கள்ளக்குறிச்சி எம்எல்ஏ ஆபாச குறுஞ்செய்தி அனுப்பிய விவகாரத்தில் ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசி வருவதன் மூலம், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா அல்லது ஆட்சியரை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா என்பது தெரியவில்லை என திருமாவளவன் கேள்வி எழுப்பி உள்ளார்.
கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரத்தில் “மாவட்ட ஆட்சியருக்குக் குறிப்பிட்ட சட்டமன்ற உறுப்பினர் மன உளைச்சலைத் தரும் வகையில் வாட்ஸ்அப்பில் செய்திகள் அனுப்பியிருந்தால், அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்; இப்போதும் அதே கருத்தைத்தான் வலியுறுத்துகிறோம். மாவட்ட ஆட்சியர் இப்போது வெளிப்படையாகப் புகார் அளித்திருக்கிறார் என்ற தகவல் உறுதியாகியுள்ளது. அதன் பின்னர் அரசு வேகமாக நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்குப் பதிவு செய்து புலன் விசாரணை தொடங்கியுள்ளது. மேற்கொண்டு இதில் சி.பி.ஐ தலையிடும் அளவிற்கு எந்தத் தேவையும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. தமிழ்நாடு அரசு சட்டப்பூர்வமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்பதில் எங்களுக்கு நம்பிக்கை உள்ளது” என்றார்.
“இந்தச் சம்பவம் குறித்துத் தலைமைச் செயலாளர் கவனத்திற்கு வந்து 116 நாட்கள் ஆகின்றன. தலைமைச் செயலாளர் ‘வேறு மாவட்டத்திற்கு மாறி கொள்ளுங்கள்’ என்று ஆட்சியரிடம் பேரம் பேசினார் என்ற குற்றச்சாட்டு உள்ளது. முறையான விசாரணை நடைபெறவில்லை; காலதாமதமான விசாரணை நடைபெறுகிறது. நடவடிக்கைகளிலும் தாமதம் இருப்பதால் சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்படுகிறதே?” என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்குப் பதிலளித்த அவர், “ஆட்சியர் புகார் கொடுத்து 116 நாட்கள் ஆகிறதா என்பதுதான் முக்கியம். சம்பவம் நடந்தது சமூக ஊடகங்களின் வாயிலாகத்தான் வெளியே தெரியவந்தது. ஆட்சியர் அண்மையில்தான் புகார் கொடுத்ததாகத் தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் நடந்தபோது ஆட்சியர் எழுத்துப்பூர்வமான புகாரைத் தரவில்லை; எச்சரிக்கை செய்ய வேண்டும் என்று சொன்னதாகச் சமூக ஊடகங்கள் வாயிலாகத்தான் நம்மால் தெரிந்துகொள்ள முடிகிறது.
இதை ஊடகங்களும் எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து பேசி வருவதன் மூலம், ஒரு மாவட்ட ஆட்சியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார்களா அல்லது ஆட்சியரை நெருக்கடிக்கு உள்ளாக்குகிறார்களா என்பது தெரியவில்லை. ஆட்சியரே முன்வந்து புகார் கொடுத்த பிறகு, அரசு வேகமாக நடவடிக்கை எடுப்பதாகத்தான் நம்புகிறேன். 5 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவாகியுள்ளது. அந்த அடிப்படையில் அவர் மீது சட்டப்பூர்வ நடவடிக்கை இருக்கும் என்று நம்புகிறேன்” என்றார்.









