திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் உள்ள விவேகானந்தா சேவாலய காப்பகத்தில் கெட்டுப்போன உணவு சாப்பிட்டு உயிரிழந்த 3 சிறுவர்களின் குடும்பத்துக்கு முதலமைச்சர் நிவாரண உதவி அறிவித்துள்ளார்.
திருப்பூர் மாவட்டம் திருமுருகன்பூண்டியில் விவேகானந்தா சேவாலய காப்பகம் செயல்பட்டு வந்தது. இந்த காப்பகத்தில் நேற்று (அக்டோபர் 6) காலை வழங்கப்பட்ட உணவைச் சாப்பிட்ட குழந்தைகள் மயங்கி விழுந்துள்ளனர்.
இதில் 3 சிறுவர்கள் காப்பகத்திலேயே உயிரிழந்தனர். உடல்நிலை பாதிக்கப்பட்ட 11 சிறுவர்கள் திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர்.
இதனைத் தொடர்ந்து காப்பகத்தை போலீசார் தங்கள் கட்டுப்பாட்டுக்குள் எடுத்து விசாரணை நடத்தினர். சிறுவர்களுக்கு தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் குறித்து விசாரிக்க 5 விசாரணைக் குழுக்களும் அமைக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுக்கள் இன்று (அக்டோபர் 7) காப்பகத்துக்கு நேரடியாகச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.
இதனைத் தொடர்ந்து சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், செய்தித்துறை அமைச்சர் சாமிநாதன், திருப்பூர் மாவட்ட ஆட்சியர் வினீத் ஆகியோர் காப்பகத்திற்குச் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
அதற்குப் பிறகு இன்று (அக்டோபர் 7) செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் கீதா ஜீவன், ”காப்பகம் பாதுகாப்பற்ற நிலையில் இருக்கிறது. சிறுவர்களுடன் இரவில் தங்குவதற்கு வார்டன் இல்லை. காப்பக நிர்வாகத்தின் அஜாக்கிரைதையால் சிறுவர்கள் உயிரிழந்துள்ளனர். இதனால் காப்பகம் மூடப்படுகிறது” என்று கூறினார்.
மேலும் அவர், திமுக கட்சி சார்பில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ. 1 லட்சமும், சிகிச்சையில் உள்ள சிறுவர்களின் குடும்பத்துக்குத் தலா ரூ. 50 ஆயிரமும் வழங்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
அரசு சார்பில் நிவாரணம் வழங்குவது குறித்து முதலமைச்சர் விரைவில் அறிவிப்பார் என்றும் கூறியிருந்தார். இந்நிலையில் உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிவாரண நிதியை அறிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் இன்று (அக்டோபர் 7) வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், “உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்துக்கு எனது ஆறுதல்களையும் இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். சிகிச்சையிலுள்ள சிறுவர்களுக்குத் தேவையான மருத்துவ உதவி வழங்க அறிவுறுத்தியுள்ளேன்.
உயிரிழந்த சிறுவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன்” என்று கூறியுள்ளார்.
மோனிஷா