திமுக இளைஞர் அணி மாவட்ட – மாநகர – மாநில அமைப்பாளர், துணை அமைப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் முன்னாள் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில், சென்னையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் நடைபெற்றது.
இதில் 9 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வாக்களர்களுக்கு நன்றி
1.நடந்துமுடிந்த 2026 சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கழகம் மீதும், தலைவர் மீதும் நம்பிக்கை வைத்து தி.மு.க. தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு வாக்களித்த 1 கோடியே 54 லட்சத்து 82 ஆயிரத்து 782 வாக்காளர்களுக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறது.
திமுக தலைவருக்கு நன்றி
2.2026 சட்டமன்றத் தேர்தலில், கொள்கை உறுதியோடு மதச்சார்பின்மை சக்திகளை ஒன்றிணைத்து ‘மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியை’ உருவாக்கி, தேர்தல் களத்தில் நம்மையெல்லாம் வழிநடத்தி, முதன்மை தொண்டராய் ஓய்வில்லாமல் உழைத்து, 73 சட்டமன்றத் தொகுதிகளில் திமுக கூட்டணி வேட்பாளர்கள் வெற்றிபெற முதன்மை காரணமாக விளங்கிய தலைவருக்கு இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கிறது.
திமுக நிர்வாகிகளுக்கு நன்றி
3.2026 தேர்தல் களத்தில், திமுகவுடன் கழகத்துடன் இணைந்து தலைவர் மற்றும் இளைஞர் அணிச் செயலாளர் ஆகியோரின் வழிகாட்டுதலின்படி ஓய்வில்லாமல் உழைத்த இளைஞர் அணி நிர்வாகிகள் அனைவருக்கும் இந்தக் கூட்டம் தனது மனமார்ந்த பாராட்டுதலையும் நன்றியையும் தெரிவித்துக்கொள்கிறது.
வெற்றி பெற்றவர்களுக்கு பாராட்டு
4.2026 சட்டமன்றத் தேர்தலில் திமுக சார்பில் போட்டியிடுவதற்கு இளைஞர் அணியின் மீது நம்பிக்கை வைத்து, கட்சி நிர்வாகிகளுக்கு வாய்ப்பளித்த திமுக தலைவருக்கு மனமார்ந்த நன்றியையும், வெற்றிபெற்ற நிர்வாகிகளுக்கு பாராட்டுகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
உதயநிதிக்கு வாழ்த்து
5.சேப்பாக்கம் – திருவல்லிக்கேணி சட்டமன்றத் தொகுதியில் இருந்து இரண்டாவது முறையாக வெற்றிபெற்ற இளைஞர் அணிச் செயலாளர் உதயநிதி ஸ்டாலினுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பொறுப்பு வழங்கி, வழிநடத்தும், திமுக தலைவருக்கு நன்றியையும், சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராகப் பொறுப்பேற்றிருக்கும் இளைஞர் அணிச் செயலாளருக்கு வாழ்த்துகளையும் இந்தக் கூட்டம் தெரிவித்துக்கொள்கிறது.
கலைஞரின் பிறந்தநாள் கொண்டாட்டம்
6.ஜூன் – 3 முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்த நாள் விழாவை, கருப்பு – சிவப்பு கொடியேற்றி, ஏழை எளிய மக்களுக்கு உதவிகள் வழங்கி, இளைய தலைமுறைக்கும் சென்றுசேரும் வகையில் கலைஞரின் வரலாற்றுச் சாதனைகளை சமூக வலைத்தளங்களில் வீடியோக்களாகப் பகிர்ந்து சிறப்பாக கொண்டாட தலைவர் வலியுறுத்தியுள்ளார். அதன்படி இளைஞரணி சார்பில் ஒன்றிய – நகர – பகுதி – பேரூர்களில் முத்தமிழறிஞர் கலைஞரின் பிறந்தநாளை மக்களுக்கு பயன்படும் வகையில் எழுச்சியுடன் கொண்டாட இக்கூட்டம் தீர்மானிக்கிறது.
கட்சி மறுசீரமைப்புக்கு துணை
7.தேர்தல் களத்தில் திமுக வெற்றிவாய்ப்பை இழந்ததற்கான காரணத்தைக் கண்டறிய கழக நிர்வாகிகள் – உடன்பிறப்புகள் – பொதுமக்கள் என அனைத்துத் தரப்பினரின் கருத்துகளையும் கேட்டறிய இணையதளம் ஒன்றை துவக்கியதோடு, தொகுதிதோறும் சென்று நேரடியாக அனைவரையும் சந்திக்கவும் ஆய்வுக்குழுவை நியமித்திருக்கிறார் திமுக தலைவர்.
இந்த முன்னெடுப்புகளுக்கு நன்றி தெரிவிப்பதோடு, தலைவர் கட்சியில் மேற்கொள்ளவிருக்கும் அனைத்துவகை மறுசீரமைப்பிற்கும் கழக இளைஞர் அணி துணை நிற்பதோடு, வரும் காலங்களில் கழகத் தலைவர் அவர்கள் இடும் கட்டளைகளை – பணிகளை தொய்வின்றி நிறைவேற்றி, கழகப் பணியை மென்மேலும் வீரியத்துடன் மேற்கொள்ள உறுதியேற்கிறோம்.
காங்கிரஸ் ஒரு ஒட்டுண்ணி
8.கடந்த பல தேர்தல்களிலும் தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் போட்டியிட்டுப் பல சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்களைப் பெற்றது காங்கிரஸ். அவர்கள் கட்சியில் இருப்பவர்களை வைத்து களப்பணி செய்யாத நிலையிலும் காங்கிரஸ் வெற்றிபெறக் காரணம் திமுக உடன்பிறப்புகள்தான் என்பதை யாருமே மறுக்க முடியாது! மறைக்க முடியாது!
நடந்து முடிந்த தேர்தலிலும் தி.மு.க.வினரின் உழைப்பினால் 5 சட்டமன்ற உறுப்பினர்களை வென்றனர். தேசிய கட்சியாக இருந்துகொண்டு தேர்தலுக்கு முன்பாகவே மாநிலக் கட்சியான தி.மு.க. உறுப்பினர்களின் வாக்குகளால் மாநிலங்களவை உறுப்பினர் பதவியையும் பெற்றனர்.
இத்தனையும் பெற்றுக் கொண்டு, ஒரு நன்றி கூட சொல்லாமல், நன்றி உணர்ச்சியும் இல்லாமல் ஒரே இரவில் அணி மாறிச் சென்றிருக்கின்றனர். பழம்பெரும் பேரியக்கம் அரசியலின் அடிப்படை நாகரிகத்தைக் கூட கடைப்பிடிக்க முடியாத அளவுக்கு, பதவி ஆசை அவர்களின் மூளையை மழுங்கடித்துவிட்டது.
அடுத்தவர் உழைப்பில் ஒட்டுண்ணியாய் உண்டு கொழுப்பதும், தன் தேவைக்கேற்ப கொள்கை மறந்து துரோகம் புரிவதும் காங்கிரசுக்குப் புதிதில்லைதான். இன்று நமக்குச் செய்த துரோகத்தை, நாளை பதவி கொடுத்த புதிய கூட்டாளிக்கும் செய்வார்கள். பயணிக்கும் படகிலேயே ஓட்டை போடும் அறிவாளிகள்தான் காங்கிரஸ் கட்சியினர்.
தி.மு.க. ஆட்சியமைக்க வேண்டும் என விரும்பிய மக்களின் வாக்குகளால்தான் இன்று அவர்கள் அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளார்களே தவிர, இது அவர்கள் தங்கள் சொந்தச் செல்வாக்கினால் பெற்ற வெற்றியல்ல என்பதைக்கூட உணராமல், வரலாறு படைத்துவிட்டதாக உளறுகிறார்கள்.
சொந்த உழைப்பில் ஒருநாளும் வெற்றி பெற முடியாமல், நம்பியவர்களுக்கெல்லாம் துரோகமிழைக்கும் அறமில்லாத காங்கிரஸ் கட்சிக்கு இந்தக் கூட்டம் தனது வன்மையான கண்டனத்தைப் பதிவு செய்கிறது.
புதிய அரசுக்கு கண்டனம்
9.பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட அனைவரது பாதுகாப்பையும் உறுதி செய்திட பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்த திமுக அரசு மீது விஷமப் பிரசாரங்கள் மற்றும் பொய்ப் பிரச்சாரங்கள் செய்து, சேற்றை வாரி வீசியவர்கள் இன்றைக்கு ஆட்சியில் அமர்ந்திருக்கிறார்கள்.
இவர்கள் ஆட்சிப் பொறுப்பேற்றது முதல் எங்கு பார்த்தாலும் கொலை கொள்ளை பாலியல் வன்கொடுமை போன்ற குற்றச்செயல்கள் தலைவிரித்தாடுகின்றன..
*கோவையில் 10 வயது சிறுமி கடத்தி காட்டுமிராண்டித்தனமாக கொலை செய்யப்பட்டுள்ளார்.
*புதுக்கோட்டையில் நீதிமன்றத்தில் ஆஜராக வந்த சிறுவன் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளான்.
*வந்தவாசியில், ஓடும் லாரியில் 14 வயது சிறுமி கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
*படப்பை அருகே இரட்டைக் கொலை.
*தூத்துக்குடியில் மது தகராறில் கொலை.
*சேலத்தில் மாணவர் அடித்துக் கொலை.
*மணலி புதுநகர் பகுதியில் பிரசாந்த் என்பவர் வெட்டி படுகொலை.
*விச்சூர் கிராமத்தைச் சேர்ந்த 21 வயதான இளைஞர் ஓட ஓட விரட்டிக் கொலை எனக் குற்றப் பட்டியல் நீள்கிறது.
பொறுப்பேற்ற 13 நாட்களிலேயே முப்பதுக்கும் மேற்பட்ட கொலை, கொள்ளை, பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து இன்று தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு தறிகெட்ட செய்திகள் வருகின்றன.
ஆனால், முதலமைச்சர் கோட்டைக் கழற்றினார், கூலிங் கிளாஸ் போட்டார், பொலிரோ கார் ஓட்டிப் பார்த்தார், பேட்டரி காரில் பவனி வந்தார் என்ற ரீல்ஸ்களால் இவற்றைத் திசை திருப்ப பார்க்கிறார்கள்.
இந்த வெற்று விளம்பர நடவடிக்கைகளுக்குப் பதிலாக முதலமைச்சர் அவர்கள் பத்திரிகையாளர்களைச் சந்தித்து மக்களின் கேள்விகளுக்கு பதில் அளிக்க வேண்டும் எனவும், ரீல் ஆட்சியை நிறுத்தி, ரியல் நிர்வாகத்தை வழங்க வேண்டும் எனவும் தி.மு.க. இளைஞர் அணியின் நிர்வாகிகள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
