stalin jallikattu madurai alanganallur
மதுரை அலங்காநல்லூர் அருகே கீழக்கரையில் புதிதாக கட்டப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(ஜனவரி 24) திறந்து வைத்தார்.
உலகப்புகழ் பெற்ற ஜல்லிக்கட்டு போட்டிகள் ஒவ்வொரு ஆண்டும் தை மாதத்தில் மதுரை சுற்றுவட்டாரப் பகுதிகளில் நடத்தப்படுவது வழக்கம். அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூர் ஆகிய பகுதிகளில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு போட்டிகளைக் காண வெளிநாட்டினரும் ஆர்வத்துடன் மதுரைக்கு படையெடுப்பர்.
எனினும் நீண்ட நாட்களாக முறையான வசதிகள் எதுவும் இன்றி இந்த ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்று வந்தன. இந்த குறையை நீக்கும் வகையில் தற்போது மதுரை கீழக்கரையில் சுமார் 66 ஏக்கரில் ரூபாய் 62.78 கோடி செலவில், பிரமாண்டமாக ஜல்லிக்கட்டு அரங்கம் கட்டப்பட்டு அதற்கு ‘கலைஞர் ஏறு தழுவுதல் நூற்றாண்டு அரங்கம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
இந்த நிலையில் முதலமைச்சர் ஸ்டாலின் இந்த ஜல்லிக்கட்டு அரங்கத்தினை இன்று திறந்து வைத்தார். இதில் அமைச்சர்கள் ஐ.பெரியசாமி, எ.வ.வேலு, மூர்த்தி, பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆகியோருடன் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும் கலந்து கொண்டனர். இந்த ஏறுதழுவுதல் அரங்கம் பொதுப்பணித்துறையால் அமைக்கப்பட்டது என்பது குறிப்பிடத் தக்கது.
இந்த விழாவில் பேசிய ஸ்டாலின், ”அனைவருக்கும் வணக்கம். வீர தீர விளையாட்டுக் களத்தினை திறந்து வைக்க வந்துள்ளேன். மதுரையை தூங்காநகரம் என்பார்கள். போட்டி என்று வந்து விட்டால் தோல்வியை தூள், தூளாக்கி விடும் நகரம் என்பதை வாடிவாசல் ஆண்டுதோறும் நிரூபித்து வருகிறது.
தமிழினத் தலைவர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழா கொண்டாடுகிற தருணத்தில் இந்த அரங்கம் அமைக்கப்பட்டு இருப்பது கூடுதல் சிறப்பு. பல்லாயிரம் ஆண்டுகள் பெருமை கொண்ட நம்முடைய தமிழினம் கொண்டாடுகின்ற ஏறுதழுவுதல் அரங்கத்தை கட்டியெழுப்பியவன் இந்த ஸ்டாலின் என்று, வரலாற்றில் என்னுடைய பெயர் இடம்பெறுவது எனக்குக் கிடைத்த பெருமை.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சி அமைந்து இந்த 3 ஆண்டுகளில் கீழடி அருங்காட்சியகம், கலைஞர் நூற்றாண்டு நூலகம், கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கம் ஆகியவற்றை திறந்து வைத்துள்ளோம். சிந்து சமவெளி காலத்து முத்திரைகளிலும் திமில் காளைகள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஏறுதழுவுதல் அரங்கத்தை கம்பீரமாகவும் அழகாகவும் அமைத்துக் கொடுத்த பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலுவை பாராட்டுகிறேன். வாழ்த்துகிறேன். அவரது சாதனைப் பட்டியலில் இந்த கலைஞர் நூற்றாண்டு ஏறுதழுவுதல் அரங்கமும் சேர்ந்திருக்கிறது. சென்னையில் கலைஞர் நினைவகமும் விரைவில் திறக்கப்பட இருக்கிறது” என்று பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலுவை பாராட்டினார்.
தொடர்ந்து பேசிய முதலமைச்சர், “தை மாதம் பிறந்தாலே அமைச்சர் மூர்த்தி ஜல்லிக்கட்டு மூர்த்தியாக மாறி விடுவார். கோட்டைக்கு கூட வராமல் இங்கேயே இருந்துவிடுவார்.
கீழடியில் காளைகளின் எலும்புக்கூடு கிடைத்துள்ளது. முல்லை நில மக்களின் வாழ்வியலாக ஜல்லிக்கட்டு இருந்துள்ளது. பழந்தமிழ் இலக்கியங்களிலும் இதுகுறித்து உயர்வாக பாடப்பட்டுள்ளது. ஏறுதழுவுதல் காட்சியை கலித்தொகை நம் கண்முன்னே கொண்டு வந்து காட்டுகிறது.
தமிழர்களின் பண்பாட்டினை சரியாக அறிந்தவர்களாக அந்த காலத்து கவர்னர்கள் இருந்துள்ளனர். தை மாதம் பிறந்து விட்டாலே மதுரையில் பண்பாட்டு திருவிழா தான். ஜல்லிக்கட்டு போட்டி கேளிக்கைக்கானது அல்ல அது தமிழர்களின் வாழ்வியல்,” என்று பேசினார்.
தொடர்ந்து முதல் ஜல்லிக்கட்டு போட்டியினை கொடியசைத்து ஸ்டாலின் துவங்கி வைத்தார். மாலை 4 மணி வரை நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டு போட்டியில் 500 மாடுகளுக்கும், 300 மாடுபிடி வீரர்களுக்கும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
-மஞ்சுளா
செய்திகளை உடனுக்குடன் தெரிந்து கொள்ள மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்…
போயஸ் கார்டனில் குடியேறினார் சசிகலா: டிடிவி தினகரன், திவாகரனுக்கு அழைப்பில்லை!
தங்கம், வெள்ளி விலை: இன்றைய நிலவரம்!
அயோத்தி: முதல் நாளன்று தரிசனம் செய்தவர்கள் எத்தனை லட்சம் பேர் தெரியுமா?
கோத்தகிரி: சிறுத்தையிடமிருந்து நாயைக் காப்பாற்றிய உரிமையாளர்!
வெள்ளத்துக்குப் பின் குப்பைத் தொட்டியாக காட்சி தரும் தாமிரபரணி: தீர்வு எப்போது?
stalin jallikattu madurai alanganallur