அதிமுகவைச் சேர்ந்த 4 எம்எல்ஏக்கள் கட்சி மாறி உள்ளது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம் என சௌமியா அன்புமணி விமர்சித்துள்ளார்.
விழுப்புரத்தில் பாட்டாளி மக்கள் கட்சி எம்.எல்.ஏ. சௌமியா அன்புமணி இன்று (மே 28) செய்தியாளர்களிடம் பேசினார்.
“மேகதாது அணையைக் கட்டியே தீருவோம்” என்று டி.கே.சிவக்குமார் பேசியது குறித்த கேள்விக்கு, “பாட்டாளி மக்கள் கட்சியின் கொள்கை தெளிவாக உள்ளது. இது குறித்து மருத்துவர் அன்புமணி தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். நமக்கு பெய்யும் மழையைச் சேமித்து, எப்படி நீர் மேலாண்மை செய்து விவசாயத்தைச் செழிக்க வைக்க வேண்டும் என்பதுதான் எங்களது விருப்பம். அதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுத்து, சட்டமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் குரல் கொடுப்போம்” என்றார்.
தொடர்ந்து, பாட்டாளி மக்கள் கட்சி உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் வெற்றி பெற்ற நான்கு பேர் தவெகவில் இணைந்தது குறித்த செய்தியாளர்களின் கேள்விக்கு, “நேற்று புதுவையில் மருத்துவர் அன்புமணி, எம்.எல்.ஏ.க்கள் கட்சி மாறியது குறித்துப் பேசியுள்ளார். இது ஒரு வரவேற்கத்தக்க விஷயமே இல்லை; இது ஒரு துரதிர்ஷ்டவசமான விஷயம். எந்த ஒரு எம்.எல்.ஏ.வுக்கும் அவர்களது தனிப்பட்ட பெயரைப் பார்த்து யாரும் ஓட்டு போடவில்லை, கட்சியின் சின்னத்தைப் பார்த்துத்தான் வாக்கு செலுத்தியுள்ளார்கள். அப்படி இருக்கும்போது, அதற்கான முக்கியத்துவத்தையும் மரியாதையையும் அவர்கள் கொடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.









