DMK vs BJP in 2024 lok shaba election

2024 தேர்தல்… பாஜக vs திமுக தான்: அண்ணாமலை

அரசியல்

2024 ஆம் ஆண்டு தேர்தலில் பாஜகவா திமுகவா என்ற போட்டிதான் என்று மாநில தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

பாஜக மாவட்ட தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கூட்டம் சென்னை அமைந்தகரையில் இன்று (அக்டோபர் 5) நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த அண்ணாமலை, “பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணி 1998-ல் ஆரம்பிக்கப்பட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக என்டிஏ இருக்கிறது. என்டிஏவின் தன்மை என்பது வேறு வேறு காலங்களில் மாறியிருக்கிறது. நிறைய கட்சிகள் வந்திருக்கிறது, நிறைய கட்சிகள் போயிருக்கிறது. நிறைய கட்சிகள் பரிணாமத்தோடு வந்திருக்கிறது.

கூட்டத்தில் என்ன பேசினோம், தலைவர்கள் என்ன பேசினார்கள் என்பது பத்திரிக்கையில் விவாதிக்க வேண்டிய விஷயம் அல்ல. பாஜகவை பொறுத்தவரை தேசிய ஜனநாயக கூட்டணியை பிரதானப்படுத்தி போகிறோம்.

2024 ஆம் ஆண்டு பாஜக நிச்சயமாக தேசிய ஜனநாயக கூட்டணியோடு தமிழகத்தில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தை முன்னெடுக்கும். அதற்கான அறிகுறிகள் 2024 தேர்தலுக்கு முன்பே தெரியும். 2024 தேர்தலில் வெற்றி பெற்ற வேட்பாளர்கள், வாக்கு சதவீதத்தை பார்ப்பீர்கள்” என்றார்.

தொடர்ந்து அவரிடம், அதிமுக கூட்டணியில் இல்லை என்று வருத்தப்படுகிறீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, “வருத்தம் இல்லை. யாருடைய கையிலும் எதுவும் இல்லை. அந்தந்த கட்சிகள், அந்தந்த கட்சியினுடைய வளர்ச்சியை தான் பார்க்க வேண்டும். பாஜக தன்னுடைய வளர்ச்சியை பார்க்கிறது. இதில் எதற்காக வருத்தப்பட வேண்டும் அல்லது சந்தோஷப்பட வேண்டும்.

நான் ஒருத்தர் இருக்கிறார் என்பதற்காக சந்தோஷப்பட்டதும் கிடையாது. ஒருவர் சென்றுவிட்டார் என்பதற்காக வருத்தப்பட்டதும் கிடையாது. என்னுடைய ஒரே நோக்கம் முதல் நாளிலிருந்து பாஜகவை வலிமையடைய செய்ய வேண்டும் என்பது தான். 2024 என்பது பிரதமர் நரேந்திர மோடிக்கான தேர்தல். இதனை 2024-ல் தமிழகத்தில் நீங்கள் பார்ப்பீர்கள். 39 தொகுதியும் நரேந்திர மோடி பக்கம் வரும்.

தமிழகத்தில் பல்வேறு கட்சிகள் என்மீது பல குற்றச்சாட்டுகளை சொல்கிறார்கள். அதற்கெல்லாம் நான் பதில் சொல்லிக் கொண்டிருந்தால் சரியாக இருக்காது. என்னுடைய வேலையை நான் செய்து கொண்டிருக்கிறேன். எந்த பாதையில் நான் செல்ல வேண்டும் என்பதில் தெளிவாக இருக்கிறேன்” என்று பதிலளித்தார்.

தொடர்ந்து, கூட்டணி முடிவால் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக அதிமுக சொல்லிவிட்டது. பாஜக ஏன் அமைதியாக இருக்கிறது என்ற கேள்விக்கு, “அமைதி காப்பதற்கு இதில் எதுவும் இல்லை. 2024 தேர்தலில் எங்கள் கட்சியை சார்ந்த பிரதமருக்கான தேர்தல். 2024 தேர்தல் முடிவு தான் இதற்கான தீர்வு” என்றார்.

அதிமுகவா பாஜகவா என்ற சவாலை முன்வைக்கின்றீர்களா? என்ற கேள்விக்கு, “திமுகவா? பாஜகவா? என்பது தான் சவால். திமுக இங்கு ஆளுங்கட்சியாக இருக்கிறது. பாஜக மத்தியில் ஆளுங்கட்சியாக இருக்கிறது” என்றார்.

ஓபிஎஸ், டிடிவி தினகரன் வந்தால் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு, “இதற்கான கருத்தை சொல்ல வேண்டிய இடத்தில் நான் இல்லை. என்டிஏ விரிவாக்கத்தை தேசிய தலைவர் நட்டா பார்த்துக் கொள்கிறார். இதற்காக தனி குழு உள்ளது. புதிதாக யார் சேர்கிறார்கள் என்ற முடிவை அவர்கள் தான் எடுக்க வேண்டும். ஒரு மாநில தலைவராக நான் கருத்து சொல்வது சரியாக இருக்காது” என்று பதிலளித்தார்.

மோனிஷா

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…

கூட்டணி குறித்து பேசவில்லை: மாவட்ட தலைவர்கள் கூட்டத்துக்குப் பின் பொன். ராதாகிருஷ்ணன் தகவல்!

“தங்கலான்” மிக சவாலான படம், மாளவிகா மோகனன் பதில்..!

+1
0
+1
3
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0