தமிழகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளில் பணியாற்றுவதற்கு தற்காலிக சிறப்பு ஆசிரியர்களை நியமனம் செய்ய அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள 2381 அங்கன்வாடி மையங்களில் எல்கேஜி மற்றும் யுகேஜியில் பணியாற்றுவதற்கு ஒரு பள்ளிக்கு ஒரு ஆசிரியர்,
என்ற விகிதத்தில் 2381 சிறப்பு ஆசிரியர்களை தேவை அடிப்படையில் தற்காலிகமாக நியமனம் செய்து கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இது குறித்து பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ள அரசாணையில், அங்கன்வாடி மையங்களில் செயல்பட்டு வரும் எல்கேஜி, யுகேஜி வகுப்புகளை நடத்துவதற்கு,
ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என தொடக்க கல்வி இயக்குனர் கொடுத்த பரிந்துரையின் அடிப்படையில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி எல்கேஜி மற்றும் யுகேஜி வகுப்புகளுக்கு சிறப்பு ஆசிரியர் ஒருவரை 5000 ரூபாய் மாத ஊதியத்தில் தற்காலிகமாக பணியில் சேர்த்துக் கொள்ளலாம் எனவும்,
ஜூன் முதல் ஏப்ரல் வரை 11 மாதங்கள் பணியாற்றுவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவர்கள் தற்காலிக சிறப்பு ஆசிரியர்கள் என்பதை அறிவுறுத்தி இல்லம் தேடி கல்வியில் பணியாற்றும் ஆசிரியர்களை முன்னுரிமை அடிப்படையில் பணியமர்த்தலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வி ஆண்டின் இறுதி நாளில் அவர்களுடைய பணி நிறைவடைந்து விடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்காக இந்த கல்வி ஆண்டிற்கு 13.10 கோடி ரூபாய் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்விக்கு வழங்கவும், பள்ளி மேலாண்மை குழுவின் வழியாக தற்காலிக சிறப்பு ஆசிரியர்களுக்கு மாத ஊதியம் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கலை.ரா