இந்தியா சுதந்திரம் பெற்று 80 ஆண்டுகளாகியும் ஆங்கிலேயர்களின் மொழிக்கு நாம் இன்னும் அடிமைகளாக இருப்பது ஏன் என்று அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் சவுத்ரி கேள்வி எழுப்பியுள்ளார்.
அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதி கவுதம் சவுத்ரி (Justice Gautam Chowdhary) நவம்பர் 8-ஆம் தேதி ஓய்வுபெறுகிறார். இதையொட்டி அவருக்கு நவம்பர் 6-ஆம் தேதி நடைபெற்ற பிரியாவிடை நிகழ்ச்சியில் இந்தியில் உரையாற்றினார். அப்போது ஆங்கில மொழியின் ஆதிக்கம் குறித்து அவர் பேசிய கருத்துகள் கவனம் பெற்றுள்ளன.

300 ஆண்டுகள் ஆண்டவர்களின் மொழிக்கு அடிமைகளாக இருப்பதா?
நீதிபதி கவுதம் சவுத்ரி பேசுகையில், “ஆங்கிலேயர்களிடமிருந்து அரசியலமைப்பு ரீதியாகவும், நிலப்பரப்பு ரீதியாகவும் நாம் சுதந்திரம் பெற்றுவிட்டோம். கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கடந்துவிட்டன. ஆனால், ஆங்கில மொழியிலிருந்து இன்னும் நாம் விடுதலை பெறவில்லை.
300 ஆண்டுகள் நம்மை ஆட்சி செய்தவர்களின் மொழிக்கு, 80 ஆண்டுகளுக்குப் பிறகும் நாம் ஏன் அடிமைகளாக இருக்கிறோம்? ஒவ்வொரு இந்தியரும் சிந்திக்க வேண்டிய கேள்வி இது (Why, after 80 years, do we remain subservient to the language of those who ruled over us for 300 years?) என்றார்.
ஆங்கிலம் வெளிநாட்டிலிருந்து வந்த சித்தி
தொடர்ந்து பேசிய நீதிபதி கவுதம் சவுத்ரி, “நான் இந்தி மொழிக்காகப் பேசுவதால் மற்ற மொழிகளுக்கு எதிரானவன் என்ற எண்ணம் ஏற்படலாம். ஆனால், எந்த மொழியின் மீதும் எனக்கு வெறுப்பு இல்லை.
மற்ற மொழிகள் அனைத்தையும் நமது சித்திகளாகக் கருதலாம். ஆங்கிலத்தை வெளிநாட்டிலிருந்து வந்த சித்தியாகக் கருதலாம். சித்திகளுக்கு உரிய மரியாதை அளிப்பதில் எனக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை. ஆனால், நமது தாயாகிய இந்திய மொழி தாழ்வாக நடத்தப்படுவதைப் பார்க்கும்போது மிகுந்த வேதனையாக இருக்கிறது” என்றார்.
வங்கத்தில் வங்க மொழி.. குஜராத்தில் குஜராத்தி
நீதிமன்றங்களில் இந்திய மொழிகளைப் பயன்படுத்துவது குறித்துப் பேசிய அவர், “மேற்கு வங்கத்தில் நீதிமன்றத் தீர்ப்புகள் வங்க மொழியிலும், குஜராத்தில் குஜராத்தி மொழியிலும் வழங்கப்பட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்! இந்தி பேசும் மாநிலங்களில் இந்தி மொழியின் பயன்பாட்டை அதிகரிக்கலாம்” என்றார்.
மாவட்ட நீதிமன்றங்களில் இருந்து உயர்நீதிமன்ற நீதிபதிகளாகப் பதவி உயர்வு பெற்றவர்களை நோக்கியும் அவர் சில கேள்விகளை எழுப்பினார். “மாவட்ட நீதிமன்றங்களில் இந்தியில் தீர்ப்புகளை எழுதிய உங்களால், உயர்நீதிமன்றத்திலும் ஏன் இந்தியில் தீர்ப்புகளை எழுத முடியாது? உயர்நீதிமன்றத்திற்கு வந்துவிட்டால் தீர்ப்புகளையும் உத்தரவுகளையும் ஆங்கிலத்தில்தான் எழுத வேண்டும் என்று ஏன் நினைக்கிறீர்கள்? அதற்கு எந்தத் தடையும் இல்லை. ஆங்கிலத்தில் எழுதினால்தான் தீர்ப்புகள் அழகாக இருக்கும் என்ற எண்ணம் தவறானது. நமது கருத்துகளை இந்தியிலும் அதே அளவுக்குத் தெளிவாக வெளிப்படுத்த முடியும்” என்றார்.
21,000-க்கும் அதிகமான இந்தித் தீர்ப்புகள்
ஆங்கில மொழியின் ஆதிக்கம் குறித்து இவ்வாறு பேசிய நீதிபதி கவுதம் சவுத்ரி, நீதிமன்றத் தீர்ப்புகளை இந்தியில் வழங்குவதிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வந்துள்ளார். அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இடம்பெற்றுள்ள அவரைப் பற்றிய குறிப்புகளில், 2019-ஆம் ஆண்டு டிசம்பர் 12-ஆம் தேதி உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். 2021-ஆம் ஆண்டு மார்ச் 26-ஆம் தேதி நிரந்தர நீதிபதியாகப் பதவியேற்றார்.
2024-ஆம் ஆண்டு செப்டம்பர் 10-ஆம் தேதி நிலவரப்படி, அவர் 21,000-க்கும் அதிகமான தீர்ப்புகளை இந்தியில் வழங்கியுள்ளதாக உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ சுயவிவரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
2009-ஆம் ஆண்டு பாஜக வேட்பாளராகப் போட்டி
நீதிபதி கவுதம் சவுத்ரியின் அரசியல் பின்னணி குறித்த விவரங்களும் அதிகாரப்பூர்வ ஆவணங்களில் இடம்பெற்றுள்ளன. அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் தரவுகளின்படி, சமூகச் சீர்திருத்தம் மற்றும் சமூகப் பணிகளில் ஈடுபடும் நோக்கில் 2009-ஆம் ஆண்டு கவுசாம்பி மக்களவைத் தொகுதியில் அவர் போட்டியிட்டுள்ளார். இந்தியத் தேர்தல் ஆணையத்தின் 2009-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் முடிவுகளின்படி, உத்தரப் பிரதேசத்தின் கவுசாம்பி தொகுதியில் பாஜக வேட்பாளராகப் போட்டியிட்ட கவுதம் சவுத்ரி 30,475 வாக்குகளைப் பெற்று 4-ஆம் இடத்தைப் பிடித்தார். அந்தத் தேர்தலில் சமாஜ்வாதி கட்சியின் ஷைலேந்திர குமார் வெற்றி பெற்றார்.
இதன் பின்னர் வழக்கறிஞராகப் பணியாற்றிய கவுதம் சவுத்ரி, 2019-ஆம் ஆண்டு அலகாபாத் உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார்.
தாத்தாவுக்கு ஆங்கிலேயர் ஆட்சியில் ‘ராய் சாகிப்’ பட்டம்
நீதிபதி கவுதம் சவுத்ரியின் குடும்பப் பின்னணி குறித்தும் அலகாபாத் உயர்நீதிமன்றத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல்கள் இடம்பெற்றுள்ளன. அவரது தாத்தா ஷியாம் லாலுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்தில் ‘ராய் சாகிப் சவுத்ரி’ (Rai Sahab Chowdhary) என்ற பட்டம் வழங்கப்பட்டது. இந்தியா சுதந்திரம் பெற்ற பின்னர் அவர் 2 முறை சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
கவுதம் சவுத்ரியின் தந்தை சுன்னிலால், அலகாபாத் உயர்நீதிமன்ற வழக்கறிஞராகப் பணியாற்றியவர். உத்தரப் பிரதேச அரசுப் பணியாளர் தேர்வாணைய உறுப்பினராகவும் பின்னர் மாநிலங்களவை உறுப்பினராகவும் இருந்துள்ளார்.










