தேமுதிக நிறுவனரான விஜயகாந்த் நினைவு நாளான இன்று விஜயகாந்தின் நற்பணிகளை நினைவு கூர்கிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
நடிகரும் தேமுதிக தலைவருமான விஜயகாந்த் கடந்த 2023 ஆம் ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி உடல் நலக்குறைவு காரணமாக காலமானார். விஜயகாந்த் உடல் கோயம்பேட்டில் உள்ள தேமுதிக தலைமை அலுவலகத்தில் அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது. அங்கு நினைவிடமும் அமைக்கப்பட்டுள்ளது. விஜயகாந்த் 2-வது ஆண்டு நினைவு நாளையொட்டி இன்று (டிசம்பர் 28) அவரது மனைவியும் தேமுதிக பொதுச்செயலாளருமான பிரேமலதா விஜயகாந்த், மகன்கள் விஜய பிரபாகரன், சண்முக பாண்டியன் மற்றும் ஆயிரக்கணக்கான கட்சி தொண்டர்களுடன் பேரணியாக நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். தேமுதிக பொருளாளர் சுதீஷ் குடும்பத்தினருடன் சென்று அஞ்சலி செலுத்தினர்.
பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள், விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின். அமைச்சர்கள் எ.வ.வேலு, மா.சுப்பிரமணியன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, பாஜக மூத்த தலைவர்களான பொன் ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன் பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், தமாகா தலைவர் ஜி. கே.வாசன், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், தமிழக காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை உள்ளிட்டோர் விஜயகாந்த் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினர்.
முதல்வர் ஸ்டாலின் புகழஞ்சலி
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்றவர் விஜயகாந்த் என புகழஞ்சலி செலுத்தி உள்ளார். இது குறித்து முதல்வர் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில், “ஏழை மக்கள் மீது பெரும் பரிவு கொண்டு, அனைவருக்கும் உதவும் தன் உயர்ந்த உள்ளத்தால் தமிழ் மக்களின் அளவில்லாத அன்பைப் பெற்ற எனது அருமை நண்பர் – தே.மு.தி.க. நிறுவனர் விஜயகாந்த் நற்பணிகளை நினைவுகூர்கிறேன்.”இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதேபோல அரசியல் கட்சிகளின் தலைவர்கள், திரை உலக நட்சத்திரங்கள் விஜயகாந்தின் நினைவைப் போற்றி சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் நடிகரும் தவெக தலைவருமான விஜய் தனது எக்ஸ் பதிவில், “மக்கள் மனத்தில் நீங்கா இடம் பிடித்த கேப்டன் விஜயகாந்த் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தில் அவரை வணங்குகிறேன். புரட்சிக் கலைஞருக்கு என் புகழஞ்சலி.” என தெரிவித்துள்ளார்.
