விருதுநகர் அருகே தனியார் பட்டாசு ஆலையில் நேற்று (ஏப்ரல் 19) பிற்பகல் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 25 ஆக உயர்ந்துள்ளது.
விருதுநகர் மாவட்டம் கட்டனார்பட்டியில் உள்ள இந்த ஆலையில் சேவைக்காரன் பட்டி, திருத்தங்கல், கோவிந்தநல்லூர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த தொழிலாளர்கள் பணியாற்றி வந்தனர். ஆலையில் 35க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் விடுமுறை நாளான ஞாயிறன்று பட்டாசு தயாரிக்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.பிற்பகல் சுமார் 3.30 மணி அளவில் சரவெடி தயாரித்துக் கொண்டிருந்த அறையில் உராய்வு காரணமாக தீ பற்றி விபத்து ஏற்பட்டது. பலத்த சத்தத்துடன் அறைகள் வெடித்து சிதறின. அங்கிருந்த மூன்று அறைகளும் சிதறி தரைமட்டமாகின.இந்த விபத்தில் பணியில் இருந்த 25 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர். மேலும் சிலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இடிபாடுகளுக்கு இடையே சடலங்கள் சிக்கியிருக்கலாம் என்பதை கண்டறிய, பொக்லைன் இயந்திரம் உதவியுடன் இடிபாடுகளை அகற்றும் பணி நடைபெற்று வந்தது. அப்போது இரவு 7.50 மணியளவில் மீண்டும் சிறிய வெடி விபத்து ஏற்பட்டது. இதில் விருதுநகர் உதவி தீயணைப்பு அலுவலர் முத்துப்பாண்டியன், மகளிர் காவலர்கள் சுபா, கவிதா, காவலர்கள் வேல்முருகன், அய்யனார், போக்லைன் இயந்திர ஓட்டுநர் உள்ளிட்ட 12 பேர் காயமடைந்தனர். அவர்களும் விருதுநகர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழக நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் வருவாய் & பேரிடர் மேலாண்மை துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று மீட்புப் பணிகளை தீவிரப்படுத்தினர். பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்றவர்களுக்கு ஆறுதல் கூறினர்.காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த பட்டாசு ஆலையின் உரிமம் கடந்த ஆண்டு தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டு மீண்டும் வழங்கப்பட்டிருந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
