ஹோட்டல் சுவையில் மொறுமொறு உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல்! எண்ணெய் குடிக்காம வர 6 சமையல் ரகசியம்

By Minnambalam Desk

|

Published on 26 Nov 2026, 6:30 AM

பருப்பு சாதம், எலுமிச்சை சாதம், ரசம் சாதம் என்று எதுவானாலும் தொட்டுக்கொள்ள மொறுமொறு வறுவல் இருந்தால் சாப்பாடே தனி ருசிதான். ஆனால் வீட்டில் செய்யும்போது உருளைக்கிழங்கு, வாழைக்காய் வறுவல் எண்ணெயில் ஊறி, மெத்தென்று ஆகிவிடுவது பல வீடுகளில் நடக்கும் கதை. சில நேரம் வெட்டிய காய்கறியின் நிறமும் மாறிவிடும். சில எளிய நுணுக்கங்கள் தெரிந்தால் இந்தத் தொல்லை இருக்காது.

வெட்டியதும் தண்ணீரில் போடுங்கள்

வாழைக்காய், உருளைக்கிழங்கை ஒரே அளவில் மெல்லிய துண்டுகளாக நறுக்குங்கள். உடனே உப்புத் தண்ணீரில் பத்து நிமிடம் ஊறவைத்து, அலசிவிடுங்கள். வாழைக்காய் கருப்பாகாமல் இருக்க, மஞ்சள் கலந்த தண்ணீரோ சில துளி எலுமிச்சைச் சாறோ சேர்க்கலாம்.

ADVERTISEMENT

ஈரம் இருக்கவே கூடாது

அலசிய காய்கறிகளைச் சுத்தமான துணியில் பரப்பி, தண்ணீர் முழுக்கத் துடைத்து உலர்த்துங்கள். ஈரம் இருந்தால் எண்ணெயில் போட்டதும் மொறுமொறுப்பாக வறுபடாமல், வெந்து மெத்தென்று ஆகிவிடும்.

கொஞ்சமாகப் போட்டு வறுங்கள்

ஒரே நேரத்தில் எல்லாத் துண்டுகளையும் கொட்டாமல், கொஞ்சம் கொஞ்சமாகப் போட்டு வறுங்கள். அப்போதுதான் எண்ணெயின் சூடு குறையாமல் மொறுமொறுப்பு கிடைக்கும்.

ADVERTISEMENT

வாழைக்காய், உருளைக்கிழங்குக்கு மாவு ரகசியம்

வாழைக்காய் வறுவலுக்கு மிளகாய்த்தூள், மஞ்சள்தூள், உப்போடு ஒரு டேபிள்ஸ்பூன் அரிசி மாவு, ஒரு டீஸ்பூன் சோள மாவு சேர்த்துக் கலக்கலாம். உருளைக்கிழங்குக்கு அரிசி மாவோடு கொஞ்சம் மல்லித்தூளும் சேர்க்கலாம். வெளிப்புறம் மொறுமொறுப்பாக வர இது உதவும்.

ADVERTISEMENT

சேனைக்கிழங்கு வறுவல்

சேனைக்கிழங்கைச் சின்னத் துண்டுகளாக நறுக்கி, மஞ்சள், உப்புக் கலந்த தண்ணீரில் அரை வேக்காடாக வேகவையுங்கள். தண்ணீரை வடித்து, மிளகாய்த்தூள், மல்லித்தூள், அரிசி மாவு சேர்த்து, மிதமான தீயில் வறுத்தெடுங்கள்.

கடைசியில் இதையும் செய்யுங்கள்

எண்ணெய் சரியான சூட்டில் இருக்க வேண்டும். வறுத்ததும் மூடி வைக்காமல் அகலமான பாத்திரத்தில் பரப்பி வையுங்கள். மூடினால் ஆவி சேர்ந்து மொறுமொறுப்பு போய்விடும். இந்தச் சின்ன மாற்றங்களே வீட்டு வறுவலையும் ஹோட்டல் ஸ்டைலில் மாற்றிவிடும்.

உண்மையின் மூச்சு உங்கள் விரலில்

மின்னம்பலம் மக்களுக்கான தனது சமரசமற்ற செய்திப் பணியைத் தொடர்ந்திட துணை நில்லுங்கள்.

Minnambalam Desk

செய்திகளை உடனுக்குடன் பெற மின்னம்பலம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்!

Join Our Channel