மேகதாது அணை திட்டம்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு.. கர்நாடகா கடும் அதிர்ச்சி!

Published On:

| By Mathi

Mekedatu Karnataka Tamil Nadu

மேகதாது (Mekedatu) அணை கட்டும் கர்நாடகா (Karnataka) அரசின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு (Tamil Nadu) அரசு அதிரடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டுவோம் என்பது கர்நாடகாவில் ஆளும் காங்கிரஸ் அரசின் நிலைப்பாடு. இத்திட்டத்தை தமிழ்நாடு அரசு தொடக்கம் முதலே மிகக் கடுமையாக எதிர்த்து வருகிறது.

ADVERTISEMENT

மேகதாது அணையை கட்டுவதற்கு கர்நாடகா அரசு ரூ9,000 கோடி ஒதுக்கீடு செய்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்கு தொடர்ந்தது.

இவ்வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உச்சநீதிமன்றம்,

ADVERTISEMENT
  • மேகதாது அணை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகா அரசுக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்துள்ளது
  • மேகதாது அணைக்கு மத்திய நீர்வளத்துறை அனுமதி அளித்துவிட்டால் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்து தமிழ்நாடு அரசு சட்ட நடவடிக்கை மேற்கொள்ளலாம் என உத்தரவிட்டது.

உச்சநீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மறுசீராய்வு மனுவைத் தாக்கல் செய்தது. இந்த மனுக்களை உச்சநீதிமன்றம் கடந்த ஏப்ரல் மாதம் தள்ளுபடி செய்துவிட்டது.

இந்நிலையில் மேகதாது அணையை கர்நாடகா கட்டியே தீரும்; அதை தடுக்க தமிழ்நாட்டுக்கு உரிமை இல்லை என கர்நாடகா துணை முதல்வர் டிகே சிவகுமார் தெரிவித்தது தமிழகத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

ADVERTISEMENT

பசுமை தீர்ப்பாயத்தில் தமிழ்நாடு (Tamil Nadu) அரசு வழக்கு

இது தொடர்பாக கடந்த 25-ந் தேதி முதல்வர் விஜய், சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தினார். டெல்லி சென்ற முதல்வர் விஜய், மூத்த வழக்கறிஞர் ஜி உமாபதி உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார். இதனடிப்படையில் தற்போது தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தில் கர்நாடகாவின் மேகதாது அணை திட்டத்துக்கு எதிராக தமிழ்நாடு அரசு மனுத் தாக்கல் செய்துள்ளது.

அதில்,

  • உரிய சுற்றுச் சூழல் அனுமதி பெறாமல் மேகதாது அணைக்கான பூமி பூஜை உள்ளிட்டவை நடத்த தடை விதிக்க வேண்டும்
  • சுற்றுச் சூழல் விதிகளை மீறும் இத்திட்டத்துக்கு மத்திய சுற்றுச் சூழல் அமைச்சகம் அனுமதி தரக் கூடாது என உத்தரவிட வேண்டும்
  • மேகதாது அணை திட்டத்துக்காக லட்சக்கணக்கான மரங்கள் வெட்டப்படும்; இதனால் வனவிலங்குகள், பறவைகள் உள்ளிட்டவை கடுமையாக பாதிக்கப்படும். இவற்றை பாதுகாப்பதும் தமிழ்நாடு அரசின் கடமை.
  • இந்த காரணங்களால் கர்நாடகா அரசின் மேகதாது அணை திட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இம்மனு மீது விரைவில் விசாரணை நடைபெற உள்ளது.

முன்னதாக மேகதாது அணை கட்டுவதை தடுக்க கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம் அனுப்பி இருந்தார். டெல்லியில் பிரதமர் மோடியை சந்தித்த போதும் இதை வலியுறுத்தி இருந்தார். தமிழ்நாட்டில் இன்று முதல்வர் விஜய் அரசை ஆதரிக்கும் சிபிஐ, சிபிஎம் கட்சிகள், கர்நாடகா காங்கிரஸ் அரசைக் கண்டித்து இன்று மே 29-ந் தேதி போராட்டம் அறிவித்துள்ளன.

Photo of author
Mathi

நான் 1993-ம் ஆண்டு முதல் இதழியல் துறையில் பணிபுரிகிறேன். அச்சு, இணையம், காட்சி, ஒலி என அனைத்து ஊடகத் துறையிலும் பணியாற்றிய அனுபவம் இருக்கிறது. தமிழின் பழம் பெரும் நாளேடான தினமணியில் செய்தியாளராக பணியை தொடங்கினேன். உலகின் முதல் தமிழ் செய்தி இணையதளமான தற்போது பயன்பாட்டில் இல்லாத ‘இன்தாம்’ இணையத்தில் செய்திப் பொறுப்பாசிரியராகப் பணியாற்றினேன். இதனைத் தொடர்ந்து ஆஸ்திரேலியா தமிழ் வானொலியின் இந்திய பொறுப்பாளராக, சன் நியூஸ் செய்தி சேனலில் சிறப்பு தொகுப்பு ஆசிரியராக, ஒன் இந்தியா தமிழ் இணையதளத்தில் இணை ஆசியராக பணிபுரிந்தேன். தற்போது மின்னம்பலத்தில் பணியாற்றுகிறேன்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share