டிஜிட்டல் திண்ணை: அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு எதிராக தமிழக அரசு- அமலாக்கத்துறை ஹேப்பி! 

அரசியல்

வைஃபை ஆன் செய்ததும் டெலிகிராமில் சில டாக்குமெண்ட்டுகள் வந்து விழுந்தன. அவற்றைப் படித்துப் பார்த்துவிட்டு சில குறிப்புகளை  வாட்ஸ் அப்புக்கு அனுப்பியது டெலிகிராம். அவற்றைத் தொகுத்து டைப் செய்யத் தொடங்கியது வாட்ஸ் அப்.

“அமைச்சர் செந்தில்பாலாஜி திமுக கரூர் மாவட்டச் செயலாளராகியிருக்கிறார்.  ஏற்கனவே கோவை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும் இருக்கிறார். பொறுப்பு அமைச்சர் என்றால் அரசு நிர்வாகத்துக்கு மட்டுமல்ல, கட்சி நிர்வாகத்துக்கும் கோவை மாவட்டத்துக்கும் செந்தில்பாலாஜிதான் பொறுப்பு. அதாவது கோவை மாவட்டத்தில் தற்போது தேர்தல் மூலம் வந்திருக்கும் மூன்று மாவட்டச் செயலாளர்களுமே செந்தில்பாலாஜியின் செலக்‌ஷன்தான்.  இன்னும் சொல்லப் போனால் திமுகவில் கரூர், கோவை ஆகிய இரு பெரும் மாவட்டங்களை தற்போது முழுமையாக கையில் வைத்திருக்கிறார் செந்தில்பாலாஜி.

கட்சிரீதியாக இப்படி என்றால் ஆட்சிரீதியாக மிகப் பெரும் வலிமையான துறைகளான மின்சாரத்துறை, மதுவிலக்கு ஆயத் தீர்வை ஆகிய துறைகளுக்கு அமைச்சராக இருக்கிறார்.

சீனியர் அமைச்சர்களே முதல்வர் ஸ்டாலினை சந்திக்க  அப்பாயின்ட்மென்ட் அது இது என சம்பிரதாயங்கள் செய்ய வேண்டிய நிலையில்   முதல்வரை எந்த நேரத்திலும் சென்று சந்திக்கும் அளவுக்கு நெருக்கமானவராக இருக்கிறார் செந்தில்பாலாஜி. இந்த நிலையில் நடந்து முடிந்த உட்கட்சித் தேர்தலில் கரூர் மாவட்டத்துக்கென இன்னொரு ஸ்பெஷல் அந்தஸ்தையும் பெற்றிருக்கிறார் செந்தில்பாலாஜி.

பொதுவாகவே திமுகவில் உட்கட்சித் தேர்தலில் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் ஒரு சட்டமன்றத்  தொகுதிக்கு ஒருவர் என்றும், பொதுக்குழு உறுப்பினர்கள் ஒரு சட்டமன்றத் தொகுதிக்கு இருவர் என்ற அளவில்தான் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கிறார்கள்.  ஒரு சில மாவட்டங்களில் இந்த எண்ணிக்கையில் ஒன்றிரண்டு அதிகமாகியிருக்கிறது. ஆனால் கரூர் மாவட்டத்தில்  தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கை, பொதுக்குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையைப்  பார்த்து மற்ற மாவட்டத்தினர் வியப்பில் ஆழ்ந்துள்ளனர்.

கரூர் மாவட்டத்தில்   கரூர், குளித்தலை, கிருஷ்ணராயபுரம், அரவக்குறிச்சி  ஆகிய நான்கு சட்டமன்றத் தொகுதிகள் இருக்கின்றன.  அப்படிப் பார்த்தால் தொகுதிக்கு ஒரு தலைமைச் செயற்குழு உறுப்பினர் என நான்கு பேரும், தொகுதிக்கு இரு பொதுக்குழு உறுப்பினர்கள் என்ற கணக்கில் 8 பொதுக்குழு உறுப்பினர்களும்தான் தேர்ந்தெடுக்கப் படவேண்டும். ஆனால் தலைமைக் கழக அறிவிப்பில் கரூர் மாவட்டத்துக்கு எட்டு தலைமைச் செயற்குழு உறுப்பினர்களும், 13  பொதுக்குழு உறுப்பினர்களும்  இடம்பெற்றிருந்தார்கள். அப்படியெனில் மற்ற மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில்  கிட்டத்தட்ட இரண்டு மடங்காக இருக்கிறது கரூரின்  தலைமைச் செயற்குழு, பொதுக்குழு  எண்ணிக்கை.  எப்படிப் பார்த்தாலும் செந்தில்பாலாஜியை தலைமை ஒரு படி மேலே வைத்து பார்ப்பது தெளிவாகத் தெரிகிறது’ என்கிறார்கள்.

இப்படி திமுக தலைவரான முதல்வர் ஸ்டாலினுக்கும், உதயநிதி, சபரீசன் ஆகியோருக்கும் மிகவும் நெருக்கமாக இருக்கும் செந்தில்பாலாஜிக்கு அரசுத் தரப்பில் இருந்தே இன்னொரு கடுமையான செக் வைக்கப்பட்டிருப்பதைப் பார்த்துதான் குழப்பம் அடைந்திருக்கிறார்கள் செந்தில்பாலாஜி ஆதரவாளர்களே.

2011 – 2015 காலக்கட்டத்தில் அ.தி.மு.க. ஆட்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சராக இருந்தபோது டிரைவர், கண்டக்டர் வேலை வாங்கி தருவதாக கூறி லட்சக்கணக்கில் பண மோசடியில் ஈடுபட்டதாக செந்தில்பாலாஜி மீது புகார் அளிக்கப்பட்டது.  சென்னை, அம்பத்தூரைச் சேர்ந்த கணேஷ்குமார், தேவசகாயம் உள்ளிட்டோர் சென்னை மத்திய குற்றப்பிரிவு காவல்துறையில் புகார் அளித்தனர். அதன் பேரில், செந்தில் பாலாஜி, அன்னராஜ், பிரபு மற்றும் சகாயராஜ் உள்ளிட்டோர் மீது 2017 ஆம் ஆண்டு  வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

சட்டமன்ற நாடாளுமன்ற உறுப்பினர்களின் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்ற நிலையில் 47 பேருக்கு எதிராக குற்றப் பத்திரிக்கையும் தாக்கல் செய்யப்பட்டது. இதற்கிடையில் இந்த வழக்கை ரத்து செய்யக்கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகன் மனுத்தாக்கல் செய்தார். பாதிக்கப்பட்டவர்களுக்கு பணம் கிடைத்துவிட்டதாகவும், சமரசமாக போக விரும்புவதாகவும் அவர் மனுவில் கூறியிருந்தார். இதை ஏற்று சென்னை உயர் நீதிமன்றம் செந்தில் பாலாஜி உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

உயர் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பை ரத்து செய்யக் கோரி தர்மராஜ் என்பவர் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. பல கட்டங்களாக நடந்து வந்த வழக்கில் நீதிபதி அப்துல் நசீர் தலைமையிலான அமர்வு  கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி  தீர்ப்பளித்தது. அதில் அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்குகளை ரத்து செய்து உத்தரவிட்ட சென்னை உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை ரத்து செய்வதாக நீதிபதிகள் கூறினர். அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான பண மோசடி புகாரை மீண்டும் நீதிமன்றம் விசாரிக்கலாம் என்று நீதிபதிகள் தீர்ப்பளித்துள்ளனர். சமரசம் செய்வதால் மட்டும் குற்றவாளி இல்லை என்று கருதமுடியாது என உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும்  அந்த வழக்கு மீதான  தடையை நீக்க உரிய நடவடிக்கை எடுக்குமாறு  தமிழக அரசுக்கு  உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.  

உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு செந்தில்பாலாஜிக்கு லேசான அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் கடந்த செப்டம்பர் 29 ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விவகாரம் தொடர்பாக தமிழக அரசின் சார்பில் மத்திய குற்றப் பிரிவு போலீஸார் அளித்திருக்கும் மனு செந்தில் பாலாஜிக்கு ஹை வோல்டேஜ் ஷாக்கை ஏற்படுத்தியுள்ளது.

உச்ச நீதிமன்றம் செந்தில்பாலாஜி மீதான ஒரு வழக்கு ரத்தானதை  ரத்து செய்த நிலையில் செப்டம்பர் 29 ஆம் தேதி இந்த விவகாரத்தை விசாரிக்கும் சென்னை மத்தியக்  குற்றப் பிரிவு போலீசார் உயர் நீதிமன்றத்தில்  நீதிபதி சிவஞானத்திடம் ஒரு மனுவை தாக்கல் செய்தனர்.  ‘

அதில், ‘மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் வி.செந்தில்பாலாஜி மீது கடந்த 2017-ம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வேலை வாய்ப்புக்கு பணம் வாங்கிய  வழக்கு தொடர்பாக விரிவான விசாரணை நடத்தி, இந்த குற்றத்தில் அவருக்கு எதிரான  போதுமான ஆதாரங்களை சேகரித்துள்ளோம்.  ஒரே மாதிரியான குற்றச்சாட்டில் பதிவு செய்யப்பட்டுள்ள மூன்று வழக்குகளில் ஒன்றில் 21 சாட்சிகளை விசாரித்துள்ளோம்.  எனவே இவ்வழக்கில் விசாரணை நீதிமன்ற நடவடிக்கைகளுக்கு வழங்கப்பட்ட தடையை நீக்க வேண்டும்’ என்று அந்த மனுவில் தெரிவித்துள்ளது மத்திய குற்றப் பிரிவு போலீஸ்.  உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுப்படி மத்திய குற்றப் பிரிவு போலீஸார் செயல்படுவதாக  போலீஸ் வட்டாரங்களில் கூறுகிறார்கள்.

மேலும் அன்று தமிழக அரசின் கூடுதல் பிபியான ராஜ் திலக்,  செந்தில்பாலாஜி மீதான வழக்கை உயர் நீதிமன்றம் ரத்து செய்ததை உச்ச நீதிமன்றம் கடந்த செப்டம்பர் 8 ஆம் தேதி ரத்து செய்திருப்பதை  சுட்டிக் காட்டினார். இதையடுத்து விசாரணையை அக்டோபர் 18 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார் நீதிபதி. 

ஒருபக்கம் கட்சி ரீதியாக செந்தில்பாலாஜிக்கு அதிக முன்னுரிமை கொடுக்கப்பட்டு வரும் நிலையில் இன்னொரு  பக்கம் நீதிமன்றத்தில் தமிழக அரசின் சார்பில் போலீஸ் தாக்கல் செய்துள்ள மனுவில்,  ‘அரசு வேலைக்கு லஞ்சம் வாங்கிய வழக்கில் அமைச்சர் செந்தில்பாலாஜியின் தலையீட்டை நிரூபிக்கக் கூடிய ஆதாரங்கள் இருக்கிறது’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது செந்தில்பாலாஜியையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.  அவரது ஆதரவாளர்களை குழப்பத்தில் ஆழ்த்தியுள்ளது. செந்தில்பாலாஜியை நோக்கி எப்போது பாயலாம் என்று காத்திருக்கும் அமலாக்கத்துறைக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது” என்ற மெசேஜுக்கு செண்ட் கொடுத்து ஆஃப் லைன் போனது வாட்ஸ் அப்.

நீங்கள் பூஜை போட வேண்டிய ஆயுதம் எது?

டிஜிட்டல் திண்ணை: ஒரு கோடி வாக்குகள்- சீமான் டார்கெட்!

+1
0
+1
3
+1
0
+1
2
+1
0
+1
2
+1
0

Leave a Reply

Your email address will not be published.