தருமபுரியில் தந்தத்திற்காக யானையை சுட்டுக்கொன்றுவிட்டு போலீஸ் கஸ்டடியில் இருந்து தப்பியோடிய செந்தில் என்பவரை வனத்துறையினர் தேடி வருகின்றனர்.
தர்மபுரி மாவட்டம் மூலப்பெல்லூர் வனப்பகுதியில் கடந்த பிப்ரவரி 27-ஆம் தேதி தண்ணீர் பருக ஒத்தையாக வந்த 12 வயது ஆண் யானையை புளியமரத்தின் கிளையில் மறைந்து உட்கார்ந்து கொண்டு, யானை நெற்றியில் நாட்டு துப்பாக்கியால் சுட்டுக் கொன்றனர். the elephant killer escape
இறந்து போன யானையில் இருந்த இரண்டு தந்தங்களை வெட்டி எடுத்துக்கொண்டு தப்பித்த செந்தில், விஜயகுமார், துணையாக இருந்த செந்தில் தந்தை கோவிந்தராஜ், தந்தத்தை வாங்க முயற்சித்த தினேஷ் ஆகிய நான்குபேரை காவல் துறையினர் உதவியுடன் பிடித்தனர் வனத்துறையினர். கைதிகளை நேற்று முன்தினம் மார்ச் 18 ஆம் தேதி யானை சுடப்பட்ட பகுதிக்கு நேரடியாக அழைத்துச் சென்று பார்வையிட சென்றனர்.
இதில் கை விலங்கு போட்டு அழைத்து வந்த செந்தில் காட்டிலே தப்பித்து விட்டார் என்ற செய்தியை நமது மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரி பத்திரிகையில் இன்று மார்ச் 20 ஆம் தேதி காலையில் புலனாய்வு செய்தியாக வெளியிட்டு இருந்தோம்.

இந்த நிலையில், இன்று 20 ஆம் தேதி கை விலங்கோடு தப்பிய செந்தில் மனைவி தர்மபுரி மாவட்டம் ஏரியூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.
“வனத்துறையினர் என் கணவர் செந்தில், மாமனார் (கோவிந்தராஜ்) இருவரையும் இரண்டு நாட்களுக்கு முன்பு அழைத்து சென்றனர். மாமனார் கோவிந்தராஜ், விஜயகுமார், தினேஷ் ஆகியோரை கைது செய்துள்ளனர். ஆனால், என் கணவர் எங்கே இருக்கிறார் என்று சொல்ல மறுக்கிறார்கள். அவரைக் கண்டுபிடித்து கொடுங்கள்” என புகார் கொடுத்துள்ளார்.
புகாரைப் பெற்றுக்கொண்ட போலீஸார் மேலிடத்தைத் தொடர்புக்கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கைக்கு காத்து இருக்கின்றனர்.
காட்டில் என்ன நடந்தது என்று வனத்துறை காவலர்களிடம் விசாரித்தோம்.
“செந்தில் நல்ல வாட்டம் சாட்டமாக இருப்பான். வீரப்பனை போல காட்டு வழிகளை நன்றாக அறிந்தவன். வனத்துறையினருக்கு தெரியாமல் மான்களை வேட்டையாடி வந்துள்ளான். இப்போதுதான் யானையை கொன்று தந்தத்தை திருடியுள்ளான். அதைவிட கொடுமை இறந்தது பெண் யானைதான் என நம்பவைக்க வனத்துறையினரை ஏமாற்றும் வகையில் யானை தும்பிக்கையை வெட்டி பிரைவேட் பார்ட்டில் சொறுகி எரித்துள்ளான்.
இவன் சாதாரண ஆள் இல்லை என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக செந்திலுக்கு கை விலங்கு போட்டு சம்பவம் நடந்த இடத்திற்கு அழைத்து வந்தோம். யானையை எப்படி துப்பாக்கியால் சுட்டு கொன்றீங்க? எப்படி வெட்டி எடுத்துட்டு போனீங்க? என்று மகஜர் ( சம்பவத்தை விளக்குதல்) பதிவு செய்து கொண்டு ஆபிஸுக்கு திரும்பினோம்.

கொஞ்சம் தூரம் நடந்து சென்றோம் கண் இமைக்கும் நேரத்தில் 10 அடி பள்ளத்தில் குதித்து கை விலங்கோடு ஓடினான். அவனைப் பிடிக்க எங்கள் வனக்காவலரும் அந்தப் பள்ளத்தில் குதித்து பிடிக்க முயன்றார். ஆனால், அவன் மின்னல் வேகத்தில் மறைந்துவிட்டான். இப்போது இரண்டு நாட்களாக போலிஸும் நாங்களும் (வனத்துறையினர்) தேடி வருகிறோம்” என்கின்றனர் கவலையோடு.
காட்டுப் பகுதியில் உள்ளவர்களிடம் விசாரித்தோம்… “கை விலங்கோடு காணாமல் போன செந்தில் மனைவி பாமக உதவியை நாடியுள்ளார். அதிமுகவினரும் விசாரித்து வருகின்றனர்” என்றார்கள்.
இந்த சம்பவம் நாளை (மார்ச் 21) சட்டமன்றத்தில் வெடிக்குமா என்ற பதட்டத்தில் உள்ளனர் ஆட்சியாளர்கள். the elephant killer escape