மகளிர் உரிமைத் தொகை திட்டம் பயனர்களுக்கு சென்றடைய சோதனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன்படி பயனர்கள் கொடுத்த வங்கிக் கணக்கு எண்களுக்கு அரசு தரப்பில் ஒரு ரூபாய் அல்லது 10 பைசா அனுப்பப்படுகின்றன.
வரும் செப்டம்பர் 15ஆம் தேதி முதல் திமுகவின் முக்கிய வாக்குறுதியான கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் அமலுக்கு வரவுள்ளது. இந்த திட்டத்தைக் காஞ்சிபுரத்தில் முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கவுள்ளார். இதற்கான வேலைகளை நிதித்துறை செய்து வருகிறது.
1 கோடியே 6 லட்சத்து 50 ஆயிரம் பயனாளர்கள் இத்திட்டத்தில் பயனடைய உள்ளனர். கடந்த செப்டம்பர் 11ஆம் தேதி இதுதொடர்பாக ஆய்வு செய்த முதல்வர் ஸ்டாலின் , அப்போது, “தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் உரிமைத் தொகை வழங்கப்படும். பயனாளிகளுக்கு பணத்தை எடுப்பதில் எந்த சிக்கலும் ஏற்படக்கூடாது. அதிலும் கவனமாக இருக்க வேண்டும்” என்று அதிகாரிகளுக்கு உத்தரவிட்டிருந்தார்.
அந்தவகையில் நேற்றும், இன்றும் எஸ்.பி.ஐ, ஐஓபி உள்ளிட்ட பொதுத்துறை வங்கிகளிடமிருந்து கலைஞர் மகளிர் உரிமைத்திட்ட பயனாளர்களுக்கு ஒரு ரூபாய் அல்லது 10 பைசா அனுப்பப்பட்டு குறுஞ்செய்தியும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இப்படி குறுஞ்செய்தி பெறப்பெற்றவர்கள், மற்றவர்களுக்கு போன் செய்து உங்களுக்கு மெசேஜ் வந்ததா என கேட்டு வருகின்றனர். இன்னும் முழுமையாக தேர்ந்தெடுக்கப்பட்ட அனைவருக்கும் இந்த சோதனை குறுஞ்செய்தியும் பணமும் அனுப்பப்படவில்லை. நாளைக்குள் அனைவருக்கும் வந்து சேரும் என்று நிதித்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
பிரியா
Comments are closed.