நூலகங்களுக்கான புத்தக பரிந்துரைகள்… நடந்தது என்ன? எழுத்தாளர்கள் அழகிய பெரியவன், விஜயசங்கர் விளக்கம்!

By Mathi

|

Published on 8 Nov 2026, 10:50 AM

Periyar Arivulagam Books

கோவை பெரியார் அறிவுலகம் நூலகத்தி வைக்கப்பட்ட புத்தகங்கள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு நூலகங்களுக்கான புத்தகப் பரிந்துரைகள் எவ்வாறு பெறப்பட்டன, நூல்கள் எந்த அடிப்படையில் தேர்வு செய்யப்பட்டன என்பது குறித்து எழுத்தாளர் அழகிய பெரியவன், மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர் ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.

அழகிரிய பெரியவன் தமது ஃபேஸ்புக் பக்கத்தில் எழுதி இருப்பதாவது: அகல் விளக்கு பதிப்பகம் திடீரென்று தமிழ் மக்களின் முன்னால் அறிவு விளக்கை ஏற்றி வைத்திருக்கிறது! மக்கள் எல்லாவற்றையும் மறந்துவிட்டு நூல்களைப் பற்றி பேசுகிறார்கள். ‘நூல்களைப்’ பற்றி பேசவேண்டும் என்பதுதான் என் ஆசை!

ADVERTISEMENT

கோவை, திருச்சி உள்ளிட்ட சிறப்பு நூலகங்களின் நூல் பரிந்துரை குழுவில் பெருமாள் முருகனைப் போல நானும் உறுப்பினராக இருந்தேன். சுமார் 135 பேர் உறுப்பினர்களாக இருந்து நூல்களைப் பரிந்துரைத்தோம். எல்லாமே வெளிப்படையாக நடந்தன. பரிந்துரைக்கான நூல்கள் கூகுள் ஷீட்டில் அனுப்பப்படும். அதில் பரிந்துரையைக் குறிப்பிட வேண்டும். எல்லாமே இணையத்தில் உள்ளன. எல்லாரும் பார்க்கலாம்.

நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியலில் திரிஷா விஜய் என்பவர் எழுதிய நூல் உட்பட அகல் விளக்கு பதிப்பகம் வெளியிட்டதாக பெருமாள் முருகன் குறிப்பிட்டிருக்கும் எந்த நூல்களும் வரவில்லை. நான், கடிதம், கவிதை, நாடகம், கட்டுரை ஆகிய பிரிவுகளில் நூல்களைப் பரிந்துரை செய்தேன். திரிஷா விஜய் நூல் கட்டுரை நூல் என்பதால் என்னிடம் வந்திருக்கும். ஆனால் அப்படி எதுவும் வரவில்லை.

ADVERTISEMENT

நாங்கள் பரிந்துரை செய்த நூல்களின் பட்டியல் எங்களுக்கு அனுப்பப்பட்டு உள்ளன. அதை நான் வெளியிடவும் தயாராக இருக்கிறேன். என்னைப் போலவே மற்ற பரிந்துரை உறுப்பினர்களுக்கும் அவரவர் பரிந்துரைத்த நூல்களின் பட்டியல் அனுப்பப்பட்டு இருக்கும். எனவே நூல் பரிந்துரை உறுப்பினர்களின் பட்டியலை வாங்கிப் பார்த்தாலேயே அகல் விளக்கு பதிப்பகத்தின் போலி நூல்கள் முன்பே பரிந்துரை செய்யப்பட்டு, கொள்முதல் செய்யப்பட்டனவா என்பது தெரிந்துவிடும்.

பரிந்துரைக்கப்பட்ட நூல்களை அப்படியே வாங்கவும் முடியாது. பரிந்துரைக்கப்பட்ட நூல்களை, நூல் தேர்வுக் குழு தேர்வு செய்யும். பின்னர் இறுதி படுத்தப்பட்ட நூல்களை கொள்முதல் குழு விலையை குறைத்துப் பேசி வாங்கும். இதை உயர்நிலைக் குழு கண்காணிக்கும். எனவே தவறு அதிகாரிகள் மட்டத்தில் நடந்திருக்கிறது என்பது தெளிவு.

ADVERTISEMENT

நூல்களைப் பரிந்துரை செய்த பணிக்காக எங்களுக்கு குறைந்த பட்ச மதிப்பூதியம் இந்த செப்டம்பர் மாதம் தான் வழங்கப்பட்டது. எப்போதுமே அரசு துறைகள் சார்ந்த பணிகளுக்கு நிதி எப்போது விடுவிக்கப் படுகிறதோ அப்போது தான் எல்லாவற்றுக்கும் கணக்கு நேர் செய்யப்படும். ஆனால் அகல் விளக்கு பதிப்பக போலி நூல்களுக்கு மட்டும் நூல் கொள்முதல் அரசாணையைப் போட்ட உடனே எப்படி கொடுத்திருக்க முடியும் என்ற கேள்வி எழுகிறது.

பெரியார் அறிவுலக இறுதிகட்ட பணிகள் கடந்த சில மாதங்களில் தான் நடைபெற்று திறக்கப்பட்டது. எனவே நடந்த முறைகேட்டை AI இல்லாத உண்மையான அரசாணை மற்றும் கடிதங்களின் ஆதாரங்களோடு வெளியிட்டு எல்லாருக்கும் தெளிவு படுத்த வேண்டும். குற்றம் சாட்டிவிட்டு கடந்து போகக் கூடாது. பெருமாள் முருகன் கட்டுரையை அரசியல் ஆதாயத்துக்காக மட்டும் பயன்படுத்தாமல், அவர் சொல்வதைப் போல குழு விசாரணை அமைக்க முன்வரவேண்டும்.

பெருமாள் முருகன் குறிப்பிடும் நூலாசிரியர் ‘பெயர்’களில் நூல்களை எழுதி வெளியிடும் எண்ணம் கடந்த ஆண்டு இறுதியிலேயே அகல் விளக்கு பதிப்பகத்துக்கு தோன்றியிருக்குமா என்ற எண்ணம் தான் எல்லாவற்றுக்கும் மேலாக எனக்குள்ளே எழுகிறது!

மூத்த பத்திரிகையாளர் ஆர். விஜயசங்கர்: கடந்த ஆண்டு டிசம்பர் 5 அன்று மீண்டும் ஒரு பரிந்துரைக் குழுவில் என் ஒப்புதலோடு நான் இணைக்கப்பட்டிருந்தேன். இது குறித்து அதே தேதியில் வெளியிடப்பட்ட அரசாணையில் கோயம்புத்தூர் பெரியார் அறிவுலகம், திருச்சிராப்பள்ளி காமராசர் அறிவுலகம், திருநெல்வேலி காயிதே மில்லத் அறிவுலகம் ஆகிய ஐந்து சிறப்பு நூலகங்களுக்கும், புதிதாகத் துவங்கப்படவுள்ள தென்காசி, இராணிப்பேட்டை, திருப்பத்தூர், காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி, மயிலாடு துறை ஆகிய ஆறு மாவட்டங்களில் அமையவுள்ள மாவட்ட மைய நூலகங்களுக்கும் நூல்கள் கொள்முதல் செய்வது பற்றியும் அதற்கான குழுக்கள் அமைப்பது பற்றியும் குறிப்பிடப்பட்டிருந்தது.

54 தலைப்புகளில் நூல்களை பரிந்துரை செய்வதற்காக 137 பேரைக் கொண்ட குழு இது. (விஜய்கள், திரிஷாக்கள், தாமரைகள் எழுதியதாகச் சொல்லப்படும் போலி நூல்களை இவர்களில் யாருமே தேர்வு செய்திருக்க மாட்டார்களென்கிற நம்பிக்கை எனக்கு இருக்கிறது. அனைவரும் பெருமதிப்பிற்குரிய ஆய்வாளர்கள், எழுத்தாளர்கள், துறை வல்லுநர்கள்.)

எனக்குக் கொடுக்கப்பட்ட தலைப்புகள் பத்திரிகையியல். வெகுஜனத் தொடர்பு, ஊடகம் மற்றும் பதிப்பு. இது தொடர்பாக இரு கூட்டங்களும் நடந்தன.

டிசம்பர் 15 அன்று மேற்கூறிய தலைப்புகளைச் சேர்ந்த 12465 புத்தகங்களைக் கொண்ட google sheet எங்களுக்கு அனுப்பப்பட்டது. அதிலிருந்து குறைந்தது ஆயிரம் புத்தகங்களைத் தேர்வு செய்யுமாறு நூலகத் துறை என்னிடம் கேட்டுக்கொண்டது.

மிகவும் கடுமையான பணி என்று சொல்லத் தேவையில்லை. ஒவ்வொரு நூலின் உள்ளடக்கம், பதிப்பாளரின் தகுதி, மதிப்புரை என்று கவனமாக ஆராய்ந்து நூல்களைத் தேர்வு செய்ய வேண்டியிருந்தது. வேறு சில வேலைகளும் இருந்ததால் பிப்ரவரி 14, 2026 வரை 43 நூல்களைத்தான் தேர்வு செய்திருந்தேன். கூடிய வரை விரைவில் பணியை முடிக்க வேண்டுமென்று வேண்டுகோள் விடுக்கப்பட்டது. மார்ச் 8 வாக்கில்தான் பணி முடிந்தது.

ஆக மார்ச் 8-க்குப் பிறகுதான் நான் பரிந்துரை செய்த நூல்கள் அடுத்த கட்டமாக 13 பேர் கொண்ட நூல் தேர்வுக் குழுவுக்குச் சென்று முன்னுரிமை பட்டியல் தயார் செய்யப்பட்டிருக்கும்.

அடுத்த கட்டமாக, நூல் தேர்வுக்குழு தேர்ந்தெடுத்த நூல்களின் விலைகளை 5 பேர் கொண்ட நூல்விலை பேச்சுவார்த்தைக் குழு இறுதி செய்திருக்கும்.
அடுத்து, இந்த நூல்களின் பட்டியலை 5 பேர் கொண்ட குழு கூர்ந்தாய்வு செய்து கொள்முதலுக்கு ஒப்புதல் அளித்திருக்கும். நான் பரிந்துரைத்த 1000 நூல்களைப் போலவே 54 தலைப்புகளில் பல்லாயிரக்கணக்கான நூல்கள் இதே பாதையில் சென்றிருக்கும்.

இதற்கெல்லாம் எவ்வளவு காலம் ஆனது என்று தெரியாது. ஆனால் மார்ச் மாதத்தில் தேர்தல் அறிவிப்பு வெளியாகிவிட்டது. நானும் அடுத்த வேலையை பார்க்கத் துவங்கிவிட்டேன்.

ஆட்சி மாற்றம் நிகழ்ந்தவுடன் பரிந்துரையெல்லாம் என்ன ஆனது என்று தெரியாது. கடந்த ஆகஸ்டு 8 அன்று நான் செய்த பணிக்கான சன்மானம் அளிப்பது தொடர்பாக ஒரு தகவல் வந்தது. (அது வெளியில் சொல்லிக்கொள்ளும் அளவுக்கு பெரிய தொகையெல்லாம் இல்லை. ஆனால் அது பிரச்சினையில்லை). கடைசியாக செப்டம்பர் 22 அன்று அந்தத் தொகை என் வங்கிக் கணக்கிற்கு வந்து சேர்ந்தது. மார்ச் மாதம் என் பணி முடிந்த பிறகு இத்தனை கட்டங்கள், procedures இருந்திருக்கின்றன. நடுவில் எப்போது என்ன நடந்தது என்பதை அரசுத் தரப்புதான் விளக்க வேண்டும்.

டிஜிட்டல் யுகத்தில் அதை சில நிமிடங்களில் கண்டுபிடித்து விடலாம். மனமிருந்தால், துணிவிருந்தால்!

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Mathi

மா.ச.மதிவாணன் (Mathivanan Maran- Mathi) 30 ஆண்டுகள் ஊடகத் துறை அனுபவம், அச்சு, இணையம், வானொலி, தொலைக்காட்சி ஊடகங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel