ஒரே அணியில் இருந்தாலும் மோதல்! கர்நாடகா காங்கிரஸ் அரசைக் கண்டித்து தமிழக கம்யூனிஸ்ட் கட்சிகள் மே 29-ல் போராட்டம்- காரணம் என்ன?

Published On:

| By Mathi

Left Parties Congress

காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் (Mekedatu Dam) அணை கட்டும் கர்நாடகாவில் (Karanataka) ஆளும் காங்கிரஸ் அரசின் (Congress) முயற்சியைக் கண்டித்து தமிழகத்தில் மே 29-ந் தேதி கம்யூனிஸ்ட் கட்சிகள் கூட்டாக போராட்டம் நடத்துவதாக அறிவித்துள்ளன.

சிபிஐ கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன், சிபிஎம்-ன் மாநில செயலாளர் பெ. சண்முகம், சிபிஐ (எம்.எல்) லிபரேசன் கட்சியின் பழ. ஆசைத்தம்பி கூட்டாக வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டின் பாசனம் மற்றும் குடிநீர் ஆதாரத்தின் உயிர் நாடியாக காவிரி நதிநீர் அமைந்திருக்கிறது. காவிரி நதிநீர் பங்கீடு குறித்து 20ஆம் நூற்றாண்டில் செய்து கொண்ட ஒப்பந்தத்தை கர்நாடக அரசு, தன்னிச்சையாக நிராகரித்து வந்ததால், நீண்ட போராட்டத்திற்கு பிறகு நடுவர் மன்றம் அமைக்கப்பட்டது.

நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பும், உச்ச நீதிமன்றத்தின் மறு ஆய்வுக்கு உள்ளாக்கப்பட்டது. உச்ச நீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின் படி, நீர் பங்கீட்டு அளவை கண்காணிக்க மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு போன்றவை அமைக்கப்பட்டுள்ளன.

இதற்கிடையில், காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை அறிவித்து, பணிகளையும் கர்நாடக அரசு தொடங்கியது. கர்நாடக மாநில அரசின் அத்துமீறல் நடவடிக்கைக்கு தமிழ்நாடு விவசாயிகளும், தமிழ்நாடு அரசும் ஆரம்ப நிலையில் இருந்தே எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன. தமிழ்நாடு அரசு சட்டப் போராட்டத்தையும் முன்னெடுத்து வருகின்றது.

இந்த நிலையில், கர்நாடக அரசின் முறையீட்டை விசாரித்து வரும் உச்ச நீதிமன்றம், கடந்த 2025 நவம்பர் 13 ஆம் தேதி ” மேகதாது அணை குறித்த விரிவான திட்ட அறிக்கையை தயாரித்து நீர்வளத்துறையிடம் தாக்கல் செய்யலாம்” என தீர்ப்பளித்தது. உச்ச நீதிமன்றத்தின் ஒரு சார்பு தீர்ப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 2025 டிசம்பர் 2 ஆம் தேதி தஞ்சாவூரில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் திரண்டு எதிர்ப்புத் தெரிவித்தனர். தமிழ்நாடு அரசும் டிசம்பர் 11 ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனு தாக்கல் செய்துள்ளது.

ஒன்றிய அரசின் நீர்வளத்துறை அமைச்சகம் இந்த வழக்கில் அலட்சியம் காட்டி வந்த நிலையில், ” மேகதாது அணை கட்டும் திட்டம் குறித்த புதிய விரிவான திட்ட அறிக்கை விரைவில் ஒன்றிய அரசிடம் சமர்ப்பிக்கப்படும்” என கர்நாடக மாநில அரசின் துணை முதலமைச்சர் திரு டி. கே. சிவகுமார் செய்தியாளர்களிடம் கூறியிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது.

“காவிரி நதியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்டும் திட்டத்தை எதிர்க்க தமிழ்நாட்டிற்கு எவ்வித உரிமையும் இல்லை” என ஆத்திரமூட்டும் வகையிலும் பேசியுள்ளார்.

ADVERTISEMENT



காவிரி நதிநீர் பங்கீடு, நடுவர் மன்றம், உச்ச நீதிமன்றம் ஆகியவற்றின் இறுதித் தீர்ப்புக்கு எதிராக தொடர்ந்து பேசியும், செயல்பட்டும் வருகிற கர்நாடக அரசையும், தமிழ்நாட்டின் தண்ணீர் உரிமையை பாதுகாப்பதில் அலட்சியம் காட்டி, வஞ்சித்து வரும் ஒன்றிய பாஜக அரசையும் கண்டித்து, மேகதாது அணை கட்டும் திட்டத்தை தடுத்து நிறுத்த தமிழ்நாடு அரசு உறுதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, வரும் 29.05.2026 ஆம் தேதி (வெள்ளிக்கிழமை) மாலை தஞ்சாவூரில் இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு), இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சி (மார்க்சிஸ்டு- லெனினிஸ்டு) லிபரேசன் ஆகிய இடதுசாரி கட்சிகளின் சார்பில் பெருந்திரள் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது.
இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், வணிகர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேராதரவு அளிக்க வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். இவ்வாறு கம்யூனிஸ் கட்சிகளின் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஒரே அணியில் இருந்தாலும் போராட்டம்

தமிழகத்தில் முதல்வர் தலைமையிலான விஜய் அரசுக்கு ஆதரவு தெரிவித்து அமைச்சரவையில் காங்கிரஸ் பங்கேற்றுள்ளது. முதல்வர் விஜய் அரசுக்கு சிபிஐ, சிபிஎம் கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு தருகின்றன. இந்நிலையில் கர்நாடகா காங்கிரஸைக் கண்டித்து தமிழகத்தில் காங்கிரஸ் இணைந்த அணியில் உள்ள கம்யூனிஸ்ட் கட்சிகள் போராட்டத்தை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share