மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் அமளியில் ஈடுபட்டதால் மக்களவையைத் தொடர்ந்து மாநிலங்களவையும் இன்று (ஜூலை 21) மதியம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களுக்கும் மேலாக மணிப்பூரில் கலவரம் நடந்துவருகிறது. இதற்கிடையே இரு பழங்குடியின பெண்கள் நிர்வாணமாக இழுத்துசெல்லப்பட்ட வீடியோ சமீபத்தில் வெளியாகி ஒட்டுமொத்த நாட்டையும் தலைகுனிய வைத்திருக்கிறது.
மத்தியிலும், மாநிலத்திலும் பாஜக அரசு ஆட்சியில் உள்ள நிலையில் மணிப்பூரில் நடந்து வரும் கலவரம் மிகப்பெரிய பிரச்சனையாக எழுந்துள்ளது
இந்த விவகாரம் நேற்று தொடங்கிய நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரிலும் எதிரொலித்து வருகிறது.
மணிப்பூரில் நடந்த வன்முறை சம்பவங்கள் குறித்து நேற்று எதிர்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பியதால், முதல்நாளில் இரு அவைகளும் முடங்கியது.
தொடர்ந்து 2வது நாளிலும், மணிப்பூர் விவகாரம் குறித்து விவாதிக்க கோரி மக்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர திமுக எம்.பி டி.ஆர்.பாலு நோட்டீஸ் இன்று (ஜூலை 21) அனுப்பினார். அதில் மணிப்பூர் சம்பவத்திற்கு நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி உரிய விளக்கம் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
அவரை போன்று திமுக எம்.பி திருச்சி சிவா, காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர், மணிஷ் திவாரி, ராஜீவ் சுக்லா, கவுரவ் கோகோய், சக்திசின் கோஹில்,சயத் நசீர் ஹுசைன், ரஞ்சீத் ரஞ்சன், பிரமோத் திவாரி, ஆம் ஆத்மி எம்பி சஞ்சய் சிங், ராகவ் சதா, ராஷ்டிரிய ஜனதா தள் எம்.பி மனோஜ் குமார் ஜா, பாரதிய ராஷ்டிர சமிதி எம்.பி கேசவ ராவ் ஆகியோர் மக்களவை, மாநிலங்களவையில் ஒத்திவைப்பு தீர்மானம் கொண்டு வர நோட்டீஸ் அளித்துள்ளனர்.
இதனையடுத்து இன்று கூடிய கூட்டத்தொடரில் மணிப்பூர் விவகாரம் தொடர்பாக விவாதிக்க வேண்டும் என்று இரு அவையிலும் எதிர்க்கட்சியினர் கோஷம் எழுப்பினர்.
இதனையடுத்து மக்களவை 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்ட நிலையில், மாநிலங்களவை மதியம் 2.30 மணி வரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்டோபர் ஜெமா