தீபாவளி கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சென்னையில் விடிய விடிய மழை பெய்து குளிர்வித்துள்ளது
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில், தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய கேரள கடலோர பகுதிகளின் மேல் சுமார் 0.9 கி.மீ. உயரத்தில் ஒரு வளிமண்டல சுழற்சி நிலவுகிறது என்றும் இதன் காரணமாக தமிழகத்தில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.
இந்த சூழலில் சென்னையில் அதிகாலை 3 மணி முதல் விடிய விடிய மழை வெளுத்து வாங்கியுள்ளது.
வேப்பேரி, கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், எழும்பூர், பூந்தமல்லி, பெரியமேடு, சென்ட்ரல் உள்ளிட்ட பகுதிகளில் காலை 6 மணி வரை மழை பெய்துள்ளது.
தற்போதும் பல்வேறு இடங்களில் லேசான மழை பெய்து வருகிறது.
இதற்கிடையே, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களிலும், காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னல், பலத்த காற்றுடன் கனமழையும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்பட சில இடங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது என்று வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.









