இந்தியாவின் உள்நாட்டு விவகாரங்களில் வெளிநாட்டு அமைப்புகள் தலையிட முயன்றனவா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சுமார் 1.5 மில்லியன் அமெரிக்க டாலர் (இந்திய மதிப்பில் ரூ.12 கோடி) அளவிலான பணப் பரிவர்த்தனைகளை அமலாக்கத்துறை (ED) விசாரித்து வருகிறது.
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்கள், ஆறு நாடுகள்
இரண்டு வெளிநாட்டு நிறுவனங்களின் பணப் பரிவர்த்தனைகள் அமலாக்கத்துறையின் பார்வைக்கு வந்துள்ளன. ஜெர்மனி, கனடா, ஐக்கிய அரபு அமீரகம், லிதுவேனியா, செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸ், இங்கிலாந்து ஆகிய ஆறு நாடுகள் வழியாகப் பணம் கைமாறியிருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
இதில் முக்கியமானது, ஜெர்மனியில் இருக்கும் Dr Matthias Karl Vogt Trust என்ற அமைப்பிலிருந்து 10 லட்சம் டாலர் அனுப்பப்பட்டது.
பணம் போன வழி
ஜெர்மனியிலிருந்து அனுப்பப்பட்ட பணம் முதலில் லிதுவேனியாவைச் சேர்ந்த XBase Digital UAB நிறுவனத்துக்குப் போனதாகக் கூறப்படுகிறது. அங்கிருந்து பல நிறுவனங்கள் வழியாகச் சுற்றி, இங்கிலாந்தில் உள்ள ஒரு நிறுவனத்தின் Airwallex கணக்கில் போய்ச் சேர்ந்திருக்கிறது.
டிஜிட்டல் கரன்சி, ஹவாலா மீது சந்தேகம்
இந்தப் பணம் டிஜிட்டல் கரன்சி மூலம் மாற்றப்பட்டிருக்கலாம் என்றும், துபாயில் நடந்த ஹவாலா பரிவர்த்தனைகளுக்கும் இதற்கும் தொடர்பு இருக்கலாம் என்றும் அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள்.
கனடா நிறுவனத்தின் ரூ.4 கோடி
இன்னொரு பக்கம், கனடாவில் பதிவுசெய்யப்பட்ட ZBase Digital Inc நிறுவனம், அதே இங்கிலாந்து நிறுவனத்தின் கணக்குக்கு 5 லட்சம் டாலர் (சுமார் ரூ.4 கோடி) அனுப்பியதாகத் தகவல். இந்தப் பரிவர்த்தனையை Airwallex நிறுவனத்திடம் உறுதிசெய்ய இந்திய விசாரணை அமைப்புகள் நடவடிக்கை எடுத்துள்ளன.
இந்தியாவில் யாருக்குப் போனது?
செயின்ட் கிட்ஸ் அண்ட் நெவிஸில் பதிவுசெய்யப்பட்ட TCC Digital Markets Ltd நிறுவனம், அந்த இங்கிலாந்து நிறுவனத்துக்கு இரண்டு தவணைகளில் பணம் அனுப்பியதாகச் சொல்லப்படுகிறது. இந்தப் பணம் இந்தியாவில் உள்ள சில அமைப்புகளுக்கும் தனிநபர்களுக்கும் போய்ச் சேர்ந்ததாக விசாரணை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்தப் பணம் எதற்காக அனுப்பப்பட்டது, இதில் வெளிநாட்டு நிறுவனங்களின் பங்கு என்ன என்பதை அமலாக்கத்துறை தொடர்ந்து விசாரித்து வருகிறது.
முக்கியக் குறிப்பு: இவை அனைத்தும் விசாரணை வட்டாரங்கள் சொல்லும் தகவல்களும் அதிகாரிகளின் சந்தேகங்களும் மட்டுமே. யார் மீதும் குற்றம் நிரூபிக்கப்படவில்லை.









