பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடப்போவதாக ஜாக்டோ ஜியோ அமைப்பு அறிவித்துள்ளது.
பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், உயர்கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை, தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று ஜாக்டோ ஜியோ அமைப்பினர் தொடர்ந்து வலியுறுத்தி வந்தனர். இதுகுறித்து கடந்த ஜனவரி 20-ஆம் தேதி முதல்வர் ஸ்டாலினுக்கு கடிதம் அனுப்பினர்.
இந்தநிலையில், ஜனவரி 7-ஆம் தேதி சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில அலுவலகத்தில் ஜாக்டோ ஜியோ மாநில உயர்மட்டக் குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தின் முடிவில் ஜாக்டோ ஜியோ முன்வைத்த 10 அம்ச கோரிக்கைகளை முன்வைத்து தொடர் போராட்டம் நடத்த முடிவெடுக்கப்பட்டது.
அந்தவகையில், ஜனவரி 22 முதல் 24 வரை தமிழகம் முழுவதும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆசிரியர், அரசு ஊழியர் சந்திப்பு பிரச்சார இயக்கம் நடத்தப்படும்.
ஜனவரி 30-ஆம் தேதி மாவட்ட தலைநகரங்களில் மறியல் போராட்டம் நடத்தப்படும். பிப்ரவரி 5 முதல் 9 வரை பாஜக, அதிமுக தவிர்த்து அரசியல் கட்சி தலைவர்களை சந்தித்து ஆதரவு கோருவது, பிப்ரவரி 10-ஆம் தேதி மாவட்ட அளவில் வேலைநிறுத்த போராட்ட ஆயத்த மாநாடு நடத்துவது.
பிப்ரவரி 15 அன்று ஒருநாள் அடையாள வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது. பிப்ரவரி 26 முதல் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டம் நடத்துவது என்று முடிவெடுக்கப்பட்டுள்ளது.
ஜாக்டோ ஜியோ கோரிக்கைகள்!
1.4.2003க்குப் பிறகு அரசுப்பணியில் சேர்ந்தோருக்கு தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டு வரும் பங்களிப்புடன் கூடிய ஓய்வூதியத் திட்டத்தினைக் கைவிட்டு, பழைய ஓய்வூதியத் திட்டத்தினையே அமல்படுத்திட வேண்டும்.
காலவரையின்றி முடக்கி வைக்கப்பட்டுள்ள சரண்விடுப்பு ஒப்படைப்பு, உயர் கல்விக்கான ஊக்க ஊதிய உயர்வு ஆகியவற்றை உடனடியாக வழங்கிட வேண்டும்.
இடைநிலை ஆசிரியர்களுக்கு, உயர்நிலைப்பள்ளி மற்றும் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு, உடற்கல்வி இயக்குநர் மற்றும் உடற்கல்வி ஆசிரியர்களுக்கு மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்கப்படாமல் இழைக்கப்பட்டு வரும் அநீதி களையப்பட வேண்டும்.
முதுநிலை ஆசிரியர்கள், அனைத்து ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், அரசுப்பணியாளர்கள், கண்காணிப்பாளர்கள், தலைமைச் செயலகம் உள்ளிட்ட அரசு அலுவலர்கள், களப்பணியாளர்கள், பல்வேறு துறைகளில் உள்ள தொழில்நுட்ப ஊழியர்கள், ஊர்தி ஓட்டுநர்கள், ஆகியோருக்கான ஊதிய முரண்பாட்டினைக் களைய வேண்டும். கல்லூரி பேராசிரியர்களுக்கான நிலுவையிலுள்ள பணிமேம்பாடு (CAS) ஊக்க ஊதிய உயர்வு உடனடியாக வழங்கிட வேண்டும். உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடைநிலை ஆசிரியர்களை பட்டதாரி ஆசிரியர்களாக உயர்த்த வேண்டும்.
சிறப்பு காலமுறை ஊதியம் பெற்றுவரும் சத்துணவு, அங்கன்வாடி வருவாய் கிராம உதவியாளர்கள், ஊராட்சி செயலாளர்கள், ஊர்ப்புற நூலகர்கள், கல்வித்துறையில் பணியாற்றும் துப்புரவுப் பணியாளர்கள், தொகுப்பூதியத்தில் பணியாற்றும் MRB செவிலியர்கள், சிறப்பு ஆசிரியர்கள், பல்நோக்கு மருத்துவமனைப் பணியாளர்கள் ஆகியோருக்கு வரையறுக்கப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மேலும் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வித்துறையில் பணியாற்றும் பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் பகுதிநேர ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட வேண்டும்.
அரசின் பல்வேறு துறைகளில் 30 விழுக்காட்டிற்கு மேலாக காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிடுவதற்கான நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.
21 மாத ஊதிய மாற்ற நிலுவைத் தொகை அரசு ஊழியர்கள்-ஆசிரியர்கள் அரசுப் பணியாளர்கள் ஆகியோருக்கு மறுக்கப்பட்டுள்ளதை உடனடியாக வழங்கிட வேண்டும்.
2002 முதல் 2004 வரை தொகுப்பூதியத்தில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள் மற்றும் அரசுப் பணியாளர்களின் பணிக் காலத்தினை அவர்கள் பணியில் சேர்ந்த நாள் முதல் பணிவரன்முறைப் படுத்தி ஊதியம் வழங்கிட வேண்டும்.
சாலைப்பணியர்களின் 41 மாத பணி நீக்க காலத்தினை முறைப்படுத்த வேண்டும்.
உள்ளாட்சி அமைப்புகளிலும் பல்வேறு அரசுத்துறைகளிலும் தனியார் முகமை மூலம் பணியாளர்களை நியமனம் செய்வதை உடனடியாக தடை செய்திட வேண்டும்.
செல்வம்
செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
4 மாவட்டங்களில் இலவச புற்றுநோய் பரிசோதனை: எங்கெல்லாம் தெரியுமா?
டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!