இரவு 10 மணிக்கு மேல சாப்பிடுற பழக்கம் இருக்கா? கல்லீரலில் கொழுப்பு சேரும் ஆபத்து!

By Minnambalam Desk

|

Published on 8 Nov 2026, 9:00 AM

பகல் முழுக்க வேலை, டிராஃபிக், ஆபீஸ் டென்ஷன் என்று ஓடிக்கொண்டே இருப்பவர்களுக்கு இரவு சாப்பாடு தாமதமாவது சாதாரணமாகிவிட்டது.

சிலர் இரவு 10, 11 மணிக்குத்தான் சாப்பிடுகிறார்கள். ஆனால் இந்தப் பழக்கம் தொடர்ந்து நீடித்தால் கல்லீரல் ஆரோக்கியம் பாதிக்கப்படலாம் என்று ஆய்வுகள் கூறுகின்றன. உடலின் உயிரியல் கடிகாரத்துக்கு எதிராகச் சாப்பிடுவது வளர்சிதை மாற்றத்தில் (Metabolism) மாற்றங்களை உண்டாக்கக்கூடும்.

ADVERTISEMENT

உடலுக்குள் இருக்கும் 24 மணி நேரக் கடிகாரம்

நம் உடலில் ‘சர்காடியன் ரிதம்’ (Circadian Rhythm) என்ற 24 மணி நேர உயிரியல் கடிகாரம் ஓடிக்கொண்டே இருக்கிறது. தூக்கம், விழிப்பு, செரிமானம், ஹார்மோன் வேலைகள் எல்லாவற்றையும் இதுதான் ஒழுங்குபடுத்துகிறது.

ADVERTISEMENT

பகலில் உணவில் உள்ள குளுக்கோஸை உடல் நன்றாகப் பயன்படுத்திக்கொள்ளும். ஆனால் இரவில் இன்சுலின் செயல்பாடு குறையக்கூடும். அதனால் எப்போது சாப்பிடுகிறோம் என்பதும் உடலின் வளர்சிதை மாற்றத்தை பாதிக்கிறது.

கல்லீரலில் கொழுப்பு எப்படிச் சேருகிறது?

ADVERTISEMENT

இரவில் நிறைய சாதம், பிரியாணி, இனிப்பு, எண்ணெய் அதிகமுள்ள உணவுகளைச் சாப்பிட்டால், உடலுக்குத் தேவையானதைவிட அதிகக் கலோரிகள் போய்ச் சேரும். இந்த அதிகப்படி சக்தி முதலில் கிளைகோஜனாகச் சேமிக்கப்படும். அதற்கும் மேல் இருந்தால், ஒரு பகுதி கொழுப்பாக மாறிக் கல்லீரலில் சேரக்கூடும்.

இது நீண்ட காலம் தொடர்ந்தால், வளர்சிதை மாற்றம் தொடர்பான கொழுப்புக் கல்லீரல் நோய் (MASLD) வரும் அபாயமும் கூடலாம்.

சாப்பிட்டவுடன் தூங்கினால்?

சாப்பிட்ட கையோடு படுக்கைக்குப் போனால், சிலருக்கு நெஞ்செரிச்சல், செரிமானக் கோளாறு வரும். அதனால் தூங்குவதற்கு குறைந்தது 2 முதல் 3 மணி நேரம் முன்பே இரவு உணவை முடித்துவிடுவது நல்லது.

கல்லீரலைக் காப்பாற்ற என்ன செய்யலாம்?

இரவு சாப்பாட்டையே தவிர்த்துவிடுவது தீர்வு இல்லை. அதற்குப் பதிலாக:

  • சாப்பிடும் அளவைக் கட்டுப்படுத்துங்கள்.
  • காய்கறிகளையும் முழுத்தானியங்களையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
  • சர்க்கரை சேர்த்த பானங்களைக் குறைத்துக்கொள்ளுங்கள்.
  • தினமும் உடற்பயிற்சி செய்யுங்கள்.

ஒருநாள் தாமதமாகச் சாப்பிட்டதால் கல்லீரல் கெட்டுவிடும் என்று பயப்பட வேண்டாம். ஆனால் தினசரி பழக்கத்தில் சின்னச் சின்ன மாற்றங்களைச் செய்தால், நீண்ட காலத்துக்கு அது உடம்புக்கு நல்லது.

மருத்துவ ஆலோசனை: ஏற்கெனவே சர்க்கரை நோய், கொழுப்புக் கல்லீரல் பிரச்சினை அல்லது வேறு உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள், தங்கள் உணவு நேரம், அளவு பற்றி மருத்துவரிடம் கேட்டு முடிவு செய்வது நல்லது.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel