சென்னை எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் ரூ.4,288.26 கோடி மதிப்பீட்டில் 2-வது சரக்குப் பெட்டக முனையத்தை அமைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு நேற்று (நவம்பர் 25) ஒப்புதல் அளித்துள்ளது.
டெல்லியில் நேற்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்துக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமைச்சரவையில் எடுக்கப்பட்ட முக்கிய முடிவுகளை அறிவித்தார்.
இதில் தமிழகத்தின் எண்ணூர் காமராஜர் துறைமுகத்தில் 2-வது சரக்குப் பெட்டக முனையம் அமைக்கும் திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இத்திட்டம் தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பில் இடம்பெற்றுள்ள முக்கிய விவரங்கள்:
ரூ.4,288 கோடி முதலீடு
பொது- தனியார் கூட்டாண்மை முறையில் 2 கட்டங்களாக இத்திட்டம் செயல்படுத்தப்படும். முதல் கட்டத்திற்கு ரூ.2,429.32 கோடியும், 2-வது கட்டத்திற்கு ரூ.1,858.94 கோடியும் செலவிடப்படும்.
சர்வதேச அளவிலான திறந்த ஒப்பந்தப்புள்ளி மூலம் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனம் இந்த முதலீட்டை மேற்கொள்ளும். மேலும், கடல் பகுதியை ஆழப்படுத்துவதற்கான தூர்வாரும் பணிகளுக்கு ரூ.450 கோடியை காமராஜர் துறைமுக நிறுவனம் தனியாகச் செலவிடும்.
பிரமாண்ட சரக்குக் கப்பல்கள்
புதிய சரக்குப் பெட்டக முனையம் 900 மீட்டர் நீளம், 30 மீட்டர் அகலம் கொண்டதாக அமைக்கப்படும். 400 மீட்டர் நீளமும், 18 மீட்டர் வரை நீரில் மூழ்கியிருக்கும் பகுதியும் கொண்ட பிரமாண்ட சரக்குக் கப்பல்களை இம்முனையத்தில் கையாள முடியும். ஆண்டுக்கு 20 லட்சம் 20 அடி நீள சரக்குப் பெட்டகங்களுக்குச் சமமான கொள்ளளவைக் கையாளும் திறன் கொண்டதாக இந்தப் புதிய முனையம் அமைக்கப்படும்.
40 ஆண்டுகள் ஒப்பந்தம்
இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேர்வு செய்யப்படும் தனியார் நிறுவனத்துக்கு கட்டுமானக் காலம் உட்பட 40 ஆண்டுகளுக்கு ஒப்பந்த உரிமை வழங்கப்படும். ஒப்பந்தம் வழங்கப்பட்டதில் இருந்து 24 மாதங்களில் முதல் கட்டப் பணிகள் நிறைவடையும். 25-வது மாதத்தில் வர்த்தகப் பயன்பாட்டுக்கு முனையம் கொண்டுவரப்படும். இதன் மூலம் ஆண்டுக்கு 11 லட்சம் டிஈயு அலகுகளைக் கையாள முடியும்.
49-வது மாதம் முதல் புதிய முனையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வரும். முனையத்தைப் பயன்படுத்துவோரிடம் வசூலிக்கப்படும் கட்டணங்கள் மூலம் தனியார் நிறுவனம் தனது முதலீட்டைத் திரும்பப் பெறும்.
தமிழக தொழில் துறைக்குப் பயன்
சென்னை- எண்ணூர் தொழில் மண்டலம் மற்றும் தென்னிந்தியாவின் பிற பகுதிகளில் அதிகரித்து வரும் ஏற்றுமதி, இறக்குமதி தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
வாகனங்கள், வாகன உதிரிபாகங்கள், பொறியியல் பொருட்கள், மின்னணுப் பொருட்கள், ரசாயனப் பொருட்கள் உள்ளிட்டவற்றின் ஏற்றுமதி, இறக்குமதிக்கு இத்திட்டம் பயனுள்ளதாக அமையும். சர்வதேச சரக்குக் கப்பல்கள் நேரடியாக எண்ணூர் துறைமுகத்துக்கு வந்து செல்லும் வாய்ப்பு அதிகரிக்கும். வெளிநாட்டு ஆழ்கடல் துறைமுகங்களைச் சார்ந்திருப்பதும், சரக்குப் போக்குவரத்துச் செலவுகளும் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வேலைவாய்ப்புகள்
புதிய சரக்குப் பெட்டக முனையத்தின் கட்டுமானப் பணிகளின்போது நேரடியாகவும் மறைமுகமாகவும் சுமார் 750 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும். முனையம் செயல்பாட்டுக்கு வந்த பின்னர் சுமார் 800 பேருக்குக் கூடுதல் வேலைவாய்ப்பு உருவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. தமிழ்நாடு மட்டுமின்றி கர்நாடகா மாநிலம், ஆந்திரா, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களின் தொழில் நிறுவனங்களும் இத்திட்டத்தால் பயனடையும்.
காமராஜர் துறைமுகத்தின் தற்போதைய நிலை
முன்னர் எண்ணூர் துறைமுகம் என அழைக்கப்பட்ட காமராஜர் துறைமுகம், இந்தியாவின் 12 பெரிய துறைமுகங்களில் ஒன்றாகும். இது சென்னை துறைமுக ஆணையத்தின் முழு உரிமையின் கீழ் செயல்பட்டு வருகிறது.
2025-26 நிதியாண்டில் காமராஜர் துறைமுகத்தில் 4.90 கோடி டன் சரக்குகள் கையாளப்பட்டுள்ளன. 1,008 கப்பல்கள் வந்து சென்றுள்ளன. கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் சரக்குப் பெட்டகப் போக்குவரத்தின் கூட்டு ஆண்டு வளர்ச்சி விகிதம் 7% ஆக உள்ள நிலையில், காமராஜர் துறைமுகத்தில் இந்த வளர்ச்சி 9.9% ஆக உள்ளது. 2025-26 நிதியாண்டில் காமராஜர் துறைமுகம் ரூ.1,280 கோடி வருவாயையும், வரிக்கு முந்தைய லாபமாக ரூ.924 கோடியையும் ஈட்டியுள்ளது.
புதிய சரக்குப் பெட்டக முனையம் முழுமையாகச் செயல்பாட்டுக்கு வந்தால் காமராஜர் துறைமுகத்தின் சரக்குப் பெட்டகங்களைக் கையாளும் ஆண்டுத் திறன் அதிகரிக்கும்.









