டெல்லியில் ஜூலை 18-ஆம் தேதி என்டிஏ கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் 38 கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். தமிழகத்திலிருந்து அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாமக துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி, தமாகா தலைவர் ஜி.கே.வாசன், புதிய நீதி கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஐஜேகே நிறுவனர் பச்சமுத்து, புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழக கட்சி தலைவர் ஜான் பாண்டியன், இந்திய மக்கள் கல்வி முன்னேற்ற கழகம் கட்சி தலைவர் தேவநாதன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தமிழகத்திலிருந்து சென்ற கட்சிகளின் பிரதிநிதிகளாக அக்கட்சி தலைவர்கள் பங்கேற்ற நிலையில் பாமகவிலிருந்து மட்டும் அக்கட்சியின் இரண்டாம் கட்ட தலைவரான துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தி கலந்து கொண்டார். இது பாஜக, பாமக ஆகிய இரண்டு கட்சிகளிடையேயும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது.
அதாவது 2021-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு அதிமுக கூட்டணியிலிருந்து பாமக வெளியேறியது. தற்போது தேசிய ஜனநாயக கூட்டணிக்கு தமிழகத்தில் அதிமுக தலைமை தாங்கும் என்று அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார். இதனால் அதிமுக கூட்டணியில் அங்கம் வகிப்பதில் பாமகவிற்கு குழப்பம் உள்ளது.
அதேவேளையில் வன்னியர்களுக்கு 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அக்கட்சி தலைவர் அன்புமணி ஆகிய இருவரும் முதல்வர் ஸ்டாலினுடன் இணக்கமான போக்கை கையாண்டு வருகின்றனர். பாமக நிர்வாகிகள் அவ்வப்போது இந்த கோரிக்கையை முன்வைத்து முதல்வரை சந்தித்து பேசுகின்றனர். 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலின் நல்ல முடிவு எடுப்பார் என்றும் அவர்கள் நம்பிக்கையோடு இருக்கின்றனர்.
இந்தசூழலில் என்டிஏ கூட்டத்தில் அன்புமணி கலந்து கொள்ளாதது பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து நாம் விசாரித்தபோது, “என்டிஏ கூட்டத்தில் கலந்து கொள்ள அன்புமணிக்கு அழைப்பு வந்தது. கூட்டத்தில் நாமே கலந்து கொண்டால் 10.5 சதவிகித இட ஒதுக்கீடு விவகாரத்தில் ஸ்டாலினுடன் மேற்கொண்டு வரும் இணக்கமான சூழல் கெட்டுவிடுமோ என்று கட்சியினருடன் ஆலோசனை நடத்தியுள்ளார்.
அப்போது தேர்தலுக்கு இன்னும் 8 மாதங்கள் இருப்பதால் அந்த பரபரப்பு வரும் போது கூட்டணி குறித்து பார்த்துக்கொள்வோம். தற்போது என்டிஏ கூட்டத்திற்கு விடுத்த அழைப்பை மதித்து பாமக பிரதிநிதியாக துணை பொதுச்செயலாளர் ஏ.கே.மூர்த்தியை அனுப்பி வைப்போம் என்று முடிவெடுத்திருக்கிறார்கள். இப்படி மோடிக்கும் ஸ்டாலினுக்கும் சிக்னல் கொடுக்கும் விதமாக அங்கே கொஞ்சம் இங்கே கொஞ்சம் என கூட்டணி காய்களை அன்புமணி கச்சிதமாக நகர்த்தி வருகிறார்” என்று தெரிவிக்கிறார்கள்.
வேந்தன், செல்வம்
மணிப்பூர் விவகாரம்: இரு அவைகளும் ஒத்திவைப்பு!
செந்தில் பாலாஜி மேல்முறையீடு: உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை!