அதிமுக யாருக்கும் அடிமையில்லை என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
சேலம் மாவட்டம் ஆத்தூரில் மாற்றுக்கட்சியினர் அதிமுவில் இணையும் நிகழ்ச்சி இன்று (ஜூன் 18) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பின் செய்தியாளர்களை சந்தித்தார் எடப்பாடி பழனிசாமி.
அப்போது அவர், “நாங்கள் யாருக்கும் அடிமையில்லை. பாஜகவுடன் திமுக கூட்டணி வைத்து எம்.பி.தேர்தலில் போட்டியிட்டது. 1999ல் பாஜக மத்தியில் ஆட்சியில் இருந்த போது திமுகவை சேர்ந்தவர்கள் அமைச்சராக இருந்தனர். திமுக காலத்துக்கு ஏற்றவாறு மாறிக்கொள்ளும்.
கூட்டணி என்பது தேர்தல் வரும் போது அமைக்கப்படும் ஒரு நிகழ்வு. அதிமுக தனது கொள்கையின் அடிப்படையில் கூட்டணியை அமைக்கும். யாருக்கும் அதிமுக அடிமையில்லை. திமுக தான் அடிமையாக இருக்கிறது.
மிசாவின் போது காங்கிரஸ் ஆட்சியில் இருந்தது. காங்கிரஸ் ஆட்சியில் தான் எமெர்ஜென்சி கொண்டு வரப்பட்டது. இப்படி எல்லாம் பாதிக்கப்பட்ட திமுகவினரும், ஸ்டாலினும், அவரது குடும்பத்தினரும் ஆட்சிக்காகவும் அதிகாரத்துக்காகவும் பதவிக்காகவும் காங்கிரஸுக்கு அடிமையாக இருக்கின்றனர்.
25 தொகுதிகளில் வெற்றி என அமித் ஷா சொல்லியிருப்பது அவருடைய கருத்து. ஆனால் அதிமுகவை பொறுத்தவரை தமிழகத்தில் 39 இடங்களிலும், புதுச்சேரியில் ஒரு இடத்திலும் வெற்றி பெற வேண்டும் என்று நாங்கள் அரும்பணியாற்றி கொண்டிருக்கிறோம். எங்கள் வெற்றிக்கான சூழல் பிரகாசமாக இருக்கிறது. எங்களுடைய கருத்து இதுதான்” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஊழல் செய்து, கைது செய்யப்பட்டிருக்கும் செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் வைத்திருப்பேன் என்று ஸ்டாலின் சொல்வது தவறு.
ஊழல் குற்றம் செய்தவர் எந்த கட்சியாக இருந்தாலும் அவரை அமைச்சர் பொறுப்பில் இருந்து விடுவிப்பது தான் அரசியல் நாகரீகம். கடந்த கால வரலாற்றை பாருங்கள்,
திமுக ஆட்சியில் கலைஞர் முதலமைச்சராக இருந்த போது, ஆலடி அருணா அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக அமைச்சரவையில் இருந்து விடுவிக்கப்பட்டார். என்.கே.கே.பி ராஜா நிலம் அபகரிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட போது அவரையும் கலைஞர் அமைச்சரவையில் இருந்து விடுவித்தார்.
அதேபோல், அதிமுக ஆட்சி காலத்தில் ஜெயலலிதா முதலமைச்சராக இருந்த போது அக்ரி கிருஷ்ணமூர்த்தி மீது ஊழல் குற்றச்சாட்டு எழுந்ததை தொடர்ந்து அவரை அமைச்சரவையில் இருந்து விடுவித்தார்.
செந்தில் பாலாஜியை அமைச்சரவையில் இருந்து விடுவிக்க வேண்டும். அவர் கஸ்டடியில் இருக்கிறார். சிறை கைதி எண் கொடுத்துவிட்டார்கள். அவர் எப்படி அமைச்சராக இருக்க முடியும்? இப்படி இருந்தால் மக்கள் எப்படி அரசியல் வாதியை மதிப்பார்கள்? இது மோசமான உதாரணம்” என கூறினார்.
மேலும், ஜனநாயக நாட்டில் ஒவ்வொருவரும் கருத்து சொல்லலாம். அந்த அடிப்படையில் நேற்று விஜய் பேசியிருக்கிறார்” என்றார் எடப்பாடி பழனிசாமி.
பிரியா
செந்தில் பாலாஜிக்கு பைபாஸ் எப்போது? அமலாக்கத் துறைக்கு நீடிக்கும் சிக்கல்!
ஆளுநருக்கு எதிராக மதிமுக கையெழுத்து இயக்கம்!