டியூட் படத்திலிருந்து ட்ரெண்டிங் பாடலை நீக்க உத்தரவு!

By Kavi

|

Published on 28 Nov 2025, 3:58 PM

டியூட் படத்தில் ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘நூறு வருஷம்’ ஆகிய பாடல்களை பயன்படுத்த தயாரிப்பு நிறுவனமான மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் தடை விதித்துள்ளது. 

அறிமுக இயக்குனர் கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் பிரதீப் ரங்கராஜன், மமீதா பைஜூ நடிப்பில் வெளியான படம் டியூட். 

ADVERTISEMENT

2கே கிட்ஸ்களிடையே வரவேற்பை பெற்ற இந்த படத்தில் இளையராஜா இசையமைத்த ‘கருத்த மச்சான்’ மற்றும் ‘நூறு வருஷம் இந்த மாப்பிள்ளையும் பொண்ணும்தான்’ பாடல்கள் இடம் பெற்றிருந்தன. 

இந்த பாடல்களை வைத்து ஏராளமான ரீல்ஸ்களும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ட்ரெண்டானது.

ADVERTISEMENT

இந்த சூழலில் டியூட் படத்தில் தான் இசையமைத்த பாடல்களை பயன்படுத்துவதற்கு தடை விதித்து இளையராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். 

பதிப்புரிமை சட்டத்தை மீறி தனது பாடல்களை பயன்படுத்தி இருப்பதாக தனது மனுவில் இளையராஜா குறிப்பிட்டிருந்தார். 

ADVERTISEMENT

இந்த வழக்கை நீதிபதி என். செந்தில்குமார் விசாரித்தார். 

அப்போது இளையராஜா சார்பில், “பாடலை உருமாற்றி இருக்கிறார்கள். பாடலுக்கான உரிமை எங்களிடம் இருக்கிறது. எக்கோ நிறுவனம் தனது பாடல்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டது. 

மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் சார்பில், “பாடல்களின் உரிமையை எக்கோ நிறுவனத்திடம் இருந்து சோனி நிறுவனம் பெற்றிருந்ததாகவும், அந்த நிறுவனத்திடமிருந்து அனுமதி பெற்று இந்த பாடல்களை பயன்படுத்தியதாகவும்” தெரிவிக்கப்பட்டது. 

இதை கேட்ட நீதிபதிகள், “30 ஆண்டுகளுக்கு முன் வெளியான இந்த பாடல்களை தற்போதும் மக்கள் கேட்டு ரசிக்கும் போது இதனால் இளையராஜா எந்த வகையில் பாதிக்கப்படுகிறார். பழைய பாடல்கள் பயன்படுத்தப்படுவது தற்போது ட்ரெண்டாகி வருகிறதே?” என்று கேள்வி எழுப்பினார். 

அதேசமயம் படம் தியேட்டரிலும் ஓடிடி தளங்களிலும் வெளியாகும் போது அமைதியாக இருந்துவிட்டு இப்போது வழக்கை தாக்கல் செய்தது ஏன்? என்றும் கேள்வி எழுப்பினார். 

இதற்கு இளையராஜா சார்பில், “பாடல்கள் பயன்படுத்தப்பட்டது தொடர்பாக தயாரிப்பு நிறுவனத்திற்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. ஆனால் அதுபோல எந்த நபரும் இல்லை என்று கூறி அந்த நோட்டீஸ் திரும்ப அனுப்பப்பட்டது” என்று தெரிவிக்கப்பட்டது. 

அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததால் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த நவம்பர் 26ஆம் தேதி நீதிபதி செந்தில்குமார் ஒத்தி வைத்திருந்தார். 

இந்நிலையில் இன்று (நவம்பர் 28) தீர்ப்பு வழங்கிய நீதிபதி செந்தில்குமார்,  “படத்தில் பாடல்கள் உருமாற்றம் செய்வதால் இளையராஜாவின் புனிதத் தன்மை பாதிக்கும் நிலை உள்ளது. எனவே டியூட் படத்தில் பயன்படுத்தப்பட்ட அவரது பாடல்களை உடனடியாக நீக்க வேண்டும்” என்று உத்தரவு பிறப்பித்தார். 

இந்த சூழலில் பாடல்களை நீக்க ஏழு நாட்களில் அவகாசம் வேண்டும் என்று மைத்திரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் கேட்டது. 

இதற்கு மறுப்பு தெரிவித்த நீதிபதி இளையராஜாவின் மனுவுக்கு பதிலளிக்க வேண்டும் என்று தயாரிப்பு நிறுவனத்துக்கு உத்தரவிட்டு வழக்கு விசாரணையை ஜனவரி 7ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Kavi

சமூகம், அரசியல், நீதி நிர்வாகம் சார்ந்த பிரச்சினைகள் குறித்து 2016ஆம் ஆண்டிலிருந்து எழுதி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel