கடலூர் மாவட்டத்திற்கு கள ஆய்வுக்காக சென்ற முதல்வர் ஸ்டாலினிடம் நெய்வேலி ஜவஹர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜனனி கொடுத்த கவிதை ஸ்டாலின் கவனத்தை ஈர்த்துள்ளது. இதனை தொடர்ந்து தொலைபேசியில் மாணவி ஜனனியை தொடர்பு கொண்ட ஸ்டாலின், அவரை பாராட்டியுள்ளார். Neyveli college student Janani
இரண்டு நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் கடலூர் மாவட்டத்திற்கு சென்றிருந்தார். கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகே உள்ள திருப்பயரில் பள்ளி கல்வித்துறை சார்பில் ’பெற்றோரைக் கொண்டாடுவோம்’ மண்டல மாநாட்டில் நேற்று (பிப்ரவரி 22) கலந்து கொள்வதற்காக நெய்வேலி ஹெஸ்ட் ஹவுஸிலில் இருந்து காலையில் புறப்பட்டார் ஸ்டாலின்.
அப்போது நெய்வேலி நேரு சிலை, தொமுச ஆபீஸ் அருகே, 21-வது பிளாக் சூப்பர் பஜார் ஆகிய மூன்று இடங்களில் ஆயிரக்கணக்கான கல்லூரி மாணவ, மாணவிகள் திரண்டிருந்து ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். அப்பா என்ற வாசகத்துடன் ஸ்டாலினுக்காக பதாகைகள் வைக்கப்பட்டிருந்தது.

மாணவர்கள் கூட்டத்தை பார்த்தவுடன் மகிழ்ச்சியடைந்த ஸ்டாலின், காரில் இருந்து கீழே இறங்கினார். மாணவர்களை சந்தித்து அவர்களிடம் கைகொடுத்து தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார்.
அந்த கூட்டத்தின் இடையே முதல்வர் ஸ்டாலினை சந்தித்த நெய்வேலி ஜவஹர் கல்லூரியைச் சேர்ந்த மாணவி ஜனனி, ‘முதல்வர் அப்பா முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் அவர்களுக்கு’ எனத் தொடங்கி தான் எழுதிய கவிதையை பரிசாக அளித்தார். பல்வேறு மனுக்கள் பெற்றதைப் போல முதல்வரும் இதை வாங்கிக் கொண்டார்.
காரில் செல்லும் போது தான் வாங்கிய மனுக்களை எல்லாம் படித்துவிடும் பழக்கம் கொண்டவர் ஸ்டாலின். அந்த வகையில் மாணவி ஜனனி கொடுத்த காகிதத்தைப் பிரித்த ஸ்டாலின், கோரிக்கைக்கு பதிலாக கவிதை இருந்ததைப் பார்த்து, படித்துவிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளார்.
கடலூர் மாவட்ட நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நேற்று மாலை சென்னை வந்தடைந்த ஸ்டாலின், கட்சி நிர்வாகிகளைத் தொடர்புகொண்டு ஜவஹர் கல்லூரி மாணவி ஜனனியின் தொடர்பு எண்ணை கேட்டுள்ளார்.

இதனையடுத்து நேற்று (பிப்ரவரி 22) இரவு 9 மணிவாக்கில் ஸ்டாலின் உதவியாளர் ஜனனியின் அப்பா சஞ்சீவ் காந்தியை தொடர்புகொண்டு, ‘மாணவி ஜனனியிடம் முதல்வர் பேச வேண்டும் என்று விரும்புகிறார். ஜனனிக்கிட்ட போனைக் கொடுக்கிறீங்களா?’ என்று கேட்டுள்ளார். இன்ப அதிர்ச்சி அடைந்த தந்தை சஞ்சீவ் காந்தி, “நான் வெளியூர்ல இருக்கேன். என் மூத்த பொண்ணு வீட்ல தான் இருப்பா. அவளோட நம்பர் கொடுக்கிறேன்” என்று தனது மூத்த மகள் சந்தியாவின் மொபைல் எண்ணை கொடுத்துள்ளார்.
உடனடியாக சந்தியாவை தொடர்புகொண்ட சஞ்சீவ் காந்தி, “இன்னும் கொஞ்ச நேரத்துல சிஎம் சார் போன் பண்ணுவாங்க. அட்டெண்ட் பண்ணி ஜனனிக்கிட்ட கொடுத்துடு” என்று தெரிவித்துள்ளார்.
இதைக்கேட்ட ஜனனி சந்தோஷத்தில் ஸ்டாலின் அழைப்புக்காக தனது அக்கா மொபைலை பார்த்தபடியே உட்கார்ந்திருந்திருக்கிறார். இரவு சரியாக 9.50 மணிக்கு அழைப்பு வருகிறது.
எதிர்முனையில் “நான் மு.க.ஸ்டாலின் பேசுறேன். நல்லா இருக்கீங்களாமா? எதுக்காக இந்த கவிதை எழுதீங்கன்னு தெரிஞ்சுக்கலாமா?” என்று அன்போடு கேட்டிருக்கிறார்.
அதற்கு மாணவி ஜனனி, “சார், நான் ஆல்ரெடி நிறைய கவிதை எழுதிருக்கேன். வீட்ல தனியா இருக்கும் போது கவிதை எழுதுவேன். கவிதை போட்டியில வெற்றி பெற்று கலெக்டர் கையால பரிசு வாங்கியிருக்கேன். நல்லா இருந்துச்சா சார் நான் எழுதுன கவிதை?” என்று ஸ்டாலிடம் கேட்டார்.

சிரித்தபடியே பதிலளித்த ஸ்டாலின், “சூப்பர்மா… சூப்பர்மா…” என்று பாராட்டினார்.
“என்னால உங்கக்கூட போட்டா தான் சார் எடுக்க முடியல. நான் ரொம்ப டிரை பண்ணேன்” என்று வருத்ததுடன் மாணவி சொன்னதும்,
”அய்யய்யோ… எல்லோரும் போட்டோ எடுத்தாங்களே. நீங்க ஏன் எடுக்காம விட்டீங்க” என்று ஸ்டாலின் கேட்கிறார்.
“என்கிட்ட போன் இல்லை சார். அக்கா போன்ல தான் பேசிக்கிட்டு இருக்கேன். எனக்கும் உங்கள மாதிரி படிச்சி பெரிய லெவல்ல வரனும்னு ரொம்ப நாள் ஆசை சார். ஆனா, வசதி கொஞ்சம் இல்லை சார்” என்று சோகமான குரலில் சொல்கிறார் ஜனனி.
உடனே ஸ்டாலின், “படிப்பு விஷயத்தை பொறுத்தவரை எந்த உதவினாலும் கேளுங்க. நான் செய்யுறேன். எதையும் பத்தியும் கவலைப்படாதீங்க. நல்லா படிங்க” என்று மாணவிக்கு நம்பிக்கை அளித்தார்.
“சார்… அம்மா உங்கக்கிட்ட பேசணும்னு ரொம்ப நேரம் கேக்குறாங்க. பேசுறீங்களா சார்” என்று மாணவி கேட்டதும், ”கொடுங்க கொடுங்க” என்று ஸ்டாலின் சொல்கிறார்.

“என் பிள்ளைங்கள படிக்க வைக்க ரொம்ப கஷ்டப்படுறேன் சார். சின்ன புள்ளையில இருந்து நல்லா பேசுவா சார். அவக்கிட்ட பேச்சுத்திறமை நிறைய இருக்கு சார். என் புள்ளைங்கள படிக்க வைக்க உதவி செய்யுங்க சார்” என்று ஸ்டாலிடம் உதவி கேட்டார் ஜனனியின் தாய் உஷாராணி.
“படிப்பு விஷயத்துல எதைப்பத்தியும் கவலைப்படாதீங்க. நாங்க படிக்க வைக்கிறோம்” என்று மீண்டும் ஸ்டாலின் உறுதியளித்தார். அம்மாவிடம் இருந்து போனை வாங்கிய ஜனனி, “சார்… சாப்டீங்களா சார்” என்று மிகவும் உரிமையுடன் கேட்கிறார்.
அதற்கு ஸ்டாலின்,” இனிமேதான்மா சாப்பிடனும்” என்றார்.
“உங்க சன்ன (துணை முதல்வர் உதயநிதி) கேட்டதா சொல்லுங்க சார். நான் அவருக்கு ரொம்ப பெரிய ஃபேன் சார்” என்று ஜனனி சொன்னதும் சிரித்தபடியே ஸ்டாலின், “நான் அவரை பார்த்தே நாலு நாள் ஆகுது. கட்டாயமா சொல்றேன்மா” என்றார்.
“எங்க அக்கா உங்கள பார்க்கணும்னு குழந்தையோட வந்தா. ஆனா, கூட்டத்துல பார்க்க முடியலை சார். நிறைய பேரு என்னை தள்ளி விட்டாங்க. ஆனா, உங்கள பார்த்தே ஆகணும்னு முயற்சி பண்ணி இந்த கவிதையை கொடுத்தேன். உங்களுக்காக நானே அரை மணி நேரத்துல இந்த கவிதையை எழுதுனேன் சார்” என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார் ஜனனி.

“ரொம்ப நன்றிமா. உங்க தைரியத்தை பாராட்டணும். தொடர்ந்து நல்லா படிங்க” என்று மாணவி ஜனனியை உற்சாகப்படுத்தி ஸ்டாலின் போனை வைத்தார்.
கல்வி கற்க வறுமை ஒரு தடையாக இருக்ககூடாது என்று பார்த்துப் பார்த்து மாணவர்களுக்கான திட்டங்களை தீட்டி வரும் முதல்வர் ஸ்டாலின், மாணவி ஜனனியின் கல்வியையும் கவனிப்பார் என்று நம்புவோம். Neyveli college student Janani