“போனில் அழைத்தார் மோடி”- நிர்வாகிகள் கூட்டத்தில் அண்ணாமலை பேச்சு!

Published On:

| By Aara

Modi called on the phone - Annamalai speech in the meeting

தமிழக பாரதிய ஜனதா கட்சியின் மாவட்ட தலைவர்கள், மாநில நிர்வாகிகள் கூட்டம் இன்று (அக்டோபர் 5) சென்னை அமைந்தகரையில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.

தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து அதிமுக வெளியேறிய நிகழ்வு, அண்ணாமலையின் டெல்லி பயணம் உள்ளிட்ட பரபரப்பான அரசியல் சூழலில் இந்த கூட்டம் கூடியது.

காலை 10 மணிக்கு  கூட்டம் தொடங்கியது.  மாநில அமைப்பு பொதுச்செயலாளர் கேசவ விநாயகன், மூத்த தலைவர்கள் பொன் ராதாகிருஷ்ணன், ஹெச். ராஜா,  தேசிய மகளிர் அணி தலைவர் வானதி சீனிவாசன் உள்ளிட்டோர் பேசிய நிலையில் 12:00 மணி அளவில் மாநிலத் தலைவர் அண்ணாமலை முகக் கவசம் அணிந்தபடி அரங்கத்துக்கு வந்தார். அவரிடம் பரஸ்பரம் நிர்வாகிகள் உடல் நலம் விசாரித்தார்கள்.

அனைவருக்கும் வணக்கம் தெரிவித்துவிட்டு முகக் கவசத்தை கழற்றி விட்டு உரையாற்ற தொடங்கினார் அண்ணாமலை.”என்னுடைய உடல்நிலையில் அக்கறை கொண்டு நலம் விசாரித்த அனைவருக்கும் நன்றி.

போனில் பேசிய மோடி

பிரதமர் மோடி ஜி இன்று காலை 8.30  மணிக்கு எனக்கு தொலைபேசி மூலம் பேசினார். உடம்புக்கு என்ன ஆச்சு என்று அக்கறையோடு கேட்டார். கடந்த 10 நாட்களாக நடை பயணத்தில் ஏற்பட்ட பருவ நிலை மாற்றத்தால் இருமல், சளி, சற்று மூச்சுத்திணறல் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்தேன்.  ‘உடம்ப பாத்துக்கோ… கிளம்பி டெல்லி வா.. இங்கே எய்ம்ஸ் மருத்துவமனையில் செக்கப் பண்ணலாம்’ என்று என்னை அழைத்தார்.

நான் இங்கே ஆங்கில மருத்துவரிடம் பரிசோதனைகள் செய்துவிட்டு ஆயுர்வேத மருந்துகள் எடுத்துக் கொள்கிறேன்  என்று தெரிவித்தேன்.  மீண்டும் என்னை டெல்லிக்கு வரச் சொல்லி பிரதமர் அக்கறையோடு அழுத்தமாக தெரிவித்தார்” என்று குறிப்பிட்ட அண்ணாமலை அடுத்ததாக கூட்டணி விவகாரம் பற்றி பேசினார்.

கூட்டணிக்கு வரலாம் போகலாம்

“தேசிய ஜனநாயக கூட்டணியில் சில கட்சிகள் சேரலாம்… சில கட்சிகள் செல்லலாம்.  சர்க்கஸ் விளையாட்டு போல இது நடக்கலாம்,. ஆனால் பாஜகவை வலிமைப்படுத்த வேண்டியதுதான் நமது முக்கியமான கடமை. 1965 இல் சிங்கப்பூர் எதற்கும் உதவாது என்று கருதி மலேசியா அதை  பிரிந்து செல்லத் தூண்டியது. அப்போது சிங்கபூரில் குடிதண்ணீர் கூட இல்லை. ஆனால் கடுமையாக உழைத்து மலேசியாவை விட முன்னேறிவிட்டது சிங்கப்பூர்.   தமிழ்நாடு பாஜகவும்  சிங்கப்பூர் போல வளம் மிக்கதாக மாறும். அதற்கு  நாம் உழைக்க வேண்டும்.

டிவி விவாதங்களைப் பார்க்காதீர்கள்!

தமிழ்நாட்டில் தொலைக்காட்சிகளில் மாலை நேரங்களில் நடத்தப்படும் டிவி விவாதங்களைப் பார்த்து நேரத்தை வீணடிக்காதீர்கள். ஏனென்றால் சமூகக் கள நிலவரத்துக்கும் அவர்கள் நடத்தும் விவாதங்களுக்கும் தொடர்பே இல்லை. நான்கு சதவிகித மக்கள் கூட டிவி விவாதங்களைப் பார்ப்பது இல்லை.  டிவிகள் அவர்கள் வருமானத்துக்காகவும், அரசியல் ஆதாயத்துக்காகவும் இதுபோன்ற  விவாதங்களை நடத்துகின்றன. எனவே அவற்றைப் புறக்கணிப்போம் என்று பேசினார் அண்ணாமலை.

திமுக அரசுக்கு எதிராக போராட்டங்கள்!

Modi called on the phone - Annamalai speech in the meeting

மேலும் அவர்,  “2024 நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் திமுகவுக்கு எதிரான, திமுக அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் கூர்மைப்படுத்த வேண்டும். ஒரு கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகை மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கியிருக்கிறது திமுக அரசு. இதன் மூலம் சுமார் 75 லட்சத்துக்கும் மேற்பட்ட பெண்கள், அவர்களின் குடும்பத்தினர் வாக்கு தனக்கு கிடைக்கும் என்று திமுக நம்புகிறது.

ஆனால் அனைத்து மகளிர்க்கும் உரிமைத் தொகை வழங்கவில்லை என்பதை மையமாக வைத்து  நாம் போராட வேண்டும், நமது மகளிரணியினர் மாநகரம் முதல் கிராமங்கள் வரை  உரிமைத் தொகை கிடைக்காத மகளிரைத் திரட்டி அவர்களுக்கும் உரிமைத் தொகை கிடைப்பதற்கான போராட்டங்களில் ஈடுபட வேண்டும்.  இந்த பிரச்சினை உள்ளிட்ட மக்கள் பிரச்சினைகளை மையமாக வைத்து திமுக அரசுக்கு எதிராக பாஜக கடுமையான போராட்டங்களில் ஈடுபட வேண்டும். இன்னும் ஏழு மாதங்கள் நமக்கு கடினமான காலங்கள்தான். தொடர்ந்து போராடவேண்டும்.

மோடிதான் நம் பிராண்ட்

இங்கே நான்  மாநிலத் தலைவராக இருந்தாலும் நமது கட்சியின் முகம் பிரதமர் மோடி அவர்கள்தான். மோடியின் முகத்தை வைத்துதான் மோடியின் ஆட்சியை முன் வைத்துதான் நாம் மக்களை சந்திக்கப் போகிறோம்.  பூத் கமிட்டிகளை முழுமையாக அமைத்திடுங்கள், பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் தத்தமது வாக்குச் சாவடிகளில்  மோடி அரசின் நலத்திட்டங்களால் பயன் அடைந்தவர்களை சந்தியுங்கள். அவர்களிடம் பேசுங்கள்.  மோடி அரசின்  இன்னும் பல நலத் திட்டங்கள் பற்றி மக்களிடம் எடுத்துச் செல்லுங்கள். நமது பிராண்ட்  பிரதமர் மோடிஜிதான்.

Modi called on the phone - Annamalai speech in the meeting

இன்ஸ்டாகிராமுக்குள் பாஜக

சமூக தளங்களில்  பாஜக தீவிரமாக செயல்பட வேண்டும்.  குறிப்பாக 25 வயதுக்கு உட்பட்ட இளைஞர்கள், கல்லூரி மாணவர்கள், மாணவிகள் இன்ஸ்டாகிராமில்தான் அதிகமாக இருக்கிறார்கள். இவர்கள்தான் முதல் முறையாக வாக்களிப்பவர்கள். இவர்களை நோக்கி பாஜக அதிகமாக சென்றடைய வேண்டும். எனவே இன்ஸ்டாகிராமில் பாஜகவினர் தீவிரமாக செயலாற்றுங்கள்.  இளைஞர்கள்தான் நமது இலக்கு. அதற்கு இன்ஸ்டாகிராம் நமது சிறந்த கருவியாக இருக்கும்” என்று பேசினார் அண்ணாமலை.

சுமார் அரைமணி நேரத்துக்கும் அதிகமான தனது பேச்சில் அதிமுக, எடப்பாடி பழனிசாமி போன்ற வார்த்தைகளை அண்ணாமலை உச்சரிக்கவே இல்லை என்பது  குறிப்பிடத் தக்கது.

வேந்தன்

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

தெற்கே தேஜகூவுக்கு அடுத்த அடி: அதிமுகவைத் தொடர்ந்து ஜனசேனாவும் விலகல்!

முக்கிய வீரர்கள் இன்றி தொடங்கியது உலகக்கோப்பை முதல் போட்டி!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel

Comments are closed.

Share