தமக்கு ஜாதிய அடிப்படையில்தான் தமிழ்நாடு நகர்ப்புற மேம்பாட்டு வாரியத்தின் தலைவர் பதவியை முதல்வர் ஜோசப் விஜய் (CM Vijay) கொடுத்துள்ளதாக தவெக மூத்த தலைவர் கு.ப. கிருஷ்ணன் (Ku. Pa. Krishnan) பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
திருச்சியில் நேற்று மே 22-ந் தேதி செய்தியாளர்களிடம் கு.ப.கிருஷ்ணன் கூறியதாவது: திருச்சி மக்களுக்கு ஒரு மகிழ்ச்சியான ஆணையைப் பற்றி உங்களிடத்தில் தெரிவிக்க நான் ஆசைப்படுகிறேன்.
தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக பல்வேறு குடியிருப்புகளை உருவாக்குதல், உறைவிடங்களுக்குரிய மறு குடியேற்றம் செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்வதற்கு மாநில தலைவராக, எங்கள் இல்லத்திலும் உள்ளத்திலும் கவர்ந்த ஜோசப் விஜய் அவர்கள், அந்த வாரியத்தின் தலைவராக என்னை நியமனம் செய்திருக்கிறார்.
நான் லால்குடியிலே போட்டியிட்டு குறைந்த வாக்கு வித்தியாசத்தில் தோல்வி அடைந்திருந்தாலும், அதை நினைவில் கொண்டு எனக்கு இந்த பதவியை முதல்வர் விஜய் வழங்கியிருக்கிறார்கள்.
ஜாதிக்காக பதவி தந்த விஜய்
இதிலே ஒரு மகிழ்ச்சியான செய்தி என்னவென்று சொன்னால், ‘ஏதோ கு.பா. கிருஷ்ணன் சாதியைச் சொல்லுகிறான்’ என்று நீங்கள் எண்ண வேண்டாம். நாளைக்கு (மே 23) திருச்சியிலே சதய விழா (பெரும்பிடுகு முத்தரையர் சதய விழா).
எங்கள் அரசு, எங்களுடைய விஜய் அரசு, தமிழகத்தில் வெற்றிக் கழகத்தினுடைய அரசு பொறுப்பேற்று, திருச்சியிலே நடத்தக்கூடிய விழா நாளை காலையிலே நடைபெறுகிறது. இந்த விழாவிலே கலந்துகொள்வதற்கு தமிழ்நாடு மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் அவர்கள் வருகிறார்கள். அவர்களோடு இணைந்து நாங்களெல்லாம் அந்த விழாவிலே கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, என்னை இந்த பதவியிலே அமர்த்தி இருக்கிறார்கள்.

இதனை நான் எதற்காக வலியுறுத்திச் சொல்லுகிறேன், நண்பர்கள் கோபித்துக் கொள்ளக் கூடாது.
முத்தரையர் மக்களுக்கு ஒரு ரெண்டு நாளாக ஒரு நெருடல். அவர்களுக்கு என்ன நெருடல்ன்னா, நம்முடைய தலைவர் விஜய் அவர்கள் சாதி மதம் பார்க்காமல், எல்லா தரப்பினருக்கும் அமைச்சர் பதவி தந்திருக்கிறார்கள். ஆனால், ‘எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு தரவில்லையே’ (முத்தரையர்) என்ற ஆதங்கம் என்னிடத்திலும் பேசப்பட்டது, நாட்டிலும் பேசப்பட்டது. அவருடைய காதுக்கும் போயிருக்க வேண்டும்.
எனவேதான், நாளை தினம் சதய விழாவிலே, அமைச்சரோடு நான் கலந்து கொள்ள நாளை அனுமதித்தால், பத்திரிகையிலே முன்னாள் அமைச்சர் என்றுதான் போடுவார்கள். ஆனால், அது இருக்கக் கூடாது என்று விரும்பி, கு.பா.கிருஷ்ணனுக்கு தமிழ்நாடு போர்டுடைய தலைவராக நியமனம் செய்து, ஒரு அங்கீகாரத்தைத் தந்திருக்கிறார்கள்.
இது எனக்குக் கிடைத்த அங்கீகாரம் அல்ல. கோரிக்கை வைத்த சில சகோதரர்கள், சமுதாயத்தைச் சார்ந்தவர்கள் வைத்திருக்கக்கூடிய எண்ணம், அவர் மீது பெற்றிருக்கக்கூடிய பற்று, பாசம்… இதை வெளிப்படுத்தும் விதமாகத்தான், இன்றைக்கு மாலையிலே இந்த அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார்கள். இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.
