தர்மபுரி பகுதியில் புதிய வீரப்பனாக கருதப்பட்டு, தமிழ்நாடு மற்றும் கர்நாடக வனத்துறையால் தேடப்பட்டு வந்த செந்தில் என்பவர் பற்றிய அதிர்ச்சி தகவல் தற்போது கிடைத்துள்ளது.
தர்மபுரி பகுதியில் தந்தத்துக்காக யானையை சுட்டுக்கொன்று பிடிபட்ட செந்தில் என்பவர் கைது செய்யப்பட்டார். இறந்து போன யானையில் இருந்த இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பித்த செந்தில், விஜயகுமார், துணையாக இருந்த செந்திலின் தந்தை கோவிந்தராஜ், தந்தத்தை வாங்க முயற்சித்த தினேஷ் ஆகிய நான்குபேரை காவல் துறையினர் உதவியுடன் பிடித்தனர் வனத்துறையினர்.
கள விசாரணைக்காக இவர்களை கடந்த, மார்ச் 18 ஆம் தேதி யானை சுடப்பட்ட பகுதிக்கு நேரடியாக அழைத்துச் சென்றிருந்தனர். அப்போதுதான் கை விலங்கோடு தப்பிச்சென்றார் செந்தில். New Veerappan body Dharmapuri forest
இவரை தமிழக மற்றும் கர்நாடக வனத்துறையினர் தொடர்ந்து தேடி வந்தனர். இதுகுறித்த மின்னம்பலத்தில் மார்ச் 20 ஆம் தேதி, ’மீண்டும் ஒரு வீரப்பன்? – யானையை கொன்றவன் கை விலங்கோடு தப்பியது எப்படி?, மார்ச் 23 ஆம் தேதி, ’பைக்கை தூக்கி பரிசலில் போட்டு… மான் கறியால் விஐபிகளை மயக்கி… புதிய வீரப்பன் பற்றி பகீர் தகவல்கள்!’ என்ற தலைப்புகளில் தொடர்ச்சியாக புலனாய்வு செய்திகளை வெளியிட்டு வந்தோம்.
இந்நிலையில் நேற்று ஏப்ரல் 3ஆம் தேதி இரவு தர்மபுரி மாவட்ட வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு ரகசிய தகவல் கிடைத்தது. அதாவது மார்ச் 18 ஆம் தேதி கைவிலங்கோடு தப்பிச் சென்ற செந்தில், பென்னாகரம் காட்டுப்பகுதியில் சடலமாக கிடக்கிறார் என்பதுதான் அந்த தகவல்.
உடனடியாக அந்தப் பகுதிக்கு சென்ற வனத்துறையினர் சுற்றுவட்டார வனப்பகுதி முழுவதும் போலீசாரை அலர்ட் செய்திருக்கிறார்கள்.
காட்டுப் பகுதியில் கண்டெடுக்கப்பட்ட செந்திலின் உடலின் கை விலங்கு இல்லை… மேலும் டி கம்போஸ் ஆகி இருப்பதாகவும் அதனால் இரண்டு நாட்களுக்கு முன்பே அவர் இறந்திருக்கலாம் என்றும் வனத்துறை வட்டாரங்களில் கூறுகிறார்கள்.
சட்டமன்றம் நடந்து வரும் இந்த நிலையில், தர்மபுரி போலீசார், வனத்துறையினர் இந்த விஷயத்தை எச்சரிக்கையோடு கையாண்டு வருகிறார்கள். New Veerappan body Dharmapuri forest
இன்று மாலை செந்திலின் உடல் அரசு மருத்துவமனைக்கு எடுத்துச் செல்லப்படும் என்று தெரிகிறது. இரு மாநில வனத்துறையாலும், போலீஸாலும் தேடப்பட்டு வந்த செந்தில் எப்படி இறந்தார் என்பது மர்மமாக உள்ளது.