மும்பை மின்சார ரயிலில் மூன்று பெண்களுக்கு இடையில் ஏற்பட்ட மோதல் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
சென்னையில் இருப்பது போலேவே மும்பையிலும் மின்சார ரயில்கள் இயங்கி வருகின்றன. மும்பையில் மக்கள் தொகை அதிகம் என்பதால் ரயில்களிலும் கூட்டம் அதிகமாகவே இருக்கும்.
இந்நிலையில் நேற்று (அக்டோபர் 6) மும்பை மின்சார ரயில் பெண்கள் பெட்டியில் இருக்கையில் அமருவதற்காகப் பெண் பயணிகள் ஒருவருக்கொருவர் அடித்துக் கொண்டுள்ளனர். தானே-பன்வெல் செல்லும் மின்சார ரயிலில் பெண்கள் பெட்டியில் இந்த சண்டை நடந்துள்ளது. இது குறித்து மும்பை போலீஸ் விளக்கம் அளித்துள்ளனர்.
இருக்கைக்காக சண்டை
”ஒரு பெண் தனது 27 வயது மகள் மற்றும் 10 வயது பேத்தியுடன் நேற்று மாலை (அக்டோபர் 6) ‘தானே’ மின்சார ரயில் நிலையத்தில் ஏறியுள்ளார்.
அடுத்ததாக மற்றொரு பெண், கோபர்கைரான் என்ற ரயில் நிலையத்தில் அதே ரயிலில் ஏறி இருக்கை காலியாவதற்காகக் காத்திருந்தார்.
ரயில் டர்பே ரயில் நிலையத்தில் நின்றதும், ஒரு இருக்கை காலியானது. அப்போது பேத்தியுடன் ரயிலில் ஏறிய பெண் தனது பேத்தியைக் காலியான இருக்கையில் அமரவைக்க முயற்சிக்கும்போது இருக்கைக்காகக் காத்திருந்த பெண், அந்த இருக்கையில் அமர்ந்துள்ளார்.
இதனால் பெண் பயணிகளுக்கு இடையில் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக மாறியுள்ளது. சண்டையில் ஈடுபட்ட பெண் பயணிகள் ஒருவருக்கொருவர் தலைமுடியை இழுத்து, முகத்தில் அடித்துக் கொண்டனர்.
இதனைக் கண்ட சக பயணிகள் இந்த சண்டையைப் பிரித்துவிட முயன்றுள்ளனர். ஆனால் பெண் பயணிகள் சண்டையை நிறுத்தவில்லை.
பெண் காவலரை அடித்த பெண்கள்
ரயில், நெருல் ரயில் நிலையத்தை அடைந்ததும், அங்கு பணியில் இருந்த பெண் காவலரிடம் இந்த சண்டை குறித்து தெரிவிக்கப்பட்டது.
பெண் காவலர் வருவதை பார்த்த பெண் பயணிகள் சண்டையிடுவதை நிறுத்திவிட்டு அமைதியாக இருந்தனர். சிறிது நேரம் கழித்து மீண்டும் சண்டையிட தொடங்கியுள்ளனர்.
ஆகையால் பெண் காவலர் இந்த சண்டையைத் தடுக்க முயன்றுள்ளார். ஆனால் சண்டையிட்டுக் கொண்டிருந்த பெண்கள் தாக்கியதில் பெண் காவலருக்கு நெற்றியில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது.
சண்டையிட்டுக் கொண்ட பெண் பயணிகளில் இருவருக்கு தலையில் காயம் ஏற்பட்டு ரத்தம் வந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக 27 வயது பெண் பயணியை மும்பை போலீஸ் கைது செய்துள்ளனர்.
மேலும், இரண்டு பயணிகள் மீது ’பணியில் இருக்கும் ஊழியரைத் தாக்கியதாக வழக்குப் பதிவு’ செய்யப்பட்டுள்ளது” என்று விளக்கம் அளித்துள்ளனர்.
வீடியோ வைரல்
பெண்கள் அடித்துக் கொள்வதை சக பயணிகள் சிலர் தடுக்க முயற்சித்தாலும், சிலர் தங்களது மொபைல் போன் கேமராக்களில் வீடியோவாக எடுத்து சமூக வலைத்தளப் பக்கங்களில் பதிவிட்டுள்ளனர்.
இருக்கைக்காக ரயிலில் நடந்த குடுமிபிடி சண்டை தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலாகி வருகிறது.
மோனிஷா
3 சிறுவர்கள் உயிரிழப்பு: முதலமைச்சர் நிவாரணம்!
இந்த கேரக்டரிலா சுஷ்மிதா சென்?