எண்ணெய் நிறுவனங்கள் பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்துமா (Petrol Diesel Price) என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்குக் காரணம், பெட்ரோல் விலை நிர்ணயத்துக்குப் பயன்படுத்தப்படும் சர்வதேச சந்தையின் அடிப்படை விலை தொடர்ந்து அதிகரித்து வருவதுதான்.
நடப்பு செப்டம்பர் மாதத்தில் பெட்ரோலுக்கான சர்வதேச சந்தையின் அடிப்படை விலை பேரலுக்கு 133.05 டாலராக உயர்ந்துள்ளது. செப்டம்பர் 1-ம் தேதி முதல் 18-ம் தேதி வரையிலான சராசரி விலை இது. ஆகஸ்ட் மாதத்தில் இது 110.87 டாலராக இருந்தது. அதாவது, ஒரே மாதத்தில் சுமார் 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
இதேபோல், டீசலுக்கான சர்வதேச சந்தையின் அடிப்படை விலையும் பேரலுக்கு 167.08 டாலராக உயர்ந்துள்ளது.
சர்வதேச சந்தையில் அடிப்படை விலை உயர்ந்தாலும், அதற்கேற்ப பெட்ரோல், டீசல் சில்லறை விலையை உயர்த்தாததால் இந்தியன் ஆயில், பாரத் பெட்ரோலியம், இந்துஸ்தான் பெட்ரோலியம் உள்ளிட்ட அரசு எண்ணெய் நிறுவனங்கள் மீண்டும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. தற்போதைய சூழலில் பெட்ரோல் விற்பனையில் லிட்டருக்கு சுமார் ₹5, டீசலில் சுமார் ₹20 வரை எண்ணெய் நிறுவனங்களுக்கு இழப்பு ஏற்படுவதாக கூறப்படுகிறது.
கடந்த மே மாதத்திலும் இதேபோன்ற நெருக்கடி ஏற்பட்டது. அப்போது எண்ணெய் நிறுவனங்களின் தினசரி இழப்பு சுமார் ₹1,000 கோடி வரை உயர்ந்த நிலையில், ஒரே மாதத்தில் மொத்தமாக பெட்ரோல் விலை லிட்டருக்கு ₹7.35, டீசல் விலை ₹7.53 உயர்த்தப்பட்டது. தற்போது மீண்டும் அதேபோன்ற அழுத்தம் உருவாகியுள்ளது.
இதுவரை பெட்ரோல், டீசல் விலையை மீண்டும் உயர்த்துவது தொடர்பாக மத்திய அரசோ அல்லது அரசு எண்ணெய் நிறுவனங்களோ அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை.
எனினும், சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலுக்கான அடிப்படை விலை தொடர்ந்து உயர்ந்த நிலையிலேயே நீடித்தால், எண்ணெய் நிறுவனங்கள் மீதான நிதிச்சுமை மேலும் அதிகரிக்கும். இதனால் பெட்ரோல், டீசல் சில்லறை விலையை உயர்த்த வேண்டிய நெருக்கடி எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்படலாம் என்று கூறப்படுகிறது.
