100-வது பிறந்த நாளில் அடியெடுத்து வைக்கும் எல்.கே. அத்வானி.. இந்திய அரசியலின் போக்கையே மாற்றியவர்!

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 10:28 AM

LK Advani-PM Modi

– நரேந்திர மோடி

லால் கிருஷ்ண அத்வானி இன்று நவம்பர் 8-ந் தேதி தமது வாழ்க்கையின் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இந்த ஆண்டு அவரது பிறந்தநாள் தீபாவளிப் பண்டிகையுடன் இணைந்து வந்திருப்பது மிகவும் பொருத்தமானது.

தீபாவளி என்பது பகவான் ஸ்ரீராமருடனும் அகல் விளக்குகளுடனும் தொடர்புடைய பண்டிகை. பாரதிய ஜனசங்கம் தொடங்கப்பட்டு 75 ஆண்டுகள் நிறைவடையும் நேரத்தில், டாக்டர் சியாமா பிரசாத் முகர்ஜியின் 125-வது பிறந்தநாளைக் கொண்டாடும் நேரத்தில், ஆர்எஸ்எஸ் அமைப்பின் நூற்றாண்டை அண்மையில் கொண்டாடியுள்ள சூழலில் அத்வானியின் பிறந்தநாள் வந்துள்ளது.

ADVERTISEMENT

நவீன இந்திய வரலாற்றின் பல்வேறு முக்கியமான காலகட்டங்களிலும் பங்காற்றியவர்கள் மிகச் சிலரே. அவர்களில் அத்வானியும் ஒருவர்.

அத்வானி 1927-ஆம் ஆண்டு நவம்பர் 8-ந் தேதி தேவ தீபாவளி நாளில் பிறந்தார். 1947-ஆம் ஆண்டு இந்தியா பிரிக்கப்பட்டபோது இளைஞராக இருந்த அத்வானி, சிந்து மாகாணத்தில் தாம் வாழ்ந்து பழகிய இடத்தைவிட்டு வெளியேற வேண்டிய துயரத்தை அனுபவித்தார். தமது சொந்த இடத்தையும் பழகிய வாழ்க்கையையும் இழந்தபோதும், எந்தக் கசப்புணர்வும் இல்லாமல் புதிய இடத்தில் தமது வாழ்க்கையை மீண்டும் தொடங்கினார்.

ADVERTISEMENT

எத்தனை தடைகள் வந்தாலும் தொடக்கத்திலிருந்து ஒன்றை உருவாக்கும் இந்தக் குணம் அவரது வாழ்க்கை முழுவதும் தொடர்ந்தது. பாரதிய ஜனசங்கத்தை வலுப்படுத்தியபோதும், பின்னர் பாஜகவை வளர்த்தெடுத்தபோதும் இதைப் பார்க்க முடிந்தது.

அத்வானி பாஜக தலைவராக இருந்த காலத்தில், 400-க்கும் அதிகமான இடங்களைப் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சி, 1989-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் 200 இடங்களுக்கும் கீழே சரிந்தது. 1996-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் பாஜக முதல்முறையாகத் தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. பல தலைமுறை பாஜக தொண்டர்களை அத்வானி உருவாக்கினார். ‘தேசமே முதன்மையானது’ என்ற கொள்கையை அடிப்படையாகக் கொண்டு கட்சிக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தார்.

ADVERTISEMENT

அத்வானியின் 2 முக்கியமான பண்புகள்

ஒரு தலைவராக அத்வானியை மற்றவர்களிடமிருந்து வேறுபடுத்திக் காட்டிய 2 முக்கியமான பண்புகள் உள்ளன.

முதலாவது, தமது கொள்கைகளில் அவருக்கு இருந்த தெளிவும் கூர்மையான அறிவாற்றலும். அவரது பேச்சுகளிலும் எழுத்துகளிலும் இது வெளிப்பட்டது. பாரதிய ஜனசங்கம் மற்றும் பாஜகவுக்காக அத்வானி வடிவமைத்த தீர்மானங்கள் இன்றைக்கும் படித்துப் பார்க்க வேண்டியவை. அதேபோல, அவரது நேர்காணல்களில் வெளிப்பட்ட கருத்துகள் எப்போதும் ஆழமாகவும் தெளிவாகவும் இருந்தன.

இரண்டாவது, இந்திய அரசியலில் பல ஆண்டுகளாகப் பெரும்பாலான அரசியல் கட்சிகள் முன்னெடுத்து வந்த போலி மதச்சார்பின்மையை அவர் அம்பலப்படுத்திய விதம்.

வாஜ்பாய் – அத்வானி

அத்வானி தம்மிடம் ஒப்படைக்கப்பட்ட ஒவ்வொரு பொறுப்பையும் மிகுந்த அக்கறையுடன் நிறைவேற்றினார். ஆர்எஸ்எஸ் அமைப்பின் முழுநேரப் பிரச்சாரகராக ராஜஸ்தானின் பல்வேறு பகுதிகளில் முதலில் பணியாற்றினார். பின்னர் டெல்லிக்குச் சென்ற அவர், அடல் பிகாரி வாஜ்பாயுடன் இணைந்து பணியாற்றத் தொடங்கினார்.

அரசியலில் மிகப்பெரிய தலைவர்கள் இருவர் பல பத்தாண்டுகள் ஒருவருக்கொருவர் போட்டியாளர்களாக இல்லாமல், இணைந்து செயல்படுவது மிகவும் அரிதானது. ஆனால் அத்வானியும் வாஜ்பாயும் இதற்கு மிகச்சிறந்த எடுத்துக்காட்டாகத் திகழ்ந்தனர். இருவரும் இணைந்து இந்திய அரசியலின் போக்கையே மாற்றினர்.

அத்வானி டெல்லிக்கு வந்தபோது, இந்தியப் பிரிவினையால் ஏற்பட்ட கொடுமைகளிலிருந்து அந்த நகரம் மீண்டு கொண்டிருந்தது. அந்தச் சூழலில் பாரதிய ஜனசங்கத்தை வலுப்படுத்தும் பணியில் அவர் முழுமையாக ஈடுபட்டார்.

1967-ஆம் ஆண்டு டெல்லி பெருநகரக் கவுன்சிலின் தலைவராக அத்வானி பொறுப்பேற்றார். அப்போது தலைமை நிர்வாகக் கவுன்சிலராகப் பொறுப்பேற்ற மறைந்த விஜய் குமார் மல்ஹோத்ராவுடன் இணைந்து பணியாற்றினார்.

நாடாளுமன்றத்தில் அத்வானி

அத்வானியின் நாடாளுமன்றப் பயணம் 1970-ஆம் ஆண்டு தொடங்கியது. நாடாளுமன்றத்தில் அவர் ஆற்றிய உரைகளும் முன்வைத்த கருத்துகளும் கட்சி வேறுபாடுகளைக் கடந்து பாராட்டுகளைப் பெற்றன.

நாடாளுமன்ற உறுப்பினராக மட்டுமல்லாமல், இரு அவைகளிலும் எதிர்க்கட்சித் தலைவராகவும், ஆளுங்கட்சி தரப்பிலும் அவர் தமது திறமையை வெளிப்படுத்தினார். நாடாளுமன்றப் பணிகள் அதிகமாக இருந்தபோதும், நாடு முழுவதும் தொடர்ந்து பயணம் செய்து மக்களைச் சந்திப்பதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்தார்.

1991 தேர்தலில் அத்வானியுடன் பணியாற்றிய அனுபவம்

1991-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தல் எனக்கு இன்றும் பசுமையாக நினைவில் இருக்கிறது. அந்தத் தேர்தலில் அத்வானி 2 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்யப்பட்டது. அவற்றில் ஒன்று குஜராத் மாநிலத்தின் காந்திநகர் தொகுதி. குஜராத்துடன் அத்வானிக்கு ஏற்கெனவே நீண்டகாலத் தொடர்பு இருந்தது. இந்தியப் பிரிவினைக்குப் பின்னர் அவரது தந்தை குஜராத்தின் கட்ச் பகுதியில் குடியேறியிருந்தார். அத்வானியும் குஜராத் மாநிலத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றியிருந்தார். எனவே, காந்திநகர் தொகுதியில் போட்டியிட்டது அத்வானிக்கு தனது சொந்த மண்ணுக்குத் திரும்பியதைப் போன்ற உணர்வைத் தந்தது.

அப்போது நான் பாஜகவின் அமைப்புப் பணிகளில் ஈடுபட்டிருந்தேன். அத்வானியின் வேட்புமனுத் தாக்கலுக்கான ஆவணங்களைத் தயாரிப்பதிலும், தேர்தல் பிரச்சாரம் முழுவதும் அவருக்கு உதவுவதிலும் பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன்.

காந்திநகர் மக்கள் அத்வானியை மீண்டும் மீண்டும் நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுத்து அனுப்பினர். காந்திநகர் தொகுதியின் வாக்காளர் என்ற முறையில், பல தேர்தல்களில் அத்வானிக்கு வாக்களிக்கும் வாய்ப்பும் எனக்குக் கிடைத்தது. தமது தொகுதி மக்களின் தேவைகளுக்கு அத்வானி அளித்த முக்கியத்துவமும், அவர்களது பிரச்சினைகளைத் தீர்ப்பதில் காட்டிய அக்கறையும் மற்றவர்கள் பின்பற்ற வேண்டியவை.

எமர்ஜென்சியில் அத்வானி

இந்தியாவில் நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்ட காலம் அத்வானியின் வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. ஜனநாயகத்தையும் அரசியல் சாசனத்தையும் பாதுகாக்கும் போராட்டத்தில் அவர் முன்னணியில் நின்றார்.

நெருக்கடி நிலைக் காலத்தில் தமக்கு ஏற்பட்ட அனுபவங்களை A Prisoner’s Scrap-Book என்ற புத்தகத்தில் பதிவு செய்துள்ளார். அந்தப் புத்தகத்தில் A Tale of Two Emergencies என்ற தலைப்பில் ஒரு பகுதி இடம்பெற்றுள்ளது.

இந்தியாவில் 1975-ஆம் ஆண்டு ஜூன் மாதம் தொடங்கிய நெருக்கடி நிலை நிகழ்வுகளுக்கும், 1933-ஆம் ஆண்டு நாஜி ஆட்சிக் கால ஜெர்மனியில் நடந்த நிகழ்வுகளுக்கும் இடையிலான அதிர்ச்சியூட்டும் ஒற்றுமைகளை அதில் மிக அழகாக விளக்கியுள்ளார்.

சிறந்த நிர்வாகியாக அத்வானி

எதிர்க்கட்சித் தலைவராக அத்வானி மிகத் தீவிரமாகச் செயல்பட்டார். அதே நேரத்தில் சிறந்த நிர்வாகியாகவும் திகழ்ந்தார். 1977-ஆம் ஆண்டு ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்தபோது, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சராக அத்வானி பொறுப்பேற்றார். அந்தத் துறையில் அவர் மேற்கொண்ட பணிகள் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியவை என்பது பரவலாக ஏற்றுக்கொள்ளப்பட்ட கருத்து.

இந்தியாவின் துணைப் பிரதமராகவும், மிக நீண்டகாலம் உள்துறை அமைச்சராகப் பணியாற்றியவர்களில் ஒருவராகவும் இருந்த அத்வானி, நாட்டின் பாதுகாப்பு அமைப்புகளை வலுப்படுத்துவதில் முக்கியப் பங்காற்றினார்.

பாதுகாப்புப் படையினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த அவர் மேற்கொண்ட பணிகள் இன்றும் அன்புடன் நினைவுகூரப்படுகின்றன. பயங்கரவாதத்திற்கு எதிராக அவர் எடுத்த உறுதியான நிலைப்பாட்டின் காரணமாக, இந்தியாவில் கடுமையான பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் கொண்டுவரப்பட்டது.

சோம்நாத் முதல் அயோத்தி வரை ரத யாத்திரை

அத்வானியின் வாழ்க்கையில் மிக முக்கியமான நிகழ்வுகளில் ஒன்று சோம்நாத்திலிருந்து அயோத்தி வரை அவர் மேற்கொண்ட ரத யாத்திரை. அந்த ரத யாத்திரை இந்தியச் சமூகத்தின் போக்கை நல்ல விதமாக மாற்றியது.

இந்த யாத்திரையைத் திட்டமிட்ட தொடக்கக் கட்டத்திலிருந்து அதைச் செயல்படுத்தியது வரை பங்கேற்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இதை மிகப்பெரிய பெருமையாகக் கருதுகிறேன். குறிப்பாக, சோம்நாத்தில் ரத யாத்திரை தொடங்கியபோது நான் அங்கு இருந்தது எனக்கு மிகவும் சிறப்பான அனுபவமாக அமைந்தது.

ஒரு யாத்திரையை மேற்கொள்வது அவ்வளவு எளிதான காரியமல்ல. நீண்ட நேரப் பயணம், இடைவிடாத அலைச்சல், உடல் சோர்வு ஆகியவற்றைச் சமாளிக்க வேண்டும். எவ்வளவு களைப்பு ஏற்பட்டாலும் எடுத்துக்கொண்ட நோக்கத்திலிருந்து விலகாமல் பயணத்தைத் தொடர வேண்டும். அத்தகைய உடல் வலிமையும் மன உறுதியும் கொண்டவராக அத்வானி திகழ்ந்தார்.

பீகாரில் அத்வானி கைது

பீகாரில் அத்வானி கைது செய்யப்பட்ட துயரமான தருணங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. பீகாரில் அத்வானி கைது செய்யப்பட்ட துயரமான தருணங்களும் எனக்கு நினைவில் இருக்கின்றன. அவரது கைதைத் தொடர்ந்து, குஜராத்தில் சிமன்பாய் படேல் தலைமையிலான கூட்டணி அரசிலிருந்து பாஜக விலகியது. எங்களது கொள்கைகளிலும் ராமர் கோயில் விவகாரத்திலும் எந்தச் சூழ்நிலையிலும் சமரசம் செய்துகொள்ள மாட்டோம் என்பதை இதன் மூலம் தெளிவுபடுத்தினோம்.

என்ன நடந்தாலும் அயோத்தியில் ராமர் கோயிலைக் கட்டியே தீருவோம் என்று எங்களது மூத்த தலைவர்கள் பலரும், கட்சித் தொண்டர்களும் உறுதிமொழி எடுத்தனர். பல ஆண்டுகளுக்குப் பின்னர், இந்திய மக்களின் ஆசியுடன் அயோத்தியில் பகவான் ஸ்ரீராமருக்குப் பிரம்மாண்டமான கோயில் கட்டப்பட்டது.

அத்வானியின் எளிமையான வாழ்க்கை

அத்வானியிடம் பாராட்ட வேண்டிய பண்புகள் இன்னும் ஏராளமாக உள்ளன. அவற்றில் முக்கியமானது அவரது எளிமை. குஜராத்தில் நவநிர்மாண் இயக்கம் நடைபெற்ற பின்னர், அத்வானி ஜூனாகத் நகருக்கு வந்தார். அங்கு ஒரு சாதாரண கட்சித் தொண்டரைப் போல ஒரு மாதம் தங்கியிருந்து சட்டப்பேரவைத் தேர்தலுக்காக கட்சியைத் தயார்படுத்தினார். அந்தத் தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோற்கடிக்கப்பட்டது.

பொது வாழ்க்கையில் நேர்மையாக இருப்பது எப்படி என்பதை அத்வானி எப்போதும் தமது செயல்பாடுகளால் காட்டியுள்ளார். அவர் புத்தகங்களை அதிகமாகப் படிப்பவர். அவருடன் நேரம் செலவிட்டவர்களுக்கு, செய்தித்தாள்களை அவர் எவ்வளவு கவனமாகப் படிப்பார் என்பது நன்றாகத் தெரியும். திரைப்படங்கள், நாடகங்கள் மீதும் அவருக்கு மிகுந்த ஆர்வம் உண்டு. திரைப்படங்களை ஆர்வத்துடன் பார்த்து விமர்சனம் செய்பவராகவும் இருந்துள்ளார்.

வரலாற்றின் மீது அவருக்கு இருந்த ஆர்வத்தையும், வரலாற்றைப் பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை அவர் உணர்ந்திருந்ததையும் My Country My Life என்ற அவரது புத்தகத்தில் பார்க்க முடியும்.

சிந்து கலாசாரத்தின் மீது அத்வானியின் பற்று

அத்வானி எப்போதும் சிந்து கலாசாரத்துடன் தமது தொடர்பைத் தொடர்ந்து பேணி வந்தார். லே நகருக்கு அருகே நடைபெறும் சிந்து தரிசன பூஜையைப் பிரபலப்படுத்துவதற்கும் அவர் முயற்சிகளை மேற்கொண்டார்.

அத்வானி மற்றும் ஜார்ஜ் பெர்னாண்டஸ் ஆகியோருடன் இணைந்து ஒரு சிந்து தரிசன பூஜையில் நானும் பங்கேற்றிருக்கிறேன்.

கமலா அத்வானியின் பங்களிப்பு

அத்வானியின் இந்த நீண்ட நெடிய அரசியல் பயணத்தைப் பற்றிப் பேசும்போது, அவரது மனைவி கமலா அத்வானியைப் பற்றிக் குறிப்பிடாமல் இருக்க முடியாது. அத்வானியின் பொது வாழ்க்கை முழுவதும் அவருக்குப் பக்கபலமாகவும் உறுதுணையாகவும் இருந்தவர் கமலா அத்வானி.

கராச்சியில் வளர்ந்த அத்வானி, தமது வாழ்க்கை இப்படியொரு பாதையில் செல்லும் என்று அப்போது நினைத்துக்கூடப் பார்த்திருக்க மாட்டார்.

இந்தியாவுக்கு அவர் ஆற்றிய பணிகளுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், 2024-ஆம் ஆண்டு நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா அவருக்கு வழங்கப்பட்டது.

வாழ்க்கையின் 100-வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ள அத்வானி, நல்ல உடல்நலத்துடன் வாழ வேண்டும் என்று இறைவனை வேண்டுகிறேன். இத்தனை ஆண்டுகளாக எங்கள் அனைவருக்கும் ஊக்கமும் உத்வேகமும் அளித்து வந்த அவர், வரும் காலங்களிலும் தொடர்ந்து எங்களுக்கு வழிகாட்டியாகத் திகழ வேண்டும் என்று விரும்புகிறேன்.

(பிரதமர் நரேந்திர மோடி தமது https://www.narendramodi.in/bharat-ratna-lk-advani-ji-at-100 இணையதளத்தில் எழுதிய கட்டுரை)

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel