ADVERTISEMENT

புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி : எங்கெங்கு கனமழை?

Published On:

| By Kavi

வங்கக்கடல் பகுதியில் நாளை புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

வங்கக்கடலில் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்தது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று வலுவிழந்து குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறியுள்ளது.

ADVERTISEMENT

இந்நிலையில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக் கூடும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

இன்று (அக்டோபர் 23) வெளியிட்ட அறிவிப்பில், ‘நேற்று (22-10-2025) தமிழக கடலோரப்பகுதிகளுக்கு அப்பால் நிலவிய ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, இன்று (23-10-2025) காலை 05.30 மணி அளவில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலு குறைந்து வட தமிழக உட் பகுதிகள் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவியது.

ADVERTISEMENT

இது இன்று காலை 08.30 மணி அளவில் தெற்கு உள் கர்நாடகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் நிலவுகிறது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவியக்கூடும்.

நேற்று (22-10-2025) தென்கிழக்கு அரபிக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் மெதுவாக வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று (23-10-2025) காலை 08.30 மணி அளவில் அதே பகுதிகளில் நிலவுகிறது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் வடக்கு-வட மேற்கு திசையில் மத்தியகிழக்கு அரபிக்கடல் பகுதிகளை நோக்கி நகரக்கூடும்.

ADVERTISEMENT

நேற்று (22-10-2025) தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இன்று (23-10-2025) தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவுகிறது. இதன் காரணமாக 24-10-2025 அன்று தென்கிழக்கு மற்றும் அதனை ஒட்டிய மத்தியகிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகக்கூடும். இது, அதற்கடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுவடையக்கூடும்.

23-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், இராணிப்பேட்டை, திருவள்ளூர், கன்னியாகுமரி, திருநெல்வேலி, தென்காசி, தேனி மற்றும் திண்டுக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது.

24-10-2025: தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும், இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கோயம்புத்தூர் மாவட்டத்தின் மலை பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பத்தூர், வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் ஒரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது’ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான வானிலை முன்னறிவிப்பு

வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 31° செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 24-25° செல்சியஸை ஒட்டியும் இருக்கக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share