பைக்கை தூக்கி பரிசலில் போட்டு… மான் கறியால் விஐபிகளை மயக்கி… புதிய வீரப்பன் பற்றி பகீர் தகவல்கள்!

Published On:

| By vanangamudi

தர்மபுரி மாவட்ட காட்டுப்பகுதியில் வீரப்பனைப் போலவே இன்னொருவன் உருவாகி யானையைக் கொன்று தந்தத்தை கடத்தி இருக்கிறான். Dharmapuri Elephant death arrested

அவனை கைது செய்து அழைத்துச் சென்றபோது கை விலங்கோடு தப்பித்து நான்கு நாட்கள் ஆகும் நிலையில், தமிழக வனத்துறையினரும் கர்நாடக வனத்துறையினரும் அவனைத் தேடி தீவிர வேட்டையில் ஈடுபட்டிருக்கிறார்கள்.

கர்நாடகா, தமிழ்நாடு போலீஸ் சேஸிங்!

இதற்கிடையே, யானையைக் கொன்று தந்தம் கடத்திய அந்த செந்தில் பற்றி மேலும் சில அதிர வைக்கும் தகவல்கள் நமது விசாரணையில் கிடைத்துள்ளன.

தர்மபுரி மாவட்டம் கொங்கராம்பட்டி கோபி நத்தம் என்பதுதான் வீரப்பனின் சொந்த ஊர். இதே ஊரில் தான் செந்திலும் இருந்து இருக்கிறான்.

காவிரி ஆற்றின் அந்தப் பக்கம் கர்நாடக எல்லையில் செங்கம்பட்டி கிராமமும், இந்தப் பக்கம் தமிழ்நாட்டு எல்லையில் கொங்கராம்பட்டி கிராமமும் அமைந்துள்ளன.

கொங்கராம்பட்டியில் இருந்து செங்கம்பட்டிக்கு ஜீப்பில் போக வேண்டுமென்றால், 2 மணி நேரமாகும். ஆனால், பரிசல் என்றால் ஆற்றைக் கடந்து அரை மணி நேரத்தில் சென்றுவிடலாம்.

கொங்கராம்பட்டி கோபி நத்தத்தில் பல சம்பவங்களை செய்துள்ள செந்தில், வனத்துறையும் போலீசும் தன்னை தேடும் போது… ஒரு பைக்கை தூக்கி பரிசலில் போட்டுக்கொண்டு அரை மணி நேரத்தில் அந்தப் பக்கம் போய் விடுவான்.

ஆறு மாதங்களுக்கு முன்பு, வனத்துறையை ஆக்கிரமித்து விவசாயம் செய்வதாக குற்றம் சாட்டி வனத்துறை அதிகாரிகள் செந்திலுக்கு சம்மன் அனுப்பினார்கள். அபராதமும் விதித்தார்கள். ஆனால், செந்தில் அவர்களை கண்டு கொள்ளவே இல்லை.

செந்தில், கிரேட் எஸ்கேப்!

அது மட்டுமல்ல வழக்கம்போல தனது பைக்கை தூக்கி பரிசலில் போட்டுக்கொண்டு கொங்கராம்பட்டியில் இருந்து சங்கம்பட்டிக்கு கிளம்பி விட்டான்.

செந்திலை தேடி அலுத்துப் போன தமிழக வன அதிகாரிகள், எப்படியும் அங்க தான் வந்து இருப்பான் என கர்நாடகா வனத்துறைக்கு தகவல் அனுப்பினர்.

செங்கம்பட்டி கிராமத்தில் இருந்த செந்திலை கர்நாடக வனத்துறை அதிகாரிகள் மூவர் சேர்ந்து பிடித்து விட்டனர்.

“செந்திலை பிடித்து விட்டோம் வந்து கூட்டிட்டு போங்க” என தமிழக வனத்துறைக்கு அவர்கள் தகவல் அனுப்பினார்கள். கொங்கராம்பட்டியில் இருந்து ஜீப்பில் செங்கம்பட்டி செல்வதற்கு இரண்டு மணி நேரம் ஆகும் என்பதால் தமிழக வனத்துறை அதிகாரிகள் அரக்கப்பறக்க புறப்பட்டனர்.

இவர்கள் வரும் வரை செந்திலை பாதுகாப்பாக வைக்க வேண்டும் என்பதற்காக உயரமான சுவர்களைக் கொண்ட ஒரு பழைய கட்டிடத்தில் அவனை அடைத்து வைத்தனர் கர்நாடக வனத்துறையினர். ஆனால், தமிழக வனத்துறையினர் ஜீப்பில் செல்வதற்குள் செந்தில், கிரேட் எஸ்கேப்.

தப்பித்து செந்தில் சாலை வழியாக செங்கப்பட்டிக்கு செல்ல மாட்டான்… பரிசல் வழியாகத்தான் செல்வான் என கணக்கு போட்ட இரண்டு மாநில வனத்துறை அதிகாரிகளும் ஆற்றோரமாக தேர்தல் வேட்டையை தீவிரப்படுத்தினார்கள். அவர்கள் நினைத்தது மாதிரியே கர்நாடகா வனத்துறையினர் செந்திலை பிடித்து தமிழக வனத்துறை இடம் ஒப்படைத்தார்கள்.

செந்திலை தேடும் போலீஸ்!

அவனை செங்கம்பட்டிக்கு கூட்டிவந்து சட்ட ரீதியாக நடவடிக்கை எடுத்து சிறைக்கு அனுப்பினர் தமிழக வனத்துறை அதிகாரிகள்.

அதன் பிறகு ஜாமினில் வெளியே வந்த செந்தில், அதற்குப் பிறகு மேலும் தனது நடவடிக்கைகளை தீவிரமாக்கி விட்டான்.

இந்த பின்னணியில் தான் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி ஒரு ஆண் யானையை நெற்றியில் நாட்டுத் துப்பாக்கியால் சுட்டுக்கொன்று அதன் தந்தத்தை கடத்தி இருக்கிறான்.

அதற்குப் பிறகும் அவனை கைது செய்த வனத்துறையினர் கடந்த மார்ச் 18 ஆம் தேதி, யானையை எப்படி சுட்டான் என்பதை அறிந்து கொள்வதற்காக சம்பவம் நடந்த இடத்துக்கு அவனை அழைத்து சென்றிருந்தனர்.

அந்த இடம் ஜீப் செல்ல முடியாத பகுதியில் இருந்தது. ஜீப்பை ஒரு குறிப்பிட்ட இடத்தில் நிறுத்திவிட்டு கை விலங்கு போட்டபடி அங்கிருந்து செந்திலை நடத்தி அழைத்து சென்றனர்.

விசாரணை முடித்துவிட்டு மீண்டும் ஜீப்புக்கு திரும்பும் போது திடீரென 12 அடி ஆழத்தில் பாய்ந்து குதித்து வனத்துறை காவலர்களிடமிருந்து கண்ணிமைக்கும் நேரத்தில் தப்பித்து பறந்து விட்டான் செந்தில்.

இது பற்றி மின்னம்பலத்தில் கடந்த மார்ச் 20ஆம் தேதி மீண்டும் ஒரு வீரப்பன் யானையை கொன்றவன் கைவிலங்கோடு தப்பியது எப்படி? என்ற தலைப்பில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.

இந்நிலையில், செந்தில் தப்பித்துச் சென்று இன்றோடு ஐந்து நாட்கள் ஆகும் நிலையில், தமிழக வனத்துறையினர் கர்நாடக வனத்துறையினர் இருவருமே அவனைத் தேடும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளனர்.

அதே நேரம் இது பரபரப்பாக ஆகிவிடக் கூடாது என்பதால் வனப்பகுதிகளில் ஆங்காங்கே ட்ரோன்கள் மூலம் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.

இதற்கிடையில், செந்திலின் மனைவி சித்ரா ஏரியூர் காவல் நிலையத்துக்கு சென்று, “என் கணவரை வனத்துறை அதிகாரிகள் தான் விசாரணைக்கு அழைத்துச் சென்றார்கள். ஆனால், இப்போது அவரைக் காணோம் என்று சொல்கிறார்கள். ஏதோ மர்மம் இருக்கிறது. என் கணவரை கண்டுபிடித்து தர வேண்டும்” என்று புகார் கொடுத்திருக்கிறார்.

ஆனால், நாம் விசாரித்தவரை ஏரியூர் காவல் நிலையத்தில் இந்த புகாரின் மீது இதுவரை எஃப்ஐஆர் பதிவு செய்யப்படவில்லை என்கிறார்கள்.

செந்திலை எப்போது பிடிப்பார்கள் என வனத்துறை வட்டாரங்களில் விசாரித்த போது..

“பொதுவாகவே வனத்துறைக்கு குற்றம் சாட்டப்பட்ட அல்லது தேடப்படுகிற நபர்களை சுட்டுப் பிடிக்கும் அதிகாரம் இல்லை. போலீஸ் ஒத்துழைப்பு இருந்தால்தான் இது சாத்தியம். தமிழக வனத்துறைக்கு தேடுதல் வேட்டை நடத்த போதுமான அளவு ஸ்ட்ரென்த் இல்லை.

இதுல இன்னொரு முக்கியமான விஷயம் என்னவென்றால் இப்போது தப்பித்து சென்றிருக்கும் செந்தில் வீரப்பனின் உறவினர்.

அதாவது வீரப்பனின் தங்கை மாரியம்மாளின் கணவர் அர்ஜுனன். அவருடைய சகோதரர் கோவிந்தராஜன் மகன் தான் இந்த செந்தில்.

மான்கறி சப்ளை!

இந்த சூழலில் பாமக புள்ளிகளின் ஆதரவு செந்திலுக்கு முழுமையாக இருக்கிறது. மேலும், செந்திலின் மனைவி இந்த விவகாரம் தொடர்பாக பாமகவினரிடம் ஆலோசனை பெற்று அதன்படியே செயல்பட்டு வருகிறார்.

இதற்கிடையே, செந்தில் மீது தீவிரமான நடவடிக்கை எடுப்பதற்கு வனத்துறை அதிகாரிகளுக்கு ஒரு தயக்கம் இருக்கிறது.

காரணம் செந்தில் வாராவாரம் மான் வேட்டை நடத்தி சுவையான மான் கறியை முக்கிய அதிகாரிகளுக்கு சப்ளை செய்து வந்திருக்கிறான். அதுமட்டுமல்ல தர்மபுரி மாவட்ட அரசியல் புள்ளிகளுக்கும் இதே போன்ற மான் கறியால் மயக்கி அவர்களை தனக்கு ஆதரவாக மாற்றி வைத்திருக்கிறான் செந்தில்.

இப்படி பல்வேறு வகைகளில் செந்திலைத் தேடும் பணிக்கு ஸ்பீடு பிரேக்குகள் ஏற்பட்டிருக்கின்றன” என்கிறார்கள்.

செந்திலை உடனடியாக கைது செய்து யானையைக் கொன்ற குற்றத்திற்கு அவனுக்கு கடுமையான தண்டனை வாங்கி தருவார்களா? அல்லது அடுத்த வீரப்பனாக அவனைத் துறையே உருவாக்கி விடப் போகிறார்களா? இந்த கேள்விகளுக்கு விடை தெரியாமல் தர்மபுரி வனக்காற்றில் அலைந்து கொண்டிருக்கின்றன. Dharmapuri Elephant death arrested

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share