திருச்சி (Trichy) அரசு மருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் செவிலியர் மாணவி உயிரிழந்ததாக சர்ச்சை வெடித்துள்ளது.
புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் மாணவி சீதாலட்சுமிக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென காய்ச்சல் மற்றும் சளி பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதற்காக அவர் தான் படித்து வந்த திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு பொது மருத்துவமனையிலேயே சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அப்போது, மூக்கில் சதை வளர்ந்துள்ளதால் அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. ஆனால் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டு பலனின்றி மாணவி சீதாலட்சுமி உயிரிழந்தார்.
செவிலியர் மாணவி சீதாலட்சுமிக்கு தவறான ஊசி செலுத்தப்பட்டதே மரணத்திற்குக் காரணம் என சக செவிலியர் மாணவிகளும், அவரது பெற்றோரும் குற்றம் சாட்டி மருத்துவமனை வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் அங்கு பதற்றம் ஏற்பட்டது.
இதனையடுத்து இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ், மாவட்ட ஆட்சியர் சரவணன், செவிலியர் மாணவிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.
இதனிடையே இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த சென்னை ராஜீவ்காந்தி மருத்துவமனை மருத்துவர்களை உள்ளடக்கிய வல்லுநர் குழு ஒன்றை தமிழ்நாடு அரசு அமைத்துள்ளது.
