தவெக அமைச்சரவையில் விசிகவும் இடம்பெற்றுள்ளது. அக்கட்சியின் துணை பொதுச்செயலாளரும், திண்டிவனம் எம்.எல்.ஏ.வுமான வன்னி அரசு அமைச்சராக நேற்று பொறுப்பேற்றார்.
இந்தசூழலில் விசிக தலைவர் திருமாவளவன் பற்றியும், விசிக பதவிக்கு ஆசைப்பட்டு சென்றுவிட்டதாகவும் சமூக வலைதளங்களில் பல்வேறு தகவல்கள் பரவின.
இந்தநிலையில் இன்று (மே 23) சென்னை அசோக் நகரில் திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவரிடம் தற்போதைய அரசியல் நிகழ்வுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.
திமுக கூட்டணியில் உங்களுடைய நிலைப்பாடு என்னவாக இருக்கிறது?. அக்கூட்டணியில் இருந்து வெளியே வந்துவிட்டீர்களா?
தேர்தல் தொடர்பான மற்றும் கூட்டணி தொடர்பான முடிவுகளைத் தேர்தல் நேரத்தில்தான் எடுப்பது வழக்கம். கடந்த காலங்களில் நாங்கள் தொடர்ந்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியில் இடம்பெற்றோம்.
அந்தத் தேர்தல் கூட்டணி நீடிக்க வேண்டும், வலுபெற வேண்டும் என்பதற்காகத் தேர்தலுக்கு முந்தைய காலத்தில் என்னாலான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டேன்.
என்னை ஒரு துருப்புச் சீட்டாகப் பயன்படுத்தி திமுக கூட்டணியைச் சிதறடிப்பதற்குப் பல முனைகளில் இருந்தும் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டார்கள். அதற்கு கிஞ்சித்தும் இணங்காமல், நான் உறுதியாக நின்று திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்த ஒருபோதும் இடம் தர மாட்டேன் என்பதை நடைமுறைப்படுத்திக் காட்டினேன். இதில் யாரும் மாற்றுக் கருத்தை சொல்ல முடியாது.
தேர்தலுக்கு முன்னதாக, இரண்டு ஆண்டுகளாக என்னை குறிவைத்து சமூக ஊடகங்களில் விவாதித்தார்கள். சாதிய, மதவாத சக்திகள் காய்களை நகர்த்தினார்கள். எமது உணர்ச்சிகளைத் தூண்டி, திட்டமிட்ட அவதூறுகளைப் பரப்பினார்கள்.
எதற்கும் நாங்கள் இணங்கவில்லை. திமுக கூட்டணி மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக எந்த அளவுக்கு திமுக தலைவருக்கு உறுதுணையாக இருக்க முடியுமோ, அந்த அளவுக்கு நான் உறுதுணையாக இருந்திருக்கிறேன்.
தேர்தல் முடிவுகளுக்குப் பின்னர் இந்தக் கூட்டணியை காப்பாற்றும் அளவுக்கான வலிமை எனக்கு இல்லை. காங்கிரஸ் எடுத்த முடிவைத் தடுக்கிற வலிமையோ, கம்யூனிஸ்ட் கட்சிகள் எடுத்த முடிவை நிறுத்தவோ எனக்கு வலிமை இல்லை. .
அதேபோல இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் நிலைப்பாட்டுக்குள் என்னால் தலையீடு செய்ய முடியாது. தேர்தலுக்குப் பின்னர் அந்த கூட்டணியைக் கட்டுக்கோப்பாக வைத்திருப்பதற்கோ அல்லது காப்பதற்கோ எனக்கு எந்த முகாந்தரமும் இல்லை. நான் கூட்டணித் தலைவரும் இல்லை.
தவெக-வுக்கு ஆதரவு அளித்தது பற்றி…
தேர்தல் முடிவுகள் வந்த கையோடு காங்கிரஸ் எடுத்த முடிவு, அதனை ஒட்டி அடுத்தடுத்து நிகழ்ந்த அரசியல் காட்சிகள் இவையெல்லாம் நேர்மையாகச் சிந்திப்பவர்கள் அனைவருக்கும் என்னவென்று தெரியும்.
நாங்கள் அவசரப்பட்டு விடவில்லை. இடதுசாரிகள் எடுத்த முடிவை முன்வைத்து, இரண்டரை மணி நேரத்திற்கு மேலாக உயர்நிலைக் குழுவில் விவாதித்து, அந்த முடிவைக் கூட்டணியின் தலைவர் அண்ணன் ஸ்டாலினிடம் விளக்கிச் சொல்லி, அதன் பிறகுதான் அறிவிப்பது என்று நாங்கள் முடிவெடுத்தோம்.
நாங்கள் தவெக கூட்டணியில் இல்லை. ஆதரவு நல்குவதாக இருந்தாலும், இல்லையென்றாலும் அது எங்களுக்கான சுதந்திரம், உரிமை மற்றும் அதிகாரம். ஆனால் பலரும் வெளியில் இருந்து இவர் ஏன் தாமதப்படுத்துகிறார்? என்று அவதூறுகளை பரப்பினார்கள். இன்றும் அவதூறுகளை பரப்புகிறார்கள். இந்தசூழலில் என்னால் இதற்கு பதில் சொல்ல இயலாது. எங்கள் அரசியல் தூய்மையை கலங்கப்படுத்த யாருக்கும் உரிமை இல்லை.
ஒரு கட்சியை உருவாக்கி அதை கட்டுக்கோப்பாக வழிநடத்துவது அவ்வளவு சுலபம் இல்லை.
எனக்கு தேவைப்பட்ட கால அவகாசத்தை நான் எடுத்துக்கொண்டேன்.
8ம் தேதி 4 மணிக்கு இடதுசாரி கட்சிகள் அறிவிப்புச் செய்தார்கள். 9ம் தேதி இரண்டு மணிக்கே நான் தவெக தரப்பினருக்குத் தகவல் கொடுத்துக் கடிதத்தைப் பெற்றுக்கொள்ளச் செய்தேன். நான் பத்திரிகையாளர்களை சந்திக்கத்தான் அழைப்பு விடுக்கவில்லை.
இந்த முடிவை மிக மிக நிதானமாகத்தான் நாங்கள் எடுத்திருக்கிறோம். எங்கள் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் தலைவர் அண்ணன் ஸ்டாலினின் கவனத்திற்குக் கொண்டு சென்று, அவருடைய வாழ்த்துக்களோடு அல்லது ஆதரவோடுதான் அல்லது இசைவோடுதான் இந்த ஆதரவை, குடியரசுத் தலைவர் ஆட்சி வந்துவிடக் கூடாது என்பதைத் தடுப்பதற்காக வழங்குகிறோம் என்று அறிவித்துவிட்டுத்தான் வழங்கியிருக்கிறோம்.
“இல்லை, நீங்கள் அப்படிச் செய்யக் கூடாது” என்று எந்த இடத்திலும் அவர் (முன்னாள் முதல்வர் ஸ்டாலின்) சொல்லவில்லை. இருக்கிற அரசியல் சூழலைப் புரிந்து கொண்டு, 5ம் தேதியே எங்கள் அனைவரையும் அழைத்து, “நாம் எல்லோரும் ஒற்றுமையாக இருந்து செயல்படுவோம், அவர் ஆட்சி அமைப்பதற்கு இடையூறாக நாம் இருக்க வேண்டியதில்லை” என்ற கருத்தைச் சொன்னார். அதுதான் அவரது அரசியல் முதிர்ச்சி.
நீங்கள் அமைச்சரவையில் வரவேண்டும் என்று அவர்கள் விரும்புகிறார்கள்… திருச்சி கிழக்கில் போட்டியிடுவீர்களா?
அமைச்சரவையில் நான் இடம்பெற வேண்டும் என்கிற விருப்பத்தைத் தவெக தரப்பில் வெளிப்படுத்தினார்கள். நான் அதில் உடன்பாடு இல்லை என்பதைத் தொடக்கத்திலேயே சொல்லிவிட்டேன், இப்போதும் அந்த நிலைப்பாட்டில்தான் இருக்கிறேன்.
காங்கிரஸ் உள்ளாட்சித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தலிலும் ஆதரவு தெரிவிப்பதாக சொல்லியிருக்கிறார்கள்… நீங்கள்?
இடதுசாரிகள் எப்படி வெளியிலிருந்து ஆதரவு தெரிவிக்கிறார்களோ, அதைப்போல்தான் நாங்களும் ஆதரவு தெரிவிப்பது என்ற முடிவை எடுத்தோம். ஆனால், காலத்தின் கட்டாயத்தின் படி, தமிழக மக்கள் கூட்டணி ஆட்சி முறையை விரும்புவதால், இதை நடைமுறைப்படுத்துங்கள் என்று எங்கள் இயக்கத்தின் முன்னணி பொறுப்பாளர்கள் அந்த விவாதத்தை மீண்டும் தொடங்கினார்கள்.
ஆக, கட்சியில் உள்ள பெரும்பாலானோர் இந்த அமைச்சரவையில் இடம்பெற வேண்டும், அதுவும் கட்சி தலைவராகிய நீங்களே இடம்பெற வேண்டும் என்று வலியுறுத்திய போது, தனிப்பட்ட முறையில் என் தொடர்பான முடிவை நான் வலுவாக எடுக்க முடியும், கட்சி தொடர்பான முடிவை மறுதளித்து என் முடிவை திணிப்பது என்பது ஜனநாயகமாக இருக்க முடியாது.
ஆகவே, கட்சியின் பெரும்பாலான தோழர்கள் அமைச்சரவையில் இடம்பெறுவது என்பது காலத்தின் கட்டாயம். இதுவரையில் தமிழக அரசியல் களத்தில் கூட்டணி ஆட்சி முறை உருவானதில்லை, அது முதல் வாய்ப்பு. இதுவரையில் ஒரு அம்பேத்கர் இயக்கம் அமைச்சரவையில் பங்கேற்பதற்கான ஒரு வாய்ப்பு உருவாகவில்லை, இப்போது உருவாகி இருக்கிறது. இது இரண்டாவது ஒரு மாற்றம். ‘இதை உங்களுடைய ஈகோவுக்காக, அதாவது தனிப்பட்ட முறையிலே தலைவர் அமைச்சரவையில் இடம்பெற வேண்டாம் என்று எடுத்திருக்கிற அந்த முடிவுக்காக இந்த வாய்ப்பை மறுதளிப்பது ஏற்புடையது அல்ல’ என்ற கருத்தை முன்னணி பொறுப்பாளர்கள் பலரும் வற்புறுத்திய நிலையில், இந்த நேரத்தில் கட்சிக்கு கட்டுப்படுவது என்னுடைய பொறுப்பு” என்று கூறினார் திருமாவளவன்.
