உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்ட கோவை பெண் வழக்கறிஞர் : யார் இந்த வி.மோகனா?”

Published On:

| By Pandeeswari Gurusamy

Mohana

உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க மூத்த வழக்கறிஞர் மற்றும் உயர் நீதிமன்ற நீதிபதிகள் உட்பட ஐந்து பேரின் பெயர்களை மத்திய அரசுக்குக் கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

மத்தியப் பிரதேச உயர் நீதிமன்ற நீதிபதி சஞ்சீவ் சச்தேவா, ஜம்மு-காஷ்மீர் உயர் நீதிமன்ற நீதிபதி அருண் பல்லவி, பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி ஷீல் நாகு, மும்பை உயர் நீதிமன்ற நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர் மற்றும் உச்ச நீதிமன்ற மூத்த வழக்குரைஞர் வி மோகனா ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.

ADVERTISEMENT

மத்திய அரசு இந்தப் பரிந்துரையை ஏற்கும் பட்சத்தில், வழக்கறிஞர் துறையிலிருந்து நேரடியாக உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்படும் இரண்டாவது பெண் வழக்கறிஞர் என்ற பெருமையை பெறுவார்.இதற்கு முன் நீதிபதி இந்து மல்ஹோத்ரா இவ்வாறு நியமிக்கப்பட்டார்.

யார் இந்த மூத்த வழக்கறிஞர் மோகனா?

கோவையைப் பூர்வீகமாகக் கொண்ட மோகனா, கோவை அரசு சட்டக் கல்லூரியில் 1988-ஆம் ஆண்டு சட்டம் பயின்று பட்டம் பெற்றார். இந்தியாவில் ஐந்து ஆண்டு சட்டக் கல்வி அறிமுகப்படுத்தப்பட்டபோது, அதன் முதல் பேட்சில் படித்துத் தேர்ச்சி பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

வழக்கறிஞர் பணி: கோவையில் வழக்கறிஞர் பணியைத் தொடங்கினார் மோகனா. புகழ்பெற்ற கோவை சிவில் வழக்குரைஞர் எம். பஞ்சாப கேசனிடம் மோகனா பயிற்சி பெற்றார். அங்கு வழக்குகள் குறித்த குறிப்புகள், வாத திட்டமிடல், நீதிமன்ற விசாரணை உள்ளிட்ட தொழிலின் அடிப்படை நுணுக்கங்களை கற்றுக் கொண்டார். பின்னர் 1992ல் டெல்லிக்குத் தனது பணியிடத்தை மாற்றிக் கொண்டார். அங்கு இந்து மல்கோத்ரா, சி.எஸ். வைத்தியநாதன் போன்ற முன்னணி மூத்த வழக்கறிஞர்களுடன் இணைந்து பணியாற்றினார்.

முக்கிய மைல்கற்கள்: கடந்த 1996-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தின் ‘அட்வகேட்-ஆன்-ரெக்கார்ட்’ தேர்வில் வெற்றி பெற்றார். இதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றம், டெல்லி உயர் நீதிமன்றம் மற்றும் தேசிய நுகர்வோர் குறைதீர் ஆணையம் ஆகியவற்றில் தொடர்ந்து வழக்காடினார். இவரது திறமையைப் பாராட்டி, 2015-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் உச்ச நீதிமன்றம் இவருக்கு ‘மூத்த வழக்குரைஞர்’ அந்தஸ்தை வழங்கியது.

ADVERTISEMENT

முக்கிய வழக்குகள்:

இந்திய ராணுவத்தில் பணியாற்றும் பெண் அதிகாரிகளுக்கு நிரந்தரப் பணி ஆணை வழங்கக் கோரிய வழக்கில் பெண் அதிகாரிகளின் தரப்பில் ஆஜராகி, அவர்களுக்கான சம உரிமையைப் பெற்றுத் தருவதில் முக்கியப் பங்காற்றினார். நாடு முழுவதும் கடும் சர்ச்சையை ஏற்படுத்திய ஹிஜாப் வழக்கில், கல்வி நிறுவனங்களின் ஆடை கட்டுப்பாட்டு விதிகளுக்கு ஆதரவாக வாதிட்டார். மேலும், முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி படுகொலை தொடர்பான ஜெயின் கமிஷன் விசாரணையிலும் இவர் பங்கேற்றுள்ளார்.

கபில் சிபல், கே.கே. வேணுகோபால், ப. சிதம்பரம், அருண் ஜெட்லி போன்ற நாட்டின் மிக உயரிய மூத்த வழக்கறிஞர்களுடன் பணியாற்றிய நீண்ட அனுபவம் கொண்டவர் மோகனா. ஏற்கனவே தமிழகத்தைச் சேர்ந்த நீதிபதி பானுமதி உச்ச நீதிமன்ற நீதிபதியாகப் பணியாற்றி ஓய்வு பெற்ற நிலையில், தற்போது தமிழகப் பின்னணியைக் கொண்ட மூத்த வழக்கறிஞர் மோகனாவின் பெயர் உச்ச நீதிமன்ற நீதிபதி பதவிக்குப் பரிந்துரைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Photo of author
Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர். அரசியல் மற்றும் சமூகம் சார்ந்த செய்திகளைத் தொடர்ந்து எழுதி வரும் இவர், தற்போது 'மின்னம்பலம்' இணைய இதழில் உதவி ஆசிரியராகப் பணியாற்றி வருகிறார்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share