கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை புகார் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தக் கோரி ஆளுநர் அர்லேகரை எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று (நவம்பர் 26) சந்தித்து மனு அளித்தார்.
கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச மெசேஜ்களை அனுப்பியதாக தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரத்தில் அருள் விக்னேஷை உடனடியாகக் கைது செய்ய வலியுறுத்தி தமிழக டிஜிபியிடம் நேற்று உதயநிதி ஸ்டாலின் புகார் மனு அளித்தார்.
மேலும், பெண் அதிகாரி கடந்த ஜூலை 31-ந் தேதியே புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத தலைமைச் செயலாளர் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
அத்துடன் மனு அளிக்க வந்த ஒருவரைத் தாக்கியதாக சட்டப்பேரவை துணை சபாநாயகர் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரியிருந்தார்.

இந்த நிலையில் இன்று ஆளுநரை உதயநிதி ஸ்டாலின் சந்தித்தார். இந்த சந்திப்பின் போது பாலியல் தொல்லை கொடுத்த சர்ச்சையில் சிக்கி இருக்கும் கள்ளக்குறிச்சி தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ், மனு கொடுக்க வந்தவரை தாக்கிய தமிழக சட்டசபை துணை சபாநாயகர் ரவிசங்கர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஆளுநர் அர்லேகரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தி மனு கொடுத்தார். மேலும், தவெக எம்.எல்.ஏ. அருள் விக்னேஷ் மீதான பாலியல் தொல்லை வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்றும் ஆளுநரிடம் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.









