ஆட்கொணர்வு மனுவை ஏற்க மறுத்த சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து அமைச்சர் செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
சட்டவிரோத பணப்பரிவர்த்தனை வழக்கில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி அமைச்சர் செந்தில் பாலாஜியை அமலாக்கத்துறை கைது செய்தது. அவருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டதால் காவேரி மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்யப்பட்டு நீதிமன்ற காவலில் இருந்தார்.
இந்தசூழலில் செந்தில் பாலாஜி கைது சட்டவிரோதமானது என்று அவரது மனைவி மேகலா சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு மாறுபட்ட தீர்ப்பை வழங்கினர். இதனால் இந்த வழக்கு மூன்றாவது நீதிபதியான சி.வி.கார்த்திகேயன் அமர்வுக்கு சென்றது.
செந்தில் பாலாஜி தரப்பில் மூத்த வழக்கறிஞர் கபில் சிபல், திமுக மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ உள்ளிட்டோர் ஆஜராகி வாதங்களை முன்வைத்தனர். அமலாக்கத்துறை தரப்பில் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா ஆஜராகி வாதங்களை முன்வைத்தார்.
இந்த வழக்கில் ஜூலை 14-ஆம் தேதி தீர்ப்பளித்த நீதிபதி, ஆட்கொணர்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என்று தீர்ப்பளித்தார்.
இந்தநிலையில் ஜூலை 17-ஆம் தேதி செந்தில் பாலாஜி காவேரி மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
செந்தில் பாலாஜி உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தால் தங்களது தரப்பை கேட்காமல் உத்தரவு பிறப்பிக்க கூடாது என்று அமலாக்கத்துறை தரப்பில் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.
இந்தசூழலில் சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.
இந்த வழக்கானது நீதிபதிகள் ஏஎஸ் போபண்ணா, எம்.எம்.சுந்தரேஷ் ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று விசாரணைக்கு வருகிறது. PMLA சட்டம் குறித்து மிக முக்கியமான விவாதத்தை ஏற்படுத்திய வழக்கு மீண்டும் விசாரணைக்கு வருவதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
செல்வம்
தென்காசி: சங்கர நாராயண சுவாமி கோவிலில் ஆடித்தபசு கோலாகலம்!
வந்தே பாரத் ரயில்: சிறுநீர் கழிக்க ஏறியவருக்கு ரூ. 6000 இழப்பு!
G20ஐ ஒட்டி ஈஷாவில் S20: சர்வதேச பிரதிநிதிகளுடன் கலந்துரையாடும் சத்குரு