அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.சண்முகத்திற்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த நான்கு அவதூறு வழக்குகளில், இரண்டு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஜனவரி 24) தள்ளுபடி செய்துள்ளது.
விழுப்புரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில், மதுபான விற்பனை, கஞ்சா புழக்கம், 12 மணி நேர வேலை சட்டத் திருத்தம், வடமாநில தொழிலாளர்கள் தமிழகத்தை விட்டு வெளியேறியது தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சரும், எம்.பி.யுமான சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் ஸ்டாலினையும் விமர்சித்துப் பேசியிருந்தார்.
தமிழக அரசு மற்றும் முதல்வரின் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுத்தியதாக சி.வி.சண்முகத்துக்கு எதிராக தமிழக அரசின் சார்பில் 4 அவதூறு வழக்குகள் விழுப்புரம் சிறப்பு நீதிமன்றத்தில் தொடரப்பட்டன.
இந்த 4 வழக்குகளையும் ரத்து செய்யக் கோரி சி.வி.சண்முகம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனு நீதிபதி என்.ஆனந்த்வெங்கடேஷ் முன்பாக விசாரணைக்கு வந்தது.
சி.வி.சண்முகம் தரப்பில் மூத்த வழக்கறிஞர் விஜய் நாராயண் ஆஜராகி, “மனுதாரர் முதல்வரை நேரடியாக தாக்கிப்பேசவில்லை. தமிழக அரசை மட்டுமே விமர்சித்துப் பேசியுள்ளார்.
அதிமுகவின் போராட்டத்துக்குப் பிறகே 12 மணி நேர வேலை என்ற தமிழக அரசின் அறிவிப்பு திரும்பப் பெறப்பட்டுள்ளது. அப்படியிருக்கும் போது மனுதாரரின் கருத்து எப்படி அவதூறானதாகக் கருத முடியும். இந்த விஷயத்தில் தமிழக அரசு இயந்திரத்தனமாக செயல்பட்டுள்ளது” என்ற வாதத்தை முன்வைத்தார்.
தமிழக அரசு தரப்பில் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி,
“தமிழக அரசையும்,முதல்வரையும் அதிமுக எம்பி சி.வி.சண்முகம் நேரடியாக தாக்கி பேசியுள்ளார். பின்னர் எப்படி அவதூறு கருத்து இல்லை என குறிப்பிட முடியும்” என்று வாதிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில், இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், முதல்வர் ஸ்டாலினை விமர்சித்தது மற்றும் தமிழகத்தில் கஞ்சா விற்பனை அதிகரித்ததாக பேசியது தொடர்பான அவதூறு வழக்குகளை ரத்து செய்தார். தொழிலாளர் சட்ட திருத்தம், 420 மோசடி அரசு என பேசியது தொடர்பான வழக்குகளை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா: டிடிவி தினகரன், திவாகரனுக்கு அழைப்பில்லை!
பிப்ரவரி 26 முதல் ஜாக்டோ – ஜியோ காலவரையற்ற வேலைநிறுத்தம்!
அறிமுகமானது ஒன்ப்ளஸ் 12, 12R: விலை, சிறப்பம்சங்கள் என்ன?
”வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த பெருமை”: ஸ்டாலின்
