கள்ளக்குறிச்சி எம்எல்ஏ விவகாரம் : முதல்வரும் குற்றவாளிதான் – உதயநிதி காட்டம்

By Pandeeswari Gurusamy

|

Published on 26 Nov 2026, 11:19 AM

கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 26) சந்தித்து மனு அளித்தார்.

இதைத்தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய உதயநிதி ஸ்டாலின், “”ண் ஐ.ஏ.எஸ் அதிகாரிக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த ஆளும் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வேண்டும் என்றும், அவர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் எதிர்க்கட்சித் தலைவராக நானும், நாடாளுமன்ற உறுப்பினர்களும், வழக்கறிஞர்களும் சென்று தி.மு.க சார்பில் டி.ஜி.பி அலுவலகத்தில் புகார் மனு அளித்திருந்தோம்.

ADVERTISEMENT

80% பாலியல் வன்கொடுமை சம்பவங்களில் ஆளுங்கட்சியினர்

தமிழ்நாட்டில் புதிய ஆட்சி அமைந்த கடந்த ஆறு மாத காலங்களில் நடக்கும் அனைத்துக் குற்றச் சம்பவங்களிலும், குறிப்பாகப் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் 80 சதவீதத்திற்கும் மேல் ஆளுங்கட்சியினர்தான் ஈடுபட்டுள்ளனர். ஆளும் கட்சியின் பொறுப்பில் இருக்கும் நிர்வாகிகள்தான் குற்றவாளிகளாக இருக்கிறார்கள். எனவே, குற்றம் சாட்டப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஆளுநரைச் சந்தித்துப் புகார் மனுவை அளித்துள்ளோம்.

தூக்கத்தில் இருந்து எழாத டம்மி முதலமைச்சர்

கள்ளக்குறிச்சி சம்பவத்தில் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக நேற்று புகார் அளித்த பிறகு, இந்த முதல்வர் தூக்கத்திலிருந்து விழித்து, உண்மையாக என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துகொண்டு குற்றம் சாட்டப்பட்டவரைக் கைது செய்வார் என்று நாங்கள் நினைத்திருந்தோம். தமிழக மக்களும் அதைத்தான் எதிர்பார்த்தார்கள். ஆனால், டி.ஜி.பி அலுவலகத்திற்கு வெளியில் நான் கொடுத்த பேட்டியை நீக்க வேண்டும் என்று நீதிமன்றத்தில் முறையிட்டுள்ளனர்.

ADVERTISEMENT

இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால், தூங்கிக்கொண்டிருக்கும் முதலமைச்சர் இன்னும் எழுந்திருக்கவில்லை; இந்த ‘டம்மி’ முதலமைச்சர் இன்னும் திருந்தவே இல்லை. இன்னும் அவர் பாதிக்கப்பட்டவர்கள் பக்கம் நிற்காமல், குற்றவாளிகள் பக்கம் சொகுசாகப் படுத்துத் தூங்கிக்கொண்டிருக்கிறார். இன்னும் சொல்லப்போனால், சட்டம் – ஒழுங்கு மற்றும் ஐ.ஏ.எஸ் அதிகாரிகளின் நலன் ஆகிய துறைகளும் இப்போது இருக்கும் முதலமைச்சரின் கீழ்தான் உள்ளன. அவர்தான் அதற்குப் பொறுப்பு அமைச்சர். இந்த முதலமைச்சர் தொடர்ந்து குற்றவாளிகள் பக்கம் நிற்பதால்தான் இது போன்ற குற்றங்கள் அதிகப்படியாக நடந்து கொண்டிருக்கின்றன. இதையெல்லாம் சொல்வதற்காக இன்று ஆளுநரைச் சந்தித்துள்ளோம்.

சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும்

கள்ளக்குறிச்சி வழக்கு விசாரணையில் எங்களுக்கு இந்த ஆட்சி மீது நம்பிக்கை இல்லை; உடனடியாக இவ்வழக்கை சி.பி.ஐ-யிடம் ஒப்படைக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளோம். தலைமைச் செயலாளர் 116 நாட்களாக இந்தக் குற்றத்தை மறைக்க அனைத்து வழிகளையும் கையாண்டுள்ளார்; இந்த அரசும் தலைமைச் செயலாளரும் இணைந்து இதைச் செய்திருக்கிறார்கள்.

ADVERTISEMENT

குற்றத்துக்கு முதலமைச்சரும் உடந்தை

நான் நேற்று கேட்ட அதே கேள்விதான்.. ஜூலை 31-ஆம் தேதியே ஆட்சியர் புகார் அளித்துள்ளார்; தலைமைச் செயலாளருக்கு ஏற்கனவே இது தெரியும். தலைமைச் செயலாளர் ஏன் இதை மறைத்தார்? இதை முதலமைச்சர் பார்வைக்கு எடுத்துச் சென்றாரா இல்லையா? முதல்வரின் கவனத்திற்கு கொண்டு செல்லவில்லை என்றால் இது தலைமைச் செயலாளரின் தவறு. முதலமைச்சருக்குச் சொல்லப்பட்டிருந்தால், முதல்வர் ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை? இந்தக் குற்றத்திற்கு முதலமைச்சரும் உடந்தை.

பெண் அதிகாரியிடம் பேரம் பேசிய தலைமைச் செயலாளர்

தலைமைச் செயலாளர் பேரம் பேசியிருக்கிறார். ‘உங்களுக்கு ஏதாவது பிரச்சனை என்றால், நீங்கள் வேறு மாவட்டத்திற்கு மாற்றிக் கொள்ளுங்கள்’ என்று பேசியிருக்கிறார் . இதில் எப்படியாவது சட்டமன்ற உறுப்பினரைக் காப்பாற்ற வேண்டும் என்ற முயற்சிகளில்தான் அவர் ஈடுபட்டுள்ளார். அதனால் அவரையும் குற்றவாளிகள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று நேற்று சொல்லியுள்ளோம். முதலமைச்சரையும் இந்தக் குற்றச்சாட்டில் சேர்க்க வேண்டும். அதேபோல், கடந்த ஒரு மாத காலமாக இப்படிப்பட்ட சம்பவமே நடக்கவே இல்லை என்று கூறிய மூன்று அமைச்சர் பெருமக்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

6 மாதங்களில் 700 படுகொலைகள்

இந்த ஆட்சி அமைந்து ஆறு மாதத்தில் இதுவரை சுமார் 700 படுகொலைகள் நடந்துள்ளன. குறிப்பாக, ஆளும் கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள் பெண்களுக்கு எதிரான குற்றங்களில் அதிக அளவில் ஈடுபடுகின்றனர். குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுமென்றால், ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற உறுப்பினர் சரவணனும் அவரது ஆதரவாளர்களும் சொந்தக் கட்சியின் பெண் நிர்வாகியைக் கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். ராணிப்பேட்டை மாவட்டச் செயலாளர் விஜய் மோகன் பெண்ணிற்குப் பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். ஆலந்தூரில் வேம்புலி என்ற ஆளும் கட்சி பகுதிச் செயலாளர் ஒரு பெண்ணைப் பாலியல் கொடுமைக்கு உள்ளாக்கியுள்ளார். இது போல் ஏராளமான சம்பவங்கள் நடந்துள்ளன. இதைச் சட்டமன்றத்தில் நடந்த காவல்துறை மானியக் கோரிக்கையின் போது நான் பேசினேன். ஆனால், இதற்கெல்லாம் முதல்வர் எந்தவிதமான பதிலும் சொல்லவில்லை.

பெண் ஆட்சியருக்கே இந்த நிலைமை

இன்று கடைசியாக, ‘நமது ஆட்சியர் என்பதை விட, நம் வீட்டில் இருக்கும் பெண்களுக்கு, சகோதரிகளுக்கு அல்லது நமக்குத் தெரிந்தவர்களுக்கு யாராவது இதுபோன்று ஒரு மெசேஜ் அனுப்பினால் நாம் சும்மா இருப்போமா?’

தீபாவளி பரிசு கொடுத்த முதலமைச்சர்

ஆனால், அதையெல்லாம் மீறி உயர் பொறுப்பில் இருக்கும் பெண் மாவட்ட ஆட்சித் தலைவருக்கே இந்த விஷயம் நடந்துள்ளது. குற்றவாளியை அழைத்துத் தண்டிப்பார், திட்டுவார் என்று பார்த்தால், முதலமைச்சர் எல்லா சட்டமன்ற உறுப்பினர்களையும் வரவழைத்து அவர்கள் எல்லோருக்கும் தீபாவளிப் பரிசு கொடுத்துள்ளார்.

துணை சபாநாயகர் ரவிசங்கர் விவகாரம்

தன்னிடம் மனு கொடுக்க வந்த ஒருவரை அழைத்து அடித்தார். அந்த வீடியோ வைரலானது. அதன்பிறகு அவரை மீண்டும் வரவழைத்து, அப்படி எதுவும் நடக்கவில்லை என்று மறுக்க வைத்தார்கள். இன்று அவரும் நீதிமன்றத்துக்குச் சென்றிருக்கிறார். நீதிமன்றத்தை நாடியிருக்கிறார்.

காணாமல் போகும் பெண் குழந்தைகள்

இந்த ஆட்சி அமைந்த பிறகு பெண் குழந்தைகள் காணாமல் போவது தினமும் நடைபெறும் செய்தியாக மாறி வருகிறது. கடந்த மாதத்தில் மட்டும் 10 குழந்தைகள் காணாமல் போயுள்ளனர். செஞ்சியில் பெண் குழந்தை இன்றோடு காணாமல் போய் 45 நாட்கள் ஆகின்றன. எதிர்க்கட்சிகள் எல்லோரும் இணைந்து குழந்தையை விரைவில் கண்டறியுங்கள் என்று காவல்துறைக்குக் கோரிக்கை வைத்தால், காவல் நிலையத்தில் இன்று யாகம் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள். இதுதான் இந்த ஆட்சியின் இலட்சணம்.

6 மாதத்தில் 9 லாக்கப் மரணங்கள்

இந்த ஆட்சி அமைந்த ஆறு மாதத்தில் 9 லாக்கப் மரணங்கள் நடந்துள்ளன. மதுரை செக்கானூரணி காவல் நிலையத்தில் ஓட்டுநர் பாலகிருஷ்ணன் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். ஆனால், அவர் தற்கொலை செய்து கொண்டார் என அரசு பொய் சொல்லியுள்ளது. இப்போது அந்த விஷயத்தில் காவலர்கள் மீது வழக்குப் போட வேண்டும் என்று நீதிமன்றம் அரசுக்குக் குட்டு வைத்துள்ளது.

போதைப்பொருள் கடத்தலில் ஆளுங்கட்சி நிர்வாகிகள்

அதுமட்டுமல்ல, போதைப்பொருள் விஷயத்தில் இந்த அரசு மிக மோசமான நிலையைக் கடைப்பிடித்து வருகிறது. அனைத்துப் போதைப்பொருள் கடத்தல் வழக்கிலும் ஆளும் கட்சி எம்.எல்.ஏ-க்கள்தான் மாட்டுகிறார்கள். ஏற்கனவே அமைச்சர் ‘பவுடர்’ சரத் பொதுவெளியில் ஐ.பி.எல் போட்டியில் எப்படிப் பவுடர் போட்டார் எனச் சமூக வலைதளங்களில் பரவியதை எப்படித் திசைதிருப்பினார்கள் என்பது உங்களுக்குத் தெரியும். அவர் மீது இதுவரை எந்த நடவடிக்கையும் இல்லை; இன்றும் அவர் அமைச்சராக இருக்கிறார். நாகப்பட்டினத்தில் ஆளும் கட்சியின் நிர்வாகி பூபாலன் மெத்தம்பெட்டமைன் போதைப்பொருள் கடத்தியுள்ளார். சென்னையில் 700 கோடி ரூபாய் மதிப்புள்ள ஹெராயின் பிடிபட்டுள்ளது. அதையும் இங்கு இருக்கும் மாநிலக் காவல்துறை பிடிக்கவில்லை;வருவாய் புலனாய்வு இயக்குநரகம்தான் (DRI) தான் கைப்பற்றியுள்ளது. இதற்குப் பின் மிகப்பெரிய ஆளும் கட்சியைச் சேர்ந்த நெட்வொர்க் உள்ளது.

டிஜிபி, தலைமைச் செயலாளரை அழைத்து விசாரிக்க வேண்டும்

இதையெல்லாம் ஆளுநரிடம் மனுவாக அளித்துள்ளோம். இதை உடனடியாக சி.பி.ஐ-க்கு மாற்ற வேண்டும் என்று தெரிவித்துள்ளோம். டி.ஜி.பி-யையும் தலைமைச் செயலாளரையும் வரவழைத்து நீங்கள் விளக்கம் கேட்க வேண்டும் என்று ஆளுநரிடம் திராவிட முன்னேற்றக் கழகம் சார்பாக, தமிழக மக்கள் சார்பாகக் கோரிக்கையை வைத்துள்ளோம். ஆளும் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுவது குறித்து அமலாக்கத்துறை விசாரிக்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளோம்.” என்றார்.

ஆளுநர் மீது நம்பிக்கை இருக்கிறதா?

செய்தியாளர்: ஏற்கெனவே குதிரை பேரம் தொடர்பாக திமுக சார்பில் ஆளுநரிடம் மனு கொடுத்திருந்தீர்கள். மீண்டும் இப்போதும் மனு கொடுத்திருக்கிறீர்கள். ஆளுநர் எந்த விவகாரத்திலும் தவெக அரசு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே? நீங்கள் சட்டமன்றத்தில் கேட்டாலும் பதில் இல்லை. ஆளுநரிடமும் மனு கொடுக்கிறீர்கள். எதுவுமே நடக்கவில்லை. அடுத்தகட்டமாக என்ன செய்யப் போகிறீர்கள்? உண்மையிலேயே ஆளுநர் விஜய்யை அழைத்து விசாரிப்பார் என்று நம்புகிறீர்களா?

உதயநிதி ஸ்டாலின்: ஆளுநர் அழைத்து விசாரிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. அதனால்தான் அவரிடம் மனு கொடுத்திருக்கிறோம்.

எங்கேயுமே சரியான பதில் கிடைக்கவில்லை என்றால், சரியான நடவடிக்கை எடுக்கவில்லை என்றால், கடைசியில் தமிழ்நாட்டு மக்களிடம்தான் நாங்கள் இதைக் கொண்டு சென்று முறையிட முடியும்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தவெக அரசின் இரட்டை வேடம்

செய்தியாளர்: கடந்த ஆட்சியைவிடத் திருப்பரங்குன்றம் சர்வே தூண் விவகாரத்தை விஜய் அரசு சிறப்பாகக் கையாண்டதாக அமைச்சர் வன்னியரசு சொல்கிறார். ஆனால், உச்சநீதிமன்றத்தில் அறங்காவலர் குழு அனுமதி அளிக்கவில்லை, நாங்கள் கடைசி வரைக்கும் தீபம் ஏற்றத் தயாராக இருந்தோம் என்று கூறி விஜய் அரசு மன்னிப்புக் கேட்டிருக்கிறது. அதுபற்றி உங்களுடைய கருத்து என்ன?

உதயநிதி ஸ்டாலின்: இதிலேயே அவர்களுடைய இரட்டை வேடம் உங்களுக்குப் புரிந்திருக்கும்.

சென்ற வருடம் இதே பிரச்சினை வரும்போது திராவிட முன்னேற்றக் கழக அரசு, ஒரு திராவிட மாடல் அரசு, எங்களுடைய முதலமைச்சர் எவ்வளவு துணிவோடு எதிர்த்து, ‘I will face the consequence’ (விளைவுகளை நான் எதிர்கொள்வேன்) என்று எதிர்த்து நின்றார்.

எந்தவிதமான மத மோதல்களும் வந்துவிடக்கூடாது, மத நல்லிணக்கத்தைக் காப்பாற்ற வேண்டும் என்று துணிந்து நின்றது எங்களுடைய அரசு.

எங்களுடைய அரசு செய்ததைத்தான் இந்த அரசு ‘டபுள் ஆக்டிங்’ மாதிரி வேடம் போட்டு செய்திருக்கிறது. நாங்கள் துணிவாகச் செய்தோம்.

ஆனால், இன்றைக்கு இருக்கக்கூடிய இந்த அரசு, அவர்களுடன் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகள்… ஏனென்றால் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடையாது. எண்ணிக்கை கிடையாது. ஒரு நாள் 108, ஒரு நாள் 107, ஒரு நாள் 106 என்று இப்படியே குறைந்துகொண்டே இருக்கிறது.

அதனால் அவர்களுடன் இருக்கக்கூடிய கூட்டணிக் கட்சிகளான விசிக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் எல்லாம் இதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் இந்த வேடத்தை ‘டபுள் ஆக்டிங்’ மாதிரி போட்டிருக்கிறார்கள்.

இந்த அரசு மக்களிடமும், எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்க வேண்டும். முதலமைச்சரே மக்களிடம் வெளிப்படையாக மன்னிப்புக் கேட்டுத்தான் ஆக வேண்டும்.

இவ்வாறு உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Pandeeswari Gurusamy

ஊடகத்துறையில் கடந்த 2010-ஆம் ஆண்டு முதல் பணியாற்றி வரும் பாண்டீஸ்வரி குருசாமி, 'தீக்கதிர்' நாளிதழ் & இணையதளம் மற்றும் 'இந்துஸ்தான் டைம்ஸ் தமிழ்' ஆகிய நிறுவனங்களில் பணியாற்றியவர்.

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel