தற்காலிக ஆசிரியர்கள் ஏன்: மக்கள் நீதி மய்யம் கேள்வி?

Published On:

| By Monisha

அரசுப் பள்ளிகளில் செயல்பட்டு வரும் அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு மாதம் 5 ஆயிரம் ஊதியத்துடன் தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டதற்கு எதிராக மக்கள் நீதி மய்யம் அறிக்கை வெளியிட்டுள்ளது.

ஊராட்சி, ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளி வளாகத்திற்குள் அமைந்துள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்.கே.ஜி மற்றும் யு.கே.ஜி வகுப்புகளுக்கு நடப்பு கல்வி ஆண்டு முதல் தொடர்ந்து இயங்க அனுமதி அளித்தும், 2,381 தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்வது தொடர்பான அரசாணையைத் தமிழ்நாடு பள்ளிக்கல்வித்துறை நேற்று (அக்டோபர் 6) வெளியிட்டிருந்தது.

இந்நிலையில், தமிழகத்தில் தற்காலிக ஆசிரியர்களை நியமிப்பது ஏன் என்று மக்கள் நீதி மய்யம் மாநிலச் செயலாளர் செந்தில் ஆறுமுகம் இன்று (அக்டோபர் 7) அறிக்கை வெளியிட்டுள்ளார். அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“தமிழகத்தில் 2,831 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகள் செயல்பட்டு வந்தன. இவற்றுக்குக் கிராமங்களில் அதிக வரவேற்பு இருந்தது.

இந்நிலையில், இவ்வகுப்புகளை மூட முடிவு செய்யப்பட்டது. இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்ததால், வகுப்புகள் தொடர்ந்து செயல்படும் என அறிவிக்கப்பட்டது.

இவ்வகுப்புகளுக்கு ரூ.5,000 தொகுப்பூதியத்தில், பள்ளி மேலாண்மைக் குழு மூலம் தற்காலிக ஆசிரியர்களை நியமிக்கத் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

ஆசிரியர் பயிற்சி முடித்துவிட்டு, TET தேர்வில் தேர்ச்சி பெற்ற பல்லாயிரக் கணக்கானோர் வேலைக்குக் காத்திருக்கும்போது, தொடர்ந்து தற்காலிக ஆசிரியர்களையே நியமிப்பது ஏன்?

குறைந்த சம்பளத்தில் ஆசிரியர் நியமனம் அவர்களது எதிர்காலத்தை மட்டுமின்றி, மாணவர்களின் கல்வியையும் பாதிக்கும்.

எனவே, தற்காலிக, தொகுப்பூதிய முறைகளைக் கைவிட்டு, நிரந்தர ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்.

நிரந்தர ஆசிரியர் நியமனமானது, தற்காலிக ஆசிரியர் நியமனத்தில் நடக்க வாய்ப்புள்ள முறைகேடுகளையும், அரசியல் தலையீடுகளையும் தடுத்து நிறுத்தும்.
மாணவர்களுக்குத் தரமான கல்வியையும், ஆசிரியர்களுக்கு நியாயமான ஊதியத்தையும் உறுதிப்படுத்தும்.

இதில் தமிழக முதல்வர், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் உடனடி கவனம் செலுத்தி ஆசிரியர், மாணவர் நலன்களைப் பாதுகாப்பது அவசியம்” என்று கூறியுள்ளார்.

மோனிஷா

அக்டோபர் 17: சட்டமன்றத்தில் பன்னீர் இருக்கை-அப்பாவு பதில்!

3 சிறுவர்கள் உயிரிழப்பு: முதலமைச்சர் நிவாரணம்!

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!
Join Our Channel
Share