விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே மாயமான சிறுமியைக் கண்டுபிடிக்க வேண்டி சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் யாகம் நடத்திய காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ஆலம்பூண்டி ஊராட்சிக்குட்பட்ட நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வடிவேலு- பவானி தம்பதியின் மகள் ஹேமலதா. கடந்த அக்டோபர் 11-ந் தேதி ஹேமலதாவின் பிறந்தநாளை குடும்பத்தினர் கேக் வெட்டிக் கொண்டாடினர். மறுநாள் அக்டோபர் 12-ந் தேதி அதிகாலை வீட்டில் பெற்றோருடன் தூங்கிக் கொண்டிருந்த சிறுமி ஹேமலதா திடீரென மாயமானார்.
இது தொடர்பாக சிறுமியின் தாயார் பவானி அளித்த புகாரின் பேரில் சத்தியமங்கலம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினர். 7 தனிப்படைகள் அமைக்கப்பட்டு சிறுமியைத் தேடும் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. மோப்ப நாய்கள், ட்ரோன்கள் உதவியுடன் மலைப் பகுதிகள், வனப் பகுதிகளில் தேடுதல் பணிகள் மேற்கொள்ளப்பட்டும் சிறுமியைக் கண்டுபிடிக்க முடியவில்லை. இதனையடுத்து அக்டோபர் 21-ந் தேதி சிறுமி மாயமான வழக்கு சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டது.
சிறுமியின் பெற்றோர், உறவினர்கள், பிறந்தநாள் விழாவில் பங்கேற்றவர்கள், பள்ளி ஆசிரியர்கள், கிராம மக்கள் என பல்வேறு தரப்பினரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தினர்.
இதனிடையே சத்தியமங்கலம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் மனித எலும்புக்கூடு கண்டெடுக்கப்பட்டது, விவசாயக் கிணற்றில் அழுகிய நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்டது என அடுத்தடுத்து சம்பவங்கள் நிகழ்ந்தன.
இந்தப் பின்னணியில்தான் கடந்த வாரம் சத்தியமங்கலம் காவல் நிலையத்திலேயே யாக குண்டம் அமைத்து கணபதி ஹோமம் நடத்தினார் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு. காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு தமது மனைவியுடன் இந்த யாகத்தில் பங்கேற்றார். சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றும் போலீசாரும் இதில் கலந்து கொண்டனர்.
மாயமான சிறுமி கிடைக்க வேண்டும்; அடுத்தடுத்து நடைபெறும் அசம்பாவித சம்பவங்கள் முடிவுக்கு வர வேண்டும் என்பதற்காக இந்த யாகம் நடத்தப்பட்டதாகக் கூறப்பட்டது.
காவல் நிலையத்திலேயே போலீசார் யாகம் நடத்திய வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இந்த நிலையில்தான் சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் சுரேஷ்பாபு ஆயுதப்படைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
சிறுமி ஹேமலதா மாயமாகி இன்றுடன் 45 நாட்கள் கடந்துவிட்ட நிலையிலும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை. சிறுமி மாயமான வழக்கின் மர்மமும் இன்னமும் விலகவில்லை.









