆராய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குரியன் குழுவை கலைக்க காரணம் கண்டுபிடித்தவர்களுக்கு “நோபல் பரிசுதான்” தர வேண்டும்; அந்த அளவுக்கு அபத்தமாக காரணம் சொல்லி இருக்கின்றனர் என்று திராவிடர் விடுதலை கழக பொதுச்செயலாளர் விடுதலை ராசேந்திரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக விடுதலை க. ராசேந்திரன் வெளியிட்ட அறிக்கை: மாநில உரிமைகள் குறித்து ஆராய திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்ட குரியன் குழுவை கலைத்து தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. மிகவும் அற்பத்தனமான நடவடிக்கை ஆகும். இது வன்மையாக கண்டனத்துக்குரியது.
திமுக ஆட்சியில் நியமிக்கப்பட்டது என்ற ஒரே காரணத்துக்காக மாநில உரிமைகளே தங்களுக்கு தேவை இல்லை என்று காட்டுவது போல ஒன்றிய ஆட்சியை மகிழ்விக்கும் இந்த முடிவை தவெக ஆட்சி எடுத்திருக்கிறது.
இந்தக் குழுவை கலைப்பதற்கு காரணம் கண்டுபிடித்து இருக்கிற “அறிவாளிகளுக்”கு நோபல் பரிசு தான் தர வேண்டும். அதாவது இந்த குழுவுக்கு சட்ட அங்கீகாரம் இல்லை என்று கூறி தமிழ்நாடு அரசின் சட்ட ஆணையத்திடம் குழுவின் பரிந்துரைகளை ஒப்படைத்து இருக்கிறார்கள். அந்த சட்ட ஆணையமே சட்ட அங்கீகாரம் பெற்றதில்லை என்பது கூட இந்த அதிமேதாவி ஆட்சிக்கு தெரியவில்லை.
ஒன்றிய பாஜக ஆட்சி மாநில உரிமைகளை படிப்படியாக பறித்து ஒற்றை ஆட்சி நோக்கி நாட்டை கொண்டு போகும் நிலையில், இந்த ஆணையத்தின் செயல்பாடு எவ்வளவு முக்கியத்துவம் பெறுகிறது என்பதை புரிந்து கொள்வதற்கு அரசியல் பக்குவம் வேண்டும். இந்த ஆட்சியிடம் அதை எதிர்பார்க்க முடியாது.
தமிழ்நாட்டில் சமூக நீதி ஆய்வு மையம் ஒன்றை அமைக்கப் போவதாக கடந்த அக்டோபர்-29ஆம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முடிவு எடுத்திருக்கிறார்கள். இந்த ஆய்வையும் சட்ட ஆணையத்திடமே ஒப்படைத்து இருக்கலாமே; எதற்காக வேறு ஒரு ஆணையம்?
இதிலிருந்து இவர்கள் இந்தக் குழுவை கலைப்பதற்கு காரணம் அப்பட்டமான கட்சி அரசியல் என்பது பச்சையாக தெரிகிறது.
சமூக நீதிக்கு குழி பறிக்கும் ஒன்றிய ஆட்சியின் அண்மைக்கால செயல்பாடுகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்காமல் விஜய் ஆட்சி குறட்டை விட்டு தூங்குகிறது.
ஒன்றிய அரசு பணிகளுக்கு விண்ணப்பிக்கும் பிற்படுத்தப்பட்டோருக்கு கிரிமிலேயர் என்ற வருமான வரம்பை 1993ல் அறிமுகப்படுத்திய போது பெற்றோரின் மாத ஊதியம் மற்றும் விவசாயம் மூலம் வரும் வரவு ஆகியவற்றை வருமான வரம்பில் சேர்க்கக்கூடாது என்று அறிவிக்கப்பட்டது.
இது தொடர்பான வழக்கில் ஒன்றிய ஆட்சி கிரிமிலேயரில் மாத ஊதியத்தையும் விவசாய வருமானத்தையும் சேர்க்க வேண்டும் என்று சமூக நீதிக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் வாதாடியது. நவ-06 அன்று உச்சநீதிமன்றம் ஒன்றிய ஆட்சியின் வாதத்தை நிராகரித்திருக்கிறது.
இதேபோல் பல்கலைக்கழகங்களில் தலித் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு எதிராக இழைக்கப்படும் பாகுபாடுகள் தண்டனைக்குரிய குற்றம் என்று பல்கலைக்கழக மானிய க்குழு விதிகளை திருத்தியது. பார்ப்பன மாணவர்கள் இதை கடுமையாக எதிர்த்து வட மாநிலங்களில் வீதிகளில் வந்து போராடியதோடு தங்களுக்கு எதிராகவும் பாகுபாடு காட்டப்படுகிறது என்ற பச்சைப் பொய்யைக் கூறி இந்த விதியை நீக்க வேண்டும் என்றார்கள் .
இப்போது பார்ப்பன உயர்ஜாதி பிரிவினரை திருப்திப்படுத்த இந்த விதியை திரும்ப பெற ஒன்றிய ஆட்சி முடிவெடுத்து இருக்கிறது.
திராவிட மாடல் ஆட்சி நடந்திருக்கும் என்று சொன்னால் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உடனடியாக இதற்கான கண்டனக் குரலை எழுப்பி இருந்திருப்பார் என்பதை கடந்த கால வரலாறுகள் உணர்த்துகின்றன.
ஆனால் இன்றைய தவெக ஆட்சி இதற்கெல்லாம் வாய் திறந்து ஒரு கண்டனத்தையும் தெரிவிப்பதில்லை. அதே நேரத்தில் மாநில உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் அமைப்புகளை கலைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இன்றைய அரசியல் சூழலில் மாநிலங்களுக்கான உரிமை முழக்கம் இந்துத்துவ எதிர்ப்பையும் சமூக நீதி பாதுகாப்பையும் உள்ளடக்கி இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் முடிவுகளை சில சோதிடர்களும் ஒன்றிய ஆட்சியின் கைப்பாவையான சில அதிகாரிகளும் எடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.
இந்த ஆட்சி மாநில உரிமைகளுக்கான குழுவை கலைத்திருப்பதன் வழியாக மாநில உரிமைகளே கலைத்துப் போட்டு இருக்கிறது. இவ்வாறு விடுதலை க. ராசேந்திரன் தெரிவித்துள்ளார்.










