சேலத்தில் அரசு டாஸ்மாக் மதுபான கடைகள் மூடல்! தனியார் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் ‘குடிமகன்கள்’

Published On:

| By Pandeeswari Gurusamy

TASMAC Employees Go on Strike

சேலத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் போராட்டம் காரணமாக மதுப்பிரியர்கள் மனமகிழ் மன்றம் என அழைக்கப்படும் தனியார் கடைகளில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் சூழல் நிலவுகிறது.

தமிழகத்தில் 4,000-க்கும் மேற்பட்ட டாஸ்மாக் கடைகள் செயல்பட்டு வரும் நிலையில், புதிய முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்றதைத் தொடர்ந்து, முதற்கட்டமாக 717 டாஸ்மாக் கடைகள் மூடப்படுவதாகத் தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இந்தச் சூழலில், பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் அனைத்து தொழிற்சங்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவினர் சேலம் மாவட்டம் முழுவதும் 174 கடைகளை மூடி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மாவட்டத்தில் உள்ள கடைகளில் பணியாற்றும் சுமார் 700 மேற்பார்வையாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் பணிக்குச் செல்லாததால் இக்கடைகள் அனைத்தும் முற்றிலும் முடங்கியுள்ளன.

ADVERTISEMENT

இப்போராட்டத்தில், கடந்த 23 ஆண்டுகளாகத் தற்காலிகமாகப் பணிபுரிந்து வரும் ஊழியர்களைப் பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், காலி மதுப் பாட்டில்களைத் திரும்பப் பெறும் திட்டத்தைத் தனி முகமை மூலம் செயல்படுத்த வேண்டும், உடையும் பாட்டில்களுக்கான இழப்பீட்டை நிர்வாகமே ஏற்பதோடு மாதாந்திர விற்பனையில் 2 சதவீதத்தை ஊழியர்களுக்கு வழங்க வேண்டும் மற்றும் மதுப் பெட்டிகளை இறக்கும் பணியைப் போக்குவரத்து ஒப்பந்த ஊழியர்களே செய்ய வேண்டும் உள்ளிட்ட 12 அம்ச கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன.

இந்தத் தொடர் போராட்டத்தால் டாஸ்மாக் கடைகள் மூடப்பட்டுள்ளதால், மதுப்பிரியர்கள் தனியார் பார்கள் மற்றும் மனமகிழ் மன்றங்களை நோக்கிப் படையெடுத்து வருகின்றனர். இதனைச் சாதகமாக்கிக் கொண்டு, 150 ரூபாய் மதிப்புள்ள மதுப் பாட்டில்கள் அங்கு 200 முதல் 250 ரூபாய் வரை கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், காலை 11 மணிக்கே FL2 பார்களில் ஆயிரக்கணக்கானோர் நீண்ட வரிசையில் காத்திருப்பதாலும், பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த பகுதிகளில் அவர்கள் திரள்வதாலும் அப்பகுதி மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT
Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share