தமிழக சட்டமன்றம் கூட்டத்தொடர் அக்டோபர் 17 ஆம் தேதி தொடங்கும் என்று சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
ஆறு மாதத்திற்கு ஒருமுறை சட்டமன்றத்தை கூட்டவேண்டும் என்பது விதி. அதன்படி கடந்த ஏப்ரல் மாதம் சட்டமன்றம் கூட்டப்பட்டு 6ம் தேதி முதல் மே பத்தாம் தேதி வரை துறை வாரியான மானியக் கோரிக்கை விவாதங்கள் நடைபெற்றது.
இந்தநிலையில் அக்டோபர் 17 ஆம் தேதி சட்டமன்றம் கூட உள்ளதாக தகவல்கள் வெளியானது. அதை தலைமைச் செயலகத்தில் இன்று (அக்டோபர் 6) செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் அப்பாவு உறுதி செய்தார்.
அப்போது பேசிய அவர், மறைந்த முன்னாள் சபாநாயகர் சேடப்பட்டி முத்தையாவுக்கு இரங்கல் குறிப்பு வைக்கப்பட்டு அன்றைய தினம் சட்டமன்றம் அதோடு ஒத்தி வைக்கப்படும்.

அதன்பிறகு எத்தனை நாள் சட்டமன்றம் நடைபெறவேண்டும் என்பது குறித்தும், துணைநிதிநிலை அறிக்கை தாக்கல் செய்து அதன் மீது விவாதங்கள் எத்தனை நாள் நடைபெறும் என்பது குறித்தும் அலுவல் ஆய்வுக்குழுவில் முடிவு செய்யப்படும்” என்ற சபாநாயகரிடம், சட்டமன்றத்தில் எதிர்க்கட்சித் துணைத்தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதாக கூறப்படும் பன்னீர்செல்வத்தின் இருக்கை குறித்து கேள்வி எழுப்பினர் செய்தியாளர்கள்.
அதற்கு சபாநாயகர் அப்பாவு, ”எதிர்க்கட்சித் தலைவர், எதிர்க்கட்சித்துணை தலைவர் இருவருமே கடிதங்கள் தந்திருக்கிறார்கள். அவை எனது பரிசீலனையில் இருக்கிறது. சபை மரபுப்படியே அனைவருக்கும் இருக்கைகள் வழங்கப்படும்.
இருவருமே முன்னாள் முதல்வராக இருந்தவர்கள். எனவே கண்ணியமாக நடந்து கொள்வார்கள் என்று நினைக்கிறேன். கொள்கை ரீதியாக அவர்களுக்குள் பிரச்சினை இருக்கிறது. அதை அவர்கள் பேசித் தீர்த்துக் கொள்வார்கள்.

சட்டமன்ற மாண்புப்படி என்ன நடவடிக்கை எடுக்கப்படுமோ அது எடுக்கப்படும்” என்றார்.
மேலும், “சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்யவேண்டும் என்பது திமுக அரசின் விருப்பம். அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன. விரைவில் அது நடைமுறைக்கு கொண்டு வரப்படும்” என்றும் தெரிவித்தார்.
ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை, தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு அறிக்கை, ஆன்லைன் ரம்மி தடைச்சட்டம் என பல விவகாரங்கள் இந்த சட்டமன்ற கூட்டத்தொடரில் பரபரப்பை கிளப்பும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கலை.ரா
விரைவில் சட்டமன்றக் கூட்டம்: வருமா ஆன்லைன் ரம்மி தடை சட்டம்?
குழந்தைகளை பலிவாங்கிய இந்திய மருந்து: அரசு சான்றிதழ் கிடைத்தது எப்படி?